தோ்தலை பகிஷ்கரித்து யாரையோ வெல்ல வைக்க முன்னணி முயற்சி – சித்தாா்த்தன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை தெரிவு செய்வதற்கு அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான புளொட்டின் தலைவர் த.சித்தார்த்தன்.

எதிர்வரும், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு பல கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆரம்பத்தில் இருந்தே எமது நிலைப்பாடும் இதுதான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் தமிழ்
பொது வேட்பாளர் விடயத்துக்கு ஆதரவாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

நிச்சயமாக தமிழ் அரசுக் கட்சியும் பொது வேட்பாளர் விடயத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும். இன்று அவர்கள் மத்தியில் பல பிரச்னைகள் இருந்தாலும் கட்சி பிளவுபட்டது போல தெரிந்தாலும் முக்கியத்துவம்மிக்க கட்சி தமிழ் அரசு கட்சி. அந்தக் கட்சி ஆதரவு நிலைப்பாட்டில் இணைய வேண்டும். இதேபோன்று க. வி. விக்னேஸ்வரன் எம். பியின் கட்சியும் இதில் சேர வேண்டும். விக்னேஸ்வரன் வேலன் சுவாமிகளை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால், அவர் ஒரு மதம் சார்ந்தவர். தமிழ் மக்களில் வேற்று மதத்தினரும் உள்ளனர். ஆதலால், அவரை பொது வேட்பாளராக நியமிப்பது பொருத்தமல்ல” என்றும் சித்தாா்த்தன் தெரிவித்தாா்.

தொடா்ந்தும் கருத்து வெளியிட்ட சித்தாா்த்தன், “கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை காங்கிரஸ் கட்சியும் இதில் இணைந்தால் நல்லது. அவர் நிச்சயமாக இணைவதற்கு தயாராகவில்லை. இதை ஒரு நாடகம் என்ற ரீதியிலே கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் யாரையோ வெல்ல வைப்பதற்கான முயற்சி. பகிஷ்கரிப்பு என்பதுவும் யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி என்றே நான் பார்ர்கின்றேன். பகிஷ்கரிப்பதன் மூலம் யாரோ ஒருவருக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்க முயற்சிக்கிறார்கள்” என்றும் சித்தாா்த்தன் சுட்டிக்காட்டினாா்.

2005 ஜனாதிபதித் தேர்தலிலும் பகிஷ்கரிப்பு மூலம் ஒருவரை தோற்கடித்து மற்றவரை வெல்ல வைக்கவே முயற்சிக்கப்பட்டது. அப்போது, ரணிலை தோற்கடித்து மகிந்தவை வெல்ல வைப்பது நல்லது என்ற அபிப்பிராயம் இருந்தது. இதனை கொள்கை ரீதியாக செயல்படுத்தினார்கள். இதேபோல, பகிஷ்கரிப்பதன் மூலம் யாரை வெல்ல வைக்க முயற்சிக்கிறார்கள் என்பதை அவர்கள் இன்னும் கூறவில்லை” என்றும் சித்தாா்த்தன் தெரிவித்தாா்.