நாடு முழுவதும் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக தகவல்!

நாடு முழுவதிலும் உள்ள மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் தற்போது 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய இன்று செவ்வாய்க்கிழமை (21) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், தேசிய பாடசாலைகளில் 1,501 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் 4,630 வெற்றிடங்கள்

தென் மாகாணத்தில் 2,513 வெற்றிடங்கள்

மத்திய மாகாணத்தில் 6,318 வெற்றிடங்கள்

வடமேல் மாகாணத்தில் 2,990 வெற்றிடங்கள்

ஊவா மாகாணத்தில் 2,780 வெற்றிடங்கள்

வடமத்திய மாகாணத்தில் 1,568 வெற்றிடங்கள்

கிழக்கு மாகாணத்தில் 6,613 வெற்றிடங்கள்

சப்ரகமுவ மாகாணத்தில் 3,994 வெற்றிடங்கள்

வட மாகாணத்தில் 3,271 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள தேசியப் பாடசாலைகளில் அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் பாடங்களுக்கும் ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

க.பொ.த. உயர்தரப் பட்டதாரி ஆசிரியர்களை வெற்றிடங்களுக்கு நிரப்புவதற்காக, 2024 ஜூலை 28ஆம் திகதி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இலங்கை கற்பித்தல் சேவையின் தரம் 3 (பி) 1ஐச் சேர்ந்த 353 பட்டதாரி ஆசிரியர்கள், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், கற்பித்தல் சேவையில் மீதமுள்ள வெற்றிடங்களை விரைவாக நிரப்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க பிரதமரது செயலாளரின் தலைமையில் நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு மறுஆய்வுக் குழுவிடம் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.