யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நைனாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு போன்ற நிலப்பரப்புடன் இணைக்கப்படாத தீவுகளில் பணியாற்றும் 174 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடர் கொடுப்பனவை கல்வி அமைச்சு இரத்து செய்துள்ளது.
கல்வி அமைச்சின் புதிய சுற்றறிக்கை ஒன்றின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பின்தங்கிய மற்றும் சவாலான சூழலில் பணியாற்றும் இந்த ஆசிரியர்களின் நலனைப் புறக்கணிக்கும் வகையில் இந்த முடிவு அமைந்துள்ளதாக ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தத் தீவுகளில் உள்ள 16 பாடசாலைகளில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர்கள், பிரதான நிலப்பரப்பிலிருந்து தினமும் படகுகள் மூலமே பயணிக்கின்றனர்.
குறிப்பாக பருவமழைக் காலங்களில் கொந்தளிப்பான கடல் மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில் மரத்தாலான படகுகளில் பயணிப்பது பெரும் அச்சுறுத்தலான காரியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான கடினமான சூழலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவை நிறுத்துவது, அவர்கள் அந்தப் பகுதிகளில் தொடர்ந்து பணியாற்றத் தயங்கும் நிலையை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.
எனவே, கல்வி அமைச்சரான பிரதமர் மற்றும் அதிகாரிகள் இந்த விடயத்தில் தலையிட்டு, ஆசிரியர்களுக்கான இடர் கொடுப்பனவை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.



