தோ்தல்கள் தொடா்பில் ஜனாதிபதி தீா்மானிக்க முடியாது – ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியினால் தீர்மானிக்க முடியாது என்றும், இது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணியாகவே இருக்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து கூறியுள்ளது.

நேற்று வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்ற ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து இதனை கூறியுள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கையில், “சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை செயற்படுத்துவது தொடர்பான தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வரையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தன்னால் தீர்மானம் எடுக்கவோ, அது பற்றி கூறவோ மாட்டேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடிக்கடி கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் சில சட்டமூலங்களை நிறைவேற்றவுள்ளதாகவும் அதன்பின்னரே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தான் தீர்மானிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் நாங்கள் கூறுகையில், ஜனாதிபதிக்கு இந்த வியடத்தில் தலையிட முடியாது. தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கே இது தொடர்பான அதிகாரம் இருக்கின்றது என்பதனை குறிப்பிட்டுள்ளோம்.

அரசியலமைப்பில் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை விடுத்து ஜனாதிபதியினால் தினம் தொடர்பில் தீர்மானிக்க முடியாது. இதேவேளை உள்ளூராட்சி சபைகள் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இரத்துச் செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது மக்கள் பணத்தை வீணடிக்கும் செயலாகும். வாக்குச் சீட்டுக்களுக்காக பெருமளவு பணம் செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்பு மனுக்களை இரத்துச் செய்வது சிக்கலுக்குரியது” என்றும் அவா் தெரிவித்தாா்.