‘திட்வா’ புயலால் 93% மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

‘திட்வா’ புயலின் பின்னர் உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களைச் சேர்ந்த 85 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னரே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பதிலளித்தவர்களில் 95 வீதமானோர் தங்கள் பகுதிகளில் குடியிருப்பு, கைத்தொழில் அல்லது சமூக உட்கட்டமைப்பு வசதிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் வீடுகள் மற்றும் வீதிகளே அதிகளவில் உள்ளடங்குகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலின் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், அதற்கான அனுமதிகளைப் பெறுவதிலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் காணப்படும் பலவீனமான ஒருங்கிணைப்பு காரணமாக தாமதங்கள் ஏற்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், அதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதில் சில மக்கள் கட்டுப்பாடுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 93 வீதமான மக்கள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

எனவே, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் தனது அறிக்கையின் மூலம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.