நளினியின் பிணை நீடிப்பு இரத்தானது

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினியின் பிணையை மீண்டும் நீடிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

ராஜீவ் காந்தி கடந்த 1991 மே 21ஆம் திகதி சென்னையை அடுத்துள்ள சிறிபெரும்புத்தூரில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அந்த கொலை வழக்கில் ஏழுபேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவரான நளினி தனது மகளின் திருமணத்திற்காக ஆறு மாத பிணை கோரி கடந்த பெப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்திருந்தார். அரசாங்கம் விடுக்கும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையில் கடந்த ஜுலை 25ஆம் திகதி நளினி பிணையில் வெளி வந்தார்.

இந்த பிணை காலம் முடிவுற இருக்கும் போது, மேலும் பிணைக் காலத்தை நீடிக்கும்படி நளினி மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கமைவாக இவரின் பிணைக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது.

தனது மகளின் திருமண வேலைகள் முடிவடையாமையால் தனது பிணைக்காலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க வேண்டும் என கோரி நளினி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே நளினிக்கு 7 வாரங்கள் பிணை வழங்கியுள்ளதாகவும், எனவே இனியும் பிணையை நீடிக்க முடியாதெனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

நளினியின் பிணை எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 6 மணியுடன் முடிவடையவுள்ளது.