”திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் குடும்பத்துடன் வாழ வழிவகைகளை செய்யப்பட வேண்டும்” என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறிதிரன் இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தாா்.
சாந்தனுக்காக இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று அஞ்சலி செலுத்தி உரையாற்றிய இலங்கைத் சிறிதரன், ”சாந்தனுக்கு இந்த இடத்தில் அஞ்சலி செலுத்திக்கொள்கிறேன். வரலாறு பல மனிதர்களை படைக்கிறது. வரலாறு பல மனிதர்களுக்கு புதிய பாதைகளை திறந்து விடுகிறது. ஆனால், தன்னுடைய தாயையும், ஊரையும், உறவினரையும் பார்க்க முடியாது 20 வயதில் புறப்பட்ட ஒரு இளைஞன் 53 வயதை கடந்து சடலமாக வந்துள்ளார்” எனத் தெரிவித்தாா்.
”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நானும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம். அதேபோன்று தமிழகத்தில் உள்ள இந்தியாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரனையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.
ஆனால், இந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்ததால் சாந்தன் சடலமாக இலங்கைக்கு திரும்பியிருந்தார். இவ்வாறான இழப்புகள் இனியும் தொடரக் கூடாது. ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் குடும்பத்துடன் வாழ வழிவகைகளை செய்யப்பட வேண்டும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இலங்கையின் அதிகாரிகளிடம் நாம் இந்த கோரிக்கையை முன்வைக்கிறோம்” என்றார்.