தோ்தல் விடயங்களைக் கையாள்வதற்கு அமைச்சரவை உப குழு – ஜனாதிபதி ரணில் அமைத்தாா்

இவ்வருடம் தேர்தல் வருடமென்பதால் தேர்தல் விடயங்களை ஆராயும் அமைச்சரவைக் குழுவொன்று உடனடியாக இயங்குமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி இனிமேல் வாராந்தம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் தனியே தேர்தல் தொடர்பாக மட்டும் ஆராய விசேட அமைச்சரவைக் குழு கூடவுள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கு முன்னர் நிறைவேற்றப்படவேண்டிய அரசாங்கத்தின் திட்டங்கள் உட்பட்ட பல விடயங்களை இந்த அமைச்சர் குழு ஆராயும்.

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும். இவ்வாறான அமைச்சரவை விசேட குழு மேற்கத்தேய நாடுகளில் இருப்பதாக அமைச்சரவைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதன் முதலாவது கூட்டத்தையும் நேற்றுமுன்தினம் நடத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நிறைவுறுத்துமாறு இந்த கூட்டத்தில் வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி, ஆளுங்கட்சி பிரமுகர்கள் சொந்த தொகுதிகளில் அதிகளவு நேரத்தை செலவிடுமாறும் கேட்டுக்கொண்டார் என அறியமுடிந்தது.