தையிட்டி விகாரை விவகாரம்: வடக்கின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் கண்டனம்

தையிட்டி பகுதியில் மக்களுக்குரிய காணியில் சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டு வரும் திஸ்ஸ விகாரைக்கு வடமாகாணத்தின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் கண்டனம் வெளியிட்டுள்ளது. வடமாகாணத்தின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இன, மத சமத்துவத்தையும் மதங்களுக்கிடையிலான சகிப்புத்தன்மையையும் வளர்த்து பல்சமய கலாசாரத்தையும், நம்பிக்கையும் கொண்ட நாடாக கட்டியெழுப்பப்பட வேண்டிய நிலையில் அடக்குமுறையின் வடிவமாக, பொருத்தப்பாடற்ற, நீதிக்குப்புறம்பான, சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் தனியார் காணி அபகரிப்புக்கள் போன்றன முற்றாக நிறுத்தப்படவேண்டும்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இன, மத நல்லிணக்கத்தை வளர்த்து சமத்துவ உணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கமும் அரச அதிகாரத்தில் உள்ளவர்களும் செயற்பட வேண்டும்’ என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ‘இன, மத முரண்பாட்டை மீண்டும் ஏற்படுத்தாத வண்ணம் நீதி நிலைநாட்டப்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற வேண்டுகோளையும் விடுப்பதாக’ சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் ‘இந்த விடயம் விடயம் இதய சுத்தியோடும், பரந்துப்பட்ட எண்ணத்துடனும் கையாளப்பட வேண்டும்’ என்று வடமாகாணத்தின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் தெரிவித்துள்ளது.