ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் கிடைத்த உடனேயே தாமதிக்காது தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான அறிவித்தலை வெளியிட வேண்டும் என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.
“இன்னும் 5 நாட்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தினத்தை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கவுள்ளது. ஆனால் இந்த நேரத்தில் நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடக்குமா? இல்லையா? என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணங்கள் உள்ளன” என்று தெரிவித்த பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவா் உதய கம்மன்பில, “ஜனாதிபதியின் கட்சி செயலாளர் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் 2 வருடங்களால் அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளார். அந்தக் கட்சியின் தவிசாளர் இன்னும் 2 வருடங்களுக்கு நாட்டை இந்த ஜனாதிபதியிடம் கையளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அத்துடன் தேர்தலை ஒத்தி வைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அனுபவங்கள் உள்ளன” என்றும் குறிப்பிட்டாா்.
தொடா்ந்தும் கருத்துத் தெரிவித்த பிவித்துறு ஹெல உறுமய கட்சித் தலைவா் உதய கம்மன்பில, “இதனால் மக்களுக்கு ஜனாதிபதித் தேர்தலுக்கும் முன்னர் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டது போன்று நடந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு முயற்சிக்கப்படுகின்றது” என்றும், “தேர்தல் தொடர்பில் அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இவ்வாறாக செய்திகள் வெளியாவது மக்களுக்கு சந்தேகங்களை ஏற்படுத்தும். 22 ஆவது திருத்தம் என்று கொண்டுவர முயற்சிப்பது அவசியமற்ற திருத்தமாகும்” என்றும் தெரிவித்தாா்.
“19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம் 6இல் இருந்து 5ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் செப்டம்பர் 17க்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்குள்ளும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்த பிவித்துறு ஹெல உறுமய கட்சித் தலைவா், “தோ்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைத்தாலும் தேர்தல் தொடர்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமக்கு அதிகாரம் கிடைத்த உடனே, முதல் இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எப்போது கோரப்படும் என்பதனை அறிவிக்க
வேண்டும். இதன்படி எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னர் விரைவாக தேர்தலுக்கான அறிவித்தலை வெளியிடும் என்று நம்புகின்றோம்” என்றும் உதய கம்மன்பில தெரிவித்தாா்.