‘தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் – ஒடுக்குமுறைச்சட்டங்களுக்கு எதிரான கூட்டிணைவு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலைக்காப்புச்சட்டம் ஆகிய ஒடுக்குமுறைச்சட்டங்களை நீக்குவதன் ஊடாகவே உங்களது தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியும் என 66 அமைப்புக்களை உள்ளடக்கிய ‘ஒடுக்குமுறைச்சட்டங்களுக்கு எதிரான கூட்டிணைவு’ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சிவில் சமூக அமைப்புக்கள், ஊடகக்குழுக்கள், தொழிற்சங்கங்கள், தொழிற்துறை நிபுணர்குழுக்கள் என்பன உள்ளடங்கலாக 66 அமைப்புக்களின் கூட்டிணைவான நாம் ஒடுக்குமுறைச்சட்டங்களுக்கு எதிராக ஒன்றிணைந்திருக்கின்றோம்.

அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் புறந்தள்ளக்கூடிய சட்டங்கள் முற்றாக நீக்கப்படுவதை முன்னிறுத்தி நாம் கடந்த பல வருடகாலமாக தனித்தனியாகவும், கூட்டிணைந்தும் பணியாற்றிவருகின்றோம்.

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன அத்தகைய சட்டங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வந்திருப்பதுடன், அவற்றை முற்றாக நீக்குவதில் வெற்றியும் கண்டிருக்கின்றன. உங்களது கட்சி இந்தக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கின்றது.

எனவே நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின்னர், தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டதன் பின்னணியில், குறிப்பாக பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளிட்ட மிகமோசமான சட்டங்கள் முற்றாக இரத்துச்செய்யப்படும் எனக் கருதப்பட்டது.

இருப்பினும் தற்போது நபர்களைத் தடுப்புக்காவலில் வைப்பதற்குப் பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டுவருவது மிகுந்த கரிசனைகளைத் தோற்றுவித்திருக்கிறது. இந்தத் தடுத்துவைப்புக்களில் அநேகமானவை வேறு சட்டங்களின் பதியப்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன.

எனவே மிகமோசமான சட்டமாக அறியப்படும் பயங்கரவாதத்தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்படவேண்டியது அவசியம் என்பதுடன், அச்சட்டத்தின் தொடர் பிரயோகமானது தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன அவற்றின் முன்னைய கொள்கையிலிருந்து வெகுவாக விலகல் அடைந்திருப்பதைக் காண்பிக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி என்ற ரீதியில் நீங்களும், உங்களது அரசாங்கமும் உங்களுடைய நீண்டகால கடப்பாட்டுக்கு அமைய பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்கு மேலதிகமாக கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை வெகுவாக ஒடுக்கும் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலத்தையும் முற்றாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதுகாப்பான நிகழ்நிலை இடைவெளியை உறுதிசெய்வதாகக்கூறி கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இச்சட்டம், பல்வேறு தரப்பினரதும் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் உங்களாலும், உங்களது கட்சியினாலும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டவாறு ‘எதிர்க்கருத்துக்களை’ முடக்குவதே இச்சட்டத்தின் பிரதான நோக்கம் என்பது தெளிவாகியிருக்கின்றது.

எனவே இவ்வாறான ஒடுக்குமுறைச்சட்டங்களை நீக்குவதன் ஊடாகவே உங்களது தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியும் என்பதுடன், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் நீங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டினை மீளுறுதிப்படுத்தமுடியும் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.