தொல்பொருள் ஆலோசனைக் குழுவா? சிங்கள பௌத்த ஆலோசனைக் குழுவா? : பா. அரியநேத்திரன்

கடந்த 2025 நவம்பர் 01ஆம் திகதி புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொல்பொருளியல் ஆலோசனைக் குழு உருவாக் கப்பட்டுள்ளது. அதற்கான 19 பேர் அடங்கிய குழுவில் ஏனைய தேசிய இனங்களைச் சேர்ந்த   ஒருவரேனும் உள்ளடக்கப்படவில்லை. இந்த குழு வின் பெயரை சிங்கள பௌத்த ஆலோசனைக் குழு என பெயரை மாற்றுவதே மிகப் பொருத்தமாக அமையும் இது இனவாதத்தின் வெளிப்பாட்டை மீண்டும் நிருபித்துள்ளது.
அந்தக்குழுவில் உள்ளவர்:
1. ஶ்ரீ ரெத்னபால மகாநாயக்க தேரர்.
2. டொக்டர் ஶ்ரீ சுமங்கல நாயக்க தேரர்.
3. டொக்டர் கல்விம விமல ரெட்ண தேரர்.
4. பேராசிரியர் பி.எம். மண்டவெல
5. பேராசியர் சேனாரட்ண திசநாயக்க
6. பேராசிரியர் லலித் வீரசிங்க
7. பேராசிரியர் கருண்ரெட்ண ஹெற்றியாராசி.
8. பேராசியர் மங்கல கடுபொல்ல
9. பேராசிரியர் ஆர் எம் எம் சந்திராரெட்ண
10. பேராசிரியர் மாலிங்க அமரசிங்க
11. பேராசிரியர் ராஜ் சோமதேவ
12. பேராசிரியர் சமித மன்னவடு
13. டொக்டர் திருமதி றோசி சொலங்க ஆராச்சி
14. டொக்டர் திருமதி ஹரியாணி சத்துருசிங்க
15. டொக்டர் விஜயரெட்ண வோகின்கமாவுவ
16. டொக்டர் வி டீ நங்கடேவா
17. டொக்டர் ஹாமினிவிஜயசூரியா
18. டொக்டர் அருண் ராஷபக்‌ஷ
19. ஹீமானந்த குமார வாலச்சந்ரா
03 பௌத்த பிக்குகள் 15 பேராசிரியர்கள், இவர்களில் இரண்டு பெண்கள் 01  சாதாரண உறுப்பினர் தொல்பொருள் ஆய்வுத் திணைக் களத்திற்கு இந்த ஆலோசனைக் குழுவில் தமிழ், முஸ்லிம் மருந்துக்கு கூட எவருமில்லை.
புத்த சாசனம், மதம் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, தொல்பொருள் ஆய்வுத் திணைக் களத்துக்கான புதிய ஆலோசனைக் குழுவை நியமித்து விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.இந்த பெயர்கள் தெரிவு ஜனாதிபதி அனுரவுக்கும், ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கும் தெரியாமல் நடந்திராது என்பது உண்மை.
இதில் உள்ள பௌத்த துறவிகள் யார் என பார்த்தால் பொலன்னறுவை சொளொஸ்மஸ்தான ராஜமஹா விகாரையின் பிரதம விகாராதிபதியும், மஹா விகாரவம்ஷிக சியாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி மஹா விகாரைப் பிரிவின் அனுநாயக்க தேரருமான வண. வெண்டருவே தர்மகீர்த்தி ஸ்ரீ ரத்னபால உபாலி நாயக்க தேரர் அவர்கள் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தலின்படி, இந்தக் குழுவின் பதவிக்காலம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி முதல் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி வரை இரண்டு ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும். ஜனாதிபதி விரும்பினால் மேலும் ஆண்டுகளை நீடிக்கலாம்.
கடந்த காலங்களிலும் பௌத்த, சிங்கள அடிப்படையைக் கொண்ட தொல்பொருள் திணைக்களத்தினாலேயே தமிழ் பேசும் மக்கள் வாழும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய் வுகள் காரணமாக பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்கள் கைப்பற்றப்பட்ட, தமிழ், சைவ ஆலயங்கள் அமைந்திருந்த இடங்களும் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்கள் பௌத்த விகாரைகள் இருந்த இடங்களாக அபகரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக் கள் எழுந்திருந்தன.
“நாம் இலங்கையர்” என்ற தொனிப் பொருளில் எதிர்வரும் 2025, டிசம்பர்,12,13,14, முன்று தினங்களும் இலங்கையில் உள்ள சகல இனமக்களையும் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் மற்றும் மலையகமக்களையும், சகல மதங்களையும் பௌத்தம், இந்து, கத்தோலிக்க, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களையும் ஒரே மைதானத்தில் வரவழைத்து “நாம் இலங்கையர்” என்ற ஒரு நிகழ்வை நடத்த சகல இனமக்களும் இலங்கையர் என்ற சிந்தனையை ஊட்டும் மூளைச்சலவை நாடகமாக மூன்று நாட்கள் இந்த திருவிழா இடம்பெற தேசிய மக்கள் சக்தி அரசு திட்டம் இட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நாடகத்தில் சகல கலாசார, விளையாட்டு, உணவுப்பரிமாற்றம், சமயவணக்க நிகழ்வுகள், அனைத்திலும் இனமொழிமத பேதம் இன்றி நாம் இலங்கையர் ஒரே நாடு ஒரே தேசம் ஒரே மக்கள் என்ற உள் உணர்வை மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் பரப்பும் சமத்துவமான நிகழ்சியாக இது இடம்பெறப்போகின்றது.
நாம் இலங்கையர் என்று ஒருபக்கம் கூறியபடி கூத்துக்காட்டும் அதே வேளை, இந்த தொல்பொருளியல் ஆலோசனை குழுவில் “நாம் சிங்களவர்”  “நாம் பௌத்தர்கள்” என்பதையே இந்த நியமனம் மூலம் காட்டப்பட்டுள்ளது.
இந்த குழுவில் பெயருக்கு கூட ஒரு தமிழனும் இல்லை. இஸ்லாமியனும் இல்லை. இவ்வாறான இனவாத ஆட்சியாளர்களான தேசிய மக்கள் சக்தி அரசு “நாம் இலங்கையர்” என்ற  பதாகையை தொங்கவிட்டு அதில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் அழைப்பது எந்தவகையில் பொருந்தும். குறிப்பாக ஈழத்தமிழர்கள் கடந்த 77 ஆண்டுகளாக நாம் இலங்கையர் இல்லை என்ற நிலைப்பாட்டுக்கே கடந்த சிங்களத் தலைவர்கள் ஆட்சி செய்துள்ளனர். ஈழத்தமிழர்களுக்கு கைவிலங்கிட்டு அடிமைகளாக்கி உள்ளனர். அடிமை விலங்கை உடைக்கவே அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் போராடி தற்போது சர்வதேசம் நோக்கி இராஜதந்திர போராட்டத்தில் ஈழத்தமிழர்கள் இணைந்துள்ளனர்.
அரசியல் தீர்வை வழங்காமல் இராணுவ அடக்குமுறைகளை நிறுத்தாமல் களியாட்ட விழாவுக்கு “நாம் இலங்கையர்” என கூறி வடகிழக்கு தமிழர்களை அழைத்து  படம் காட்டி ஊடகத்தில் பிரசுரிப்பதால் மட்டும் நாம் இலங்கைய ராகி விட முடியாது. “நாம் ஈழத்தமிழர்” என்ற உணர்வுடனேயே ஈழத்தமிழர்கள் இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழ்கிறார்கள்.
தேசிய மக்கள் சக்தி அரசில் எண்ணக்கருவில் உள்ள சமதர்ம சமூகம் உருவாக வேண்டுமானால் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு சமஷ்டி அடிப்படையில் வழங்கினால் மட்டுமே இனத்துவ முரன்பாட்டுக்குள்  சிக்கித் தவிக்கும் தமிழ்த்தேசிய இனம் அதன் அபிலாசைகள்,ஏக்கங்கள் தீரும் என்பதை திசைகாட்டி அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த 3 தசாப்தங்களாக அதனை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. இனியாவது ஜனாதிபதி அனுரவின் தலைமையில் ஆட்சிசெய்யும் அரசாங்கம் புரிந்து கொள்வேண்டும். முக்கியமாக வடக்கு கிழக்கில் இருந்து தேசிய மக்கள் சக்தியில் தெரிவான 07 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை உணரவேண்டும்
கடந்த கால அரசாங்கங்கள், வடக்கு கிழக்கு தாயகத்தில் நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு, கலாசார மேலாதிக்கம் என்பற்றை நிறைவேற்ற தொல்பொருள் திணைக்களத்தையே கருவியாக  பயன்படுத்தினர் என்ற நிலைப்பாடு தமிழ்பேசும் மக்களிடையே ஆழ ஊடுருவியிருக்கிறது.
அவ்வாறான சூழலில் தொல்பொருள் குழுவில் இன அடிப்படையில் நாம் எவரையும் நியமிக்கவில்லை என்ற தத்துவத்தை மீண்டும் இனவாத அரசாக திசைகாட்டி அரசு நிருபித்து விட்டது.இந்த 19, பேரையும் நியமித்த பின்னர் யாரும் எதிர்த்தால் சாட்டுக்காக தவறை ஏற்று குழுவின் இனி 19 உடன் 21 ஆக தமிழர் ஒருவரை யும், முஸ்லிம் ஒருவரையும் நியமித்து சரி செய் தாலும் இந்த அரசின் உள்நோக்கத்தை அனைவரும் புரியலாம் இவ்வாறு சிலவேளை நியமித்தாலும் அது காலம் கடந்த ஞானமாகவே கருதப்படும்.
உண்மையில் இவ்வாறான தொல்பொருள் ஆய்வுக்கு குழு அமைப்பதானால் சிங்களவர் 10 பேரும் தமிழர் 06 பேரும் முஸ்லிம் 03 பேரும் இடம் பெற்றிருக்க வேண்டும்.இவ்வாறு பெயர்கள் இடம் பெற்றிருப்பின் இந்த குழுவை எவரும் விமர்சிக்க முடியாது ஆனால் இந்த குழு முழுக்க முழுக்க தொல்பொருள் ஆய்வு ஆலோசனைக்குழு என்பதை சிங்கள பௌத்த ஆலோசனைக்குழுவாகவே நோக்கவேண்டியுள் ளது.