திலீபன் நினைவேந்தல்; இன்றைய நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் அடுத்த கட்டம் குறித்து முடிவு

திலீபன் நினைவேந்தல் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டளை இன்று பிறப்பிக்கப்படவுள்ள நிலையில், அந்தக் கட்டளையின் பின்னரே, தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில், இறுதி முடிவு எடுக்கப்படுமென்று கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இன்று மீண்டும் கூடி நீதிமன்றத் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடி எடுக்கப்படும் முடிவு குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமென்றும் கட்சிப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

திலீபன் நினைவேந்தலுக்கு அரசு தடை விதித்திருக்கும் நிலையில் அந்தத் தடை உத்தரவை நீக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவும் இணைந்து அரசிடம் கோரிக்கை விடுத்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்திருந்தன.

இதேவேளை, தடை உத்தரவு தொடர்பில், யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அந்த வழக்குத் தொடர்பான நீதிமன்றக் கட்டளை இன்று அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் நேற்று மாலை நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் ஒன்றுகூடிய தமிழ்த் தேசியக் கட்சிகள், திலீபன் நினைவேந்தல் தொடர்பில் கலந்துரையாடியிருந்தன. இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் என 9 தமிழ்த் தேசிய அணிகள் கலந்து கொண்டிருந்தன.