‘நாளை மறுதினம் (04) இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதன்போது கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் ஒப்பந்தத்தின் நிறைவில் அறிவிக்கப்படும்’ என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து இந்த விடயம் தொடர்பில் அவரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது வலுசக்தி, சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவித்தார்.
‘நாளை மறுதினம் இலங்கைக்கு வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன’ என்றும் அவர் குறிப்பிட்டார்.’இந்த கலந்துரையாடலை தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் விசேட உரை நிகழ்த்தப்படும்’. ‘அத்துடன் அவரின் இலங்கை விஜயத்தின் போது கைச்சாத்திடப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் தொடர்பான தகவல்கள் இடைக்கிடையே வழங்கப்படும்’ என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.