வவுனியா மாவட்டத்தில் ‘நமக்காக நாம்’ பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று (08) ஞாயிற்றுக்கிழமை சங்கு சின்னத்துக்கு ஆதரவு கோரி மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.
தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் மன்னார் வீதி, குருமன்காடு பகுதியில் உள்ள கலைமகள் சனசமூக நிலைய மைதானத்தில் இன்று ஆரம்பமான பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.
தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் சார்பில் அரசியல் கட்சித்தலைவர்ள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக உரையாற்றியிருந்தனர்.

இந்த நிலையில் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவான பொதுக்கூட்டத்தை ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேரடியாக பிரசன்னமாகி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆவரங்கால் பகுதியிலும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.






