தேசபந்து தென்னகோனுக்கு எதிராக பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றம்!

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான யோசனை பாராளுமன்றில் 177 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2002ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க அதிகாரிகளைப் பதவி நீக்கும் சட்டத்திற்கு அமைய தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கான யோசனை சபாநாயகர்களால் முன்வைக்கப்பட்டது.

யோசனைக்கு ஆதரவாக 177 வாக்குகள் பதிவாகியிருந்ததுடன், எதிராக எவரும் வாக்களிக்கவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை
அதேநேரம் இந்த யோசனை மீதான விவாதத்தின் போது பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தமது பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பலரும் கருத்துரைத்திருந்தனர்.

குறிப்பாக ஈஸ்டர் குண்டு தாக்குதல் உள்ளிட்ட பல சம்பவங்களை அவர் முன்கூட்டியே அறிந்து இருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று பாராளுமன்றில் வெளிப்படுத்தினார்.
அத்துடன் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் பெரும்பாலான வழக்குகளில் அவர் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.