திருகோணமலை முத்து நகரில் சூரிய சக்தி மின் திட்டத்தால் சூறையாடப்படும் விவசாய நிலம் – பா. அரியநேத்திரன்

1 31 திருகோணமலை முத்து நகரில் சூரிய சக்தி மின் திட்டத்தால் சூறையாடப்படும் விவசாய நிலம் - பா. அரியநேத்திரன்
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட் டத்தில் திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள
229 F இலக்கம் கொண்ட கிராமசேவையாளர் பிரிவாக கருதப்படும் ஒரு கிராமம் முத்துநகர் கிராமமாகும்.
திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 282 குடும்பத்தைச் சேர்ந்த 1346 பேர் வசித்து வந்தனர் தற்போது 20, வருடம் கடந்த நிலையில் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு கிடையாவிட்டாலும் 2025, ல் 350,க்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஏறக்குறைய 2000, பேர் வரை அங்கு வசிப்பதாக அறியமுடிகிறது.
பெரும்பான்மையாக முஸ்லிம் மக்களும், குறைந்தளவான தமிழ் மக்களும் இணைந்து வாழும் இந்த ஊரின் பிரதான தொழிலான நெல் வேளாண்மையை நம்பி, மக்கள் இயற்கையுடன் வாழும் ஒரு பசுமை நிலம் கொண்ட பிரதேசமாகும்.
முத்துநகர் பகுதியில் விவசாயத்தில் ஈடு பட்டுவந்த விவசாய காணிகளில் இருந்து அங்குள்ள விவசாயிகளை வெளியேற்றி அவற்றை சூறையாடி சூரியசக்தி ( சோலார்) மின் திட்டத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் இதன் காரணமாக சம்மந்தப்பட்ட பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு அதனை தடுக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை தமது காணிகளை தமது விவசாயத்திற்கு மீள வழங்குமாறு கோரியும் கடந்த மாதம் (14/08/2025) ம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முத்துநகர் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டத்தின் பின்னர் கடந்த (30/08/2025)ஆம் திகதிக்கு முன்னர் அதற்கான தீர்வை வழங்குவதாக விவசாயிகளுடனான கலந்துரையாடலின்போது அரசு தரப்பில் இருந்து உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது.
இதுவரை அதற்கான தீர்வு கிடைக்க வில்லை எனவும் கூறப்படுகிறது.திருகோண மலை முத்துநகர் விவசாய நிலங்களில் சூரியசக்தி (சோலாரை) மின்திட்டத்தை ஆரம்பித்தால் அதன் பாதிப்பானது  சுற்றியுள்ள வளமான நிலங்கள் பாதிப்படைந்து விவசாயம் செய்ய முடியாத மலட்டு நிலங்களாக மாறும்  என அந்த விவசாயி கள் அவர்களுடைய மொழிநடையில் கூறுவதை அவதானிக்க முடிந்தது.
சூரிய மின் உற்பத்தி திட்டத்திற்கோ அல்லது நாட்டின் அபிவிருத்திக்கோ தாம் எதிரா னவர்கள் அல்லர்.
மாறாக நெல் உற்பத்தி விளையும் பூமியில் சூரியசக்தி மின் திட்டத்திற்கான தள பாடங்களை பூட்டி அவற்றில் விவசாயத்தை மேற்கொள்ளவிடாது தடுப்பதால் அந்த பகுதி மக்களின் அன்றாட தொழில் இல்லாமல் போகின்றது. அவர்களுடைய வாழ்வாதாரம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும், இதைவிட அந்த கிராமம்  பாரம்பரியமாக மேற்கொண்டுவரும் விவசாயத்தொழில் அடியோடு இழக்க நேரிடும் இவைகள் எல்லாவற்றையும கருத்தில் கொண்டே அந்த பகுதி மக்கள் அந்த திட்டத்தை முற்றாக எதிர்கின்றனர்.
முத்து நகரில் சூரிய சக்தி மின்திட்டம் ஆரம்பிக்க வேண்டுமானால் விவசாய நிலங் களை விட்டு அருகில் உள்ள அண்டிய தரிசு நிலங்கள் உண்டு அந்த நிலங்களில் அத்திட்டத்தை ஆரம்பிக்கலாம். ஏன் விவசாயம் செய்யும் எமது நிலத்தை சீரழிக்கவேண்டும் அந்த நிலத்தை எம்மிடம் தாருங்கள் என்றே கேட்கின்றோம் எனவும் முத்துநகர் விவசாயிகள் மனவேதனையு டன் கூறுவது புரிகிறது.
இதேவேளை நீதிமன்ற உத்தரவுகள் சட்ட சிக்கல் இல்லாத காணிகளில் விவசாயம் மேற் கொள்ள முடியும் என்ற தீர்மானத்தினை 29/07/2025 அன்று மேற்கொண்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அறிக்கை மூலம் ஊடகவாயிலாக அறிவித்திருந்தார்.இருப்பினும் அது தொடர்பாக ஆவண ரீதியான எவ்வித உத்தரவாதமும் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
முத்துநகர் கிராமத்தை அண்டிய பகுதி யில் ஆறு இடங்களில் சூரியசக்தி  (சோலார்) தனியார் கம்பனிகள் கால்பதிக்கவுள்ளதாக அறியப் படுகிறது.அதுமட்டுமல்லாமல் பாரம்பரியமாக விவசாயம் மேற்கொள்ளும் அண்ணளவாக 352 விவசாயிகளையும் வெளியேற்றுவதற்கான சட்ட நடவடிக்கை இலங்கை துறைமுக அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் ஏனைய காணிகளில் இருந்தும் விவசாயிகள் சட்டரீதியாக வெளியேற் றப்படலாம் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் பீதியுடன் வாழ்கின்றனர்.
அங்கு  ஏறக்குறைய 800, ஏக்கரில் 352 விவ சாயிகள் காலாகாலமாக நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.
அந்த ஏழை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் அந்த ஊர் மக்கள் தமது சொந்த தொழிலை இழந்து வறுமை நிலைக்கே தள்ளப்படுவார்கள்.
கடந்த கால மகிந்த, மைத்திரி, ரணில் அரசாங்ககளும் விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ளாது செயற்பட்டதனாலேயே பாரிய பின்னடைவை எதிர்கொண்டது என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். எனினும் தற் போதைய அநுர அரசாங்கம் விவசாயிகளுக்கு வளமான எதிர்காலத்தை ஈட்டித்தருவதாக கூறியது தற்போது திருகோணமலை முத்துநகர் விவசாயி களை அப்புறப்படுத்துவதா வளமான நாடு இது என்ன நியாயம் என்பதே முத்துநகர் மக்களுடைய கேள்வி.
முத்துநகர் பகுதி விவசாய காணியில் தனி யார் நிறுவனத்தினர் கனரக வாகனம்(ஜே,சீ,வீ) இயந்திரம் மூலமாக (27/08/2025) சூரிய மின்சக்தி திட்டம் தொடர்பான வேலைத்திட்டத்தை ஆரம் பிக்க முற்பட்ட வேலையில் அங்கு குறித்த விவசாயிகள் சென்று தடுத்து நிறுத்த முற்பட்ட வேலையில் வாய்த் தகராறு பின்னர் கலவரமாகி தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் முத்துநகர் விவசாயிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சீனக்குடா பொலி ஸாரினால் ஐந்து விவசாயிகள் கைது செய்யப் பட்டு திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட நிலையில் கடந்த 04/09/2025,ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அவர்கள் ஐவரையும் விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றுள்ளது. குறித்த போராட்டம் கடந்த (30/08/2025) சீனக்குடா பொலிஸ் நிலையம் முன்பாக நடத்தப்பட்டுள்ளது. அவர்களை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த(04/09/2025)ம், திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை திருகோணமலை  முத்துநகர் பகுதியில் இந்த நிலம் தொடர்பான பிரச்சினை 2025 ,யூலை,29 ஆம் திகதி தாம் அணுகி தீர்க்கப் பட்டிருந்த போதிலும், அண்மையில் ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா ஊடகத்தில் தெரிவித்திருந்தார்.
அவரின் அறிக்கையில், மொத்த நிலப்பரப் பில் சுமார் பத்துவீதம் (10% )சூரியகல மின்சக்தி நிறுவனங்களால் அபிவிருத்தி செய்யப்பட்டுள் ளதாகவும், நீதிமன்ற தடையுத்தரவு காரணமாக சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, நீதிமன்றத் தடையில்லாத மற்றும் வழக்குகள் இல்லாத பிற நிலங்கள் அனைத்தும் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கி நிலங்களை திருப்பி வழங்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினை தீர்ந்திருந்த போதிலும் சில குழுக்கள் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும், அவர்களின் நோக்கம் நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவதே எனவும் அவர் தெரிவித் துள்ளார்.
எது எவ்வாறாயினும் ஒரு திட்டம் ஆரம்பிக்கும் முன்னர் அப்பகுதியில் உள்ள மக் களுடைய பூரண சம்மதம் இன்றி திட்டங்களை திணிக்கும் போதுதான் இவ்வாறான எதிர்ப்புகள் மக்கள் மத்தியில் இருந்து ஏற்படுகின்றன.
இது திருகோணமலை முத்துநகரில் சூரியசக்தி திட்டம் போன்றே வடமாகாணத்தில் மன்னாரில் காற்றாலை மூலம் மேற்கொள்ளும் மின்சாரத்திட்டமும் அப்பகுதி வளங்களை பாதிக் கும் என மன்னார் மாவட்ட மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருவது கண்கூடு.