தென்கிழக்கு ஆசியாவில் திறக்கப்பட்ட மற்றுமொரு களமுனை – வேல்ஸில் இருந்து  அருஸ்

சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட அடுத்த களமுனை திறக்கப்பட்டுள்ளது. தற்போது அது தென்கிழக்கு ஆசியாவில். Association of Southeast Asian Nations (ASEAN) என்ற கூட்டமைப்பின் பங்காளி நாடுகளும் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கிய நாடுகளுமான கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் இன்று மோதல்கள் வெடித்துள்ளன.
கம்போடியப் படையினர் 122 மி.மீ BM21 பல்குழல் உந்துகணை செலுத்திகள் மூலம் தாய்லாந்தின் எல்லைக் கிராமங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். இந்த தாக்குதல்களில் எரிபொருள் நிரப்பு நிலையம் வைத்தியசாலை பாடசாலைகள் ஆகியவவை தாக்கப்பட்டதாகவும் 14 பேர் கொல்லப்பட்டதாக வும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.  இரு நாட்டு எல்லைகளிலும் இருந்து 100,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த தாக்குதல்களை தொடர்ந்து தாய்லாந்து வான்படையினரின் 6 எப்-16 விமானங்கள் கம் போடியாவில் குண்டுகளை வீசியிருந்தன. இரண்டு குண்டுகள் வீசப்பட்டதாகவும் எல்லையில் இருந்த கம்போடியப் படையினரின் பிராந்திய கட்டளை மையங்கள் இரண்டை தாம் தாக்கி அழித்துள்ளதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.
வான் தாக்குதலை உறுதிப்படுத்திய கம்போடியா, படைத்தளங்கள் தாக்கப்பட்டது தொடர்பில் எதனையும் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே உக்ரைன் ரஸ்ய போர் இஸ்ரேல் பாலஸ்தீன போர் இஸ்ரேல் ஈரான் போர் அமெரிக்கா ஈரான் போர் இந்தியா பாகிஸ்த்தான் போர் என களமுனைகள் விரிவடைந்து செல்கையில், தற்போது அதில் மேலும் இரண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகள் இணைந்துள்ளன.
இந்திய பாகிஸ்த்தான் போர் 10 நாட்களும் ஈரான்- இஸ்ரேல் -அமெரிக்கப் போர் 12 நாட்க ளும் இடம்பெற்றிருந்தவேளை தற்போது உருவாகி யுள்ள புதிய போரும் மேலும் சில நாட்கள் மோசமாக தொடரலாம் என தாய்லாந்தியின் Chulalongkorn பல்கலைக்கழகத்தின் அரசியற்றுறை பேராசிரியர் Thitinan Pongsudhirak தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து அரசு மிகவும் பலவீனமாக உள்ளது. அங்கு ஒற்றுமையும் இல்லை. கம்போடியா இந்த பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தலாம். ASEAN என்ற அமைப்பில் உள்ள பிராந்திய நாடுகள் அவர்களின் எல்லைப் பிரச்சினை காரணமாக ஒரு சமநிலையற்ற தன்மைக்குள் சென்றுள்ளன. இந்த குழுவில் தாய்லாந்து கம்போடியா மியான்மார் ஆகிய நாடுகள் அடங்கும். இந்த நாடுகளில் உள்நாட்டு கலவரங்கள் பிராந்திய மோதல்கள் பூகோள அரசியல் நெருக்கடிகள் உச்சம் பெற்றுள் ளதாகவும் அது இந்த கூட்டணியை பலப்படுத்தும் சீனாவின் திட்டத்திற்கு பலத்த பின்னடைவு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தும் கம்போடியாவும் 817 கி.மீ நீளமான எல்லைகளை கொண்டுள்ளன. பிரான்ஸின் காலனித்துவ ஆட்சியில் இருந்த கம்போடியா சுதந்திரம் பெற்றபோது 1000 வருடம் பழமைவாய்ந்த Preah Vihear இந்து ஆலயத்தை அவர்கள் கம்போடியாவிடம் விட்டுச் சென்றிருந்த னர். அதனை கம்போடியா யுனெஸ்கோ என்ற ஐநாவின் தொல்லியல் கலாச்சார மையத்தில் 2008 ஆம் ஆண்டு பதிவு செய்திருந்தது.
இந்த நடவடிக்கைக்கு தாய்லாந்து கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இந்த ஆல யம் கம்போடியாவுக்கே சொந்தமானது என ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக நீதி மன்றம் (ICJ) தனது தீர்ப்பை 1962 ஆம் ஆண்டு வழங்கியிருந்தது. பின்னர் அந்த தீர்ப்பை 2013 ஆம் ஆண்டு உறுதிப்படுத்தியிருந்தது. எனினும் அதனை தாய்லாந்து ஏற்றுக்கொள்ளவில்லை. ஆலையத்தைச் சுற்றியுள்ள நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க தாய்லாந்து முயற்சி செய்திருந்தது.
அதற்கு எதிராக அந்த பிரதேசத்தில் மிதி வெடிகளை கம்போடியா படையினர் புதைத்ததில் தாய்லாந்தின் படைவீரர் ஒருவர் காலை இழந்தது டன் இருவர் காயமடைந்திருந்தனர். அதனை தொடர்ந்து மோதல்கள் வெடித்திருந்தன.
படைப் பலத்தை பொறுத்தவரையில் தாய்லாந்து மிகவும் பலமான நிலையில் உள்ளது. அதனிடம் 360000 படையினர் உள்ளனர். கம் போடியாவிடம் 170000 படையினரே உள்ளனர். தாய்லாந்து அமெரிக்காவின் நேட்டோ அல்லாத கூட்டணி நாடாகவே இயங்கி வந்துள்ளது. அதனிடம் அமெரிக்காவின் எப்16 எப்5 சுவீடனின் Gripen  வகை தாக்குதல் விமானங்கள் மற்றும் அமெரிக்காவின் கொப்ரா மற்றும் Black Hawk ஆகிய தாக்குதல் உலங்குவானூர்திகளும் உள்ளன.
ஆனால் கம்போடியாவிடம் தாக்குதல் விமானங்கள் இல்லை; சீனா மற்றும் முன்னைய சோவியத்து ஒன்றியத்தின் தாக்குதல் உலங்கு வானூர்திகளே உள்ளன. தாய்லாந்தின் பாதுகாப்புச் செலவீனம் 5.8 பில்லியன் டொலர்கள் ஆனால் கம்போடியாவின் பாதுகாப்புச் செலவீனம் 668 மில்லியன் டொலர்கள். அதாவது தாய்லாந்தின் படைத்துறைச் செலவீனம் கம்போடியாவை விட ஏறத்தாழ 8 மடங்கு அதிகம்.
எனினும் கெரில்லா போர் முறை மற்றும் ஆளஊடுருவும் போர் முறைகளில் கம்போடிய இராணுவம் அதிக அனுபவம் வாய்ந்தது. மேலும் தாய்லாந்தில் உள்ள அரசியல் குழப்பங்கள் மற்றும் பலவீனங்களை கம்போடியா தனக்கு சாதகமாக பயன்படுத்தலாம்.
எனினும் அமெரிக்கா இந்த சமருக்குள் நுழையுமாக இருந்தால் சமர் மேலும் மோசமாக லாம். அமெரிக்காவும் தாய்லாந்தும் 1982 ஆம் ஆண்டில் இருந்து கூட்டுக் கடற்படைப் பயிற்சி களை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவின் 7 ஆவது பசுபிக் பிராந்திய கடற்படைப் பிரிவுக்கும் தாய்லாந்து கடற்படையினருக்கும் இடையில் கடந்த மாதம் கடற்பயிற்சிகள் நடந்திருந்தன.
இருந்தபோதும் அண்மைக்காலமாக தாய்லாந்து சீனாவுடனும் உறவுகளை வளர்த்து வருகின்றது. சீனாவின் நவீன VT4 வகை 60 டாங்கிகளை தாய்லாந்து கொள்வனவு செய்திருந் தது. அதேசமயம் கம்போடியாவுடனும் சீனா நெருங்கிய உறவுகளை பேணி வருகின்றது. எனவே இந்த சமரை தணிப்பதற்கு சீனா முயற்சி செய்யலாம். ஆனால் அமெரிக்கா இந்த போரை ஊக்கப்படுத்தி தனது ஆயுதங்களை விற்பனை செய்யவும் தாய்லாந்தில் தளத்தை அமைத்து சீனாவை சுற்றிவளைக்கவும் முற்படலாம்.
எனவே இந்த போர் மேலும் மோசமாகும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. தற்போது தாய்லாந்து படையினர் தமது 155 மி.மீ ஆட்டிலறி பீரங்கிகள் மூலம் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதுடன் ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் மூலம் கம்போடியப் படையினரின் ஆயுதக்கிடங்குகளையும் தாக்கிவருகின்றனர். இரு தரப்பும் எல்லைகளை நோக்கி தமது படையினரை யும் ஆயுதங்களையும் குவித்து வருகின்றனர்.
அமெரிக்கா எதிர்பார்த்தது போல ஆசியா வில் அதுவும் சீனாவுக்கு அண்மையாக ஒரு போரை அது ஆரம்பித்துவிட்டது போலவே தெரிகின்றது. ஆனால் அது தாய்வானில் அல்ல யாரும் எதிர்பார்க்காத வேறு ஒரு களமுனை.