நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களை சிங்களக்கட்சிகள் உள்வாங்குவது ஆபத்தா? – பேராசிரியர் இராமு மணிவண்ணன்

கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாகியுள்ள நிலையில், தற்போது 10ஆவது  நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் இந்த நாடாளுமன்றத்தேர்தலில் என்ன முடிவை எடுத்து போட்டியிடப் போகின்றன என்பது குறித்து பல்வேறு கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களை சிங்களக்கட்சிகள் உள்வாங்கும் எனவும் பேசப்படுகின்றது. இது தொடர்பில்  சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் இராமு மணிவண்ணன் அவர்களின் கருத்து….

இலங்கையில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலை  முன்னிட்டு  தமிழ் மக்கள், எத்தகைய ஒரு உள்வாங்குதல் அதோடு இந்த தேர்தலை அவர்கள் பார்க்கின்ற  விதம், அது மட்டுமல்லாமல்  இந்த தேர்தலின் ஊடாக எத்தகைய ஒரு அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம் என்பது முக்கியமாக பார்க்க வேண்டும்.

01- என்னுடைய பார்வையைப்பொறுத்தமட்டில்,   ஈழத் தமிழர்களுக்கான ஒரு தலையாய பிரதிநிதித்துவம் இல்லாத வரையில், இந்த நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் சரி தமிழ் மக்களுடைய உணர்வுகளையும் அவர்களுடைய உரிமைகளையும் புரிந்து கொள்ளத்தக்க பிரதிநிதிகள் இல்லாத வரையில், இந்த நாடாளுமன்றத் தேர்தல் என்பது கடந்த தேர்தல்களைப் போலத்தான் இது கடந்து செல்லும்.

02- இன்றைய சூழலில் வடக்கு கிழக்கு என்று பரவலாக உள்ள தமிழ்க்கட்சிகளில் மக்களுடைய உணர்வுகளை பிரதிபலிக்கின்ற பிரதி நிதிகள் இல்லை. அண்மையில் மூன்று வருடங்களுக்கு முன்பு என்று சொல்லக்கூடிய ஒரு காலகட்டத்தில்    மிகப்பெரிய ஒரு விரிசலையும் அதோடு மட்டுமல்லாமல்  தமிழ் அரசியல் கட்டமைப்புகள் என்பது  சிறிது சிறிதாக விலகிச் சென்று கொண்டிருக்கின்றதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

கடந்த காலத்தில்  தமிழ் அமைப்புகள், தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒன்றாக செயற்பட்டன என்றுநான் சொல்லவில்லை. ஒரு அரசியல் ரீதியான தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒரு கூட்டமைப்பு இருந்த காலத்திலும் கூட ஒருமாற்றுக் கருத்துக்களும் மாற்று அரசியல் சக்திகளும் இயங்கியது  என்பது வரலாற்று உண்மை.  ஆனால் அத்தகைய ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பில் கூட தற்போது ஒருங்கிணைந்த பார்வை என்பது இல்லாமல் இருக்கும் பொழுது, எவ்வாறு இந்த நாடாளுமன்ற தேர்தல் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களுடைய கருத்துக்களையும் அவர்களுடைய உணர்வுகள், உரிமைகளை அவதானிக்கக்கூடிய பிரதி நிதிகள், கட்சிகள் செயல்பட முடியும் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

03- இலங்கையில் இருக்கின்ற பெரும்பான்மைக் கட்சிகள் ஒரு கூட்டணி அமைத்து அதன் ரீதியாக தமிழ் பிரதிநிதிகளை உள்வாங்கக் கூடும். கூட்டணி என்று சொல்லும்பொழுது, கூட்டணி கட்சிகளான தமிழ் தேசியகூட்டமைப்பிலேயே இருந்து பிரிந்து சென்ற பல அமைப்புகளாக இருக்கலாம். அதேபோல் பல முக்கியமானதலைவர்களாக இருக்கலாம்.   அவ்வாறானவர்களை   தங்களுடைய கூட்டணியில் அழைத்துக்கொள்ளுதல் அல்லது ஒரு ஒப்பந்தம்  அதாவது தேர்தல் ரீதியான சமரச உடன்படிக்கைகளை மேற்கொண்டு  அதன் ரீதியாக தேர்தலை சந்திப்பது போன்ற செயற்பாட்டை செய்யலாம்.

இவ்வாறான ஒரு நிலை, சிங்கள பெரும்பான்மை சார்ந்த கட்சிகளுக்குத்தான் சாதகமாக போகுமே ஒழிய, அது தமிழ் அமைப்புகளுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் அல்லது தமிழ் தலைவர்களுக்கும் இது மிகப்பெரிய ஒரு வெற்றியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.  ஆதலால் இலங்கை அரசியலில் நடந்திருப்பது மிகப்பெரிய ஒரு மாற்றம். ஜேவிபி என்ற ஒரு அமைப்பின் சார்பாக அனுராக் குமார் திசநாயக்க அவர்கள்  ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். ஜேவிபி மக்கள் தளத்தில் ஒரு வலிமையான சக்தியாகவும் இயக்கமாகவும் திரும்பவும் அவர்கள் வந்திருப்பது ஒரு பாராளுமன்ற அரசியல் ரீதியாக  கவனிக்கப்பட வேண்டியது. அதே சமயத்தில் இலங்கையின் எதிர்க்கட்சிகளான சஜித் பிரேமதாசா போன்றவர்கள்  தலைமையிலான கட்சிகள் கூட தமிழ் மக்களிடையே கடந்த ஜனாதிபதி தேர்தலில் மிகப் பிரதானமான வாக்குகளை பெற்றிருந்த ஒரு சூழலில் சஜித் கட்சி மற்றும் அவர்களை சார்ந்த ஒரு அமைப்புகள் பெருமளவிற்கு ஈழத் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் ஒரு கூட்டணி அல்லது அரசியல் தேர்தல் களத்தில் ஒரு உடன்படிக்கை மேற்கொண்டு அதன் ரீதியாக பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று நான் நினைக்கின்றேன். இது வந்து தமிழர்களுடைய பிரதிநிதித்துவம் என்று சஜித் பிரேமதாசா கட்சியின் ஊடாக இருப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. அதேபோல் தமிழ் மக்கள், ஜேவிபிக்கு  உடனடியாக   பெருமளவிற்கோ அல்லது ஒரு சாதாரண சூழலில்சென்று அவர்களோடு இணைவதும் இணைந்து அவர்களுடைய தேர்தல் களத்தில் இருப்பதும்   இன்றைக்கு அதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவாக இருக்கின்றன.

04-  மக்கள் தளத்தில் ஒரு தேர்தல் அரசியல் என்பதை சொல்லும் பொழுது, நாம் இப்பொழுது கூட ஒரு சிதறிய தேங்காய் துண்டுகளாகத்தான் அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்றோம். ஆதலால் இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்று அல்லது அதையும் கடந்து ஒரு தேசிய கூட்டமைப்பு, ஈழத்தமிழர் தேசிய கூட்டமைப்புக்கான கட்சிகளை ஒருங்கிணைத்து  அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய ஒரு பிரதான கட்சியை உருவாக்க வேண்டும், தமிழ் அமைப்புகளைப் பொறுத்தவரையில் குறைந்தபட்ச உடன்படிக்கை, அதாவது குறைந்தபட்ச உடன்படிக்கை என்பது 13வது சட்ட திருத்திருத்தம் வேண்டுமா? தனிநாடு வேண்டுமா?   அதற்கான சாத்தியக் கூறுகள் என்ன? அல்லது   இப்பொழுது  அரசியல் உடன்படிக்கையின் படி  அதிகார பகிர்வுகளை ஏற்றுக்கொள்ளலாமா? இத்தகைய ஒரு குறிப்பிட்ட அடிப்படையான கருத்துக்களை மையமாகக் கொண்டு ஒரு உடன்படிக்கை ஏற்படுமேயானால் தமிழ்கட்சிகளுக்கு அதை   தனித்துவம் பெறத்தக்க ஒரு பாதையை உருவாக்கிக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

மக்களை பொறுத்தவரையில் இந்த கட்சிகளையும் தலைவர்களையும் பிரதானமான வேட்பாளர்களையும் கலந்து மக்கள் மத்தியில் இருக்கின்ற கருத்துக்களுக்கு அதை வெளிப்படுத்தக்கூடிய திறன் வாய்ந்த அமைப்புகள் கிடையாது என்று தான் நான் நினைக்கின்றேன்.