தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு இழப்பீடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க தீர்மானம்!

தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் (12) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார் ‘தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர்த்து, அதனை சூழவுள்ள ஏனைய காணிகளை மாவட்ட செயலரிடம் கையளிக்க பணிக்கப்பட்டுள்ளது’.

‘மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு காணிகளை கையளிப்பார்’.
அதேவேளை தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப்பட்டிருந்தால், அந்த காணி உரிமையாளர்களுக்கு காணியின் பெறுமதி, நஷ்ட ஈடாக வழங்குவது அல்லது மாற்றுக் காணியை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விகாரை பிரச்சினையை நீண்டு செல்ல அனுமதிக்க முடியாது. அதனை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க முடிவெடுத்துள்ளோம் என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.