ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியுடன் திருகோணமலை உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விடயத்தில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் திருகோணமலை மாநகர சபையில் தமக்கு துணை மாநகர முதல்வர் பதவி தரவேண்டும் எனக் கேட்டிருந்தார்கள்.
பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் இரண்டு ஆண்டுக்கு தவிசாளர் பதவி தரவேண்டும் எனக் கேட்டிருந்தார்கள்.அத்துடன், மூதூர் பிரதேச சபையில் இரண்டு ஆண்டுக்கு உப தவிசாளர் பதவி தரவேண்டும் எனவும் கோரியிருந்தனர்.
இவை அனைத்துக்கும் நாம் சம்மதம் தெரிவித்திருந்தோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.இந்த விடயங்களை இறுதியாக கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து செல்வம் அடைக்கலநாதனிடம் கூறியிருந்தேன்.அவர் என்னை 8 ஆம் திகதி திருகோணமலையில் சந்திப்பதாக கூறியிருந்தார்.
எனினும் அவர் சந்திக்கவில்லை.பலமுறை நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார். எனினும், விரைவில் அவர் என்னுடன் தொடர்பு கொள்வார் என்று நம்புகின்றேன் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.