தாய்மொழிக் கல்வியும்; அரசியல் உரிமை உணர்வும்! (பாகம் 7)  முனைவர் விஜய் அசோகன்,  கல்வியாளர்

மொழி என்பதனை தொடர்பாடலுக்கான ஊடகமாகக் கருதுவோரும் உண்டு, இன உணர்வின் அடையாளமாகக் கருதுவோரும் உண்டு, நிலத்தின், பண்பாட்டின், தேசியத்தின் அடையாளமாக உருவகப்படுத்துவோரும் உண்டு. தாய்மொழி மனிதர்களை இணைத்து பலமாக்குவ

தோடு, இன வழி தேசிய உணர்வினை மேலோங்கச் செய்து, தங்கள் தாயக உரிமை மீட்பு, தமது நிலத்தின் இறையாண்மை மீட்பு என இட்டுச் செல்கிறது என்பதே நாம் வரலாற்று வழியில் அறிந்துக்கொள்ளும் செய்தியாக இருக்கிறது.

வல்லாதிக்க அரசுகள் பிறர் நிலத்தினை ஆக்கிரமிக்கும்பொழுது, முதலில் அந்நில மக்களின் தாய்மொழியினை கல்வியில் இருந்து அகற்றுவர், பிறகு பேச்சு வழக்கில் இருந்து மட்டுப்படுத்துவர். எந்த இனம் தன் மொழியினை தக்க வைக்கிறதோ, அவ்வினமே அந்நிலத்தைத் தக்க வைக்கும்! இழக்கும் மொழியினம், மெல்ல மெல்ல பெருந்தேசியவாதத்திலோ ஆதிக்க அரசுகளின் கட்டுப்பாட்டில் புதைந்துவிடும் என்பதே வரலாறு. ஆக, மொழி வெறும் ஊடகம் மட்டுமல்ல, பண்பாட்டையும் இன உணர்வினையும் அதன் வழி தாயக இறையாண்மையையும் காக்கும் பேராயுதம் என்பதை அறிக!

தாய்மொழிக் கல்வி நடைமுறைச்சிக்கல்:

தாய்மொழிக் கல்வி இல்லாத சூழல் உள்ள நாடுகளை வரிசையிட்டால், 1) அந்நிய ஆக்கிர மிப்பில் பல நூறு ஆண்டுகள் இருந்த நாடுகள், 2) பெருந்தேசிய ஆக்கிரமிப்பில் சிக்குண்டு தவிக்கும் சிறுதேசிய இனங்கள், 3) பல்தேசிய இனங்களில் கூட்டாட்சிகளில் முறையான தன்னாட்சி இல்லாத நாடுகள், என வகைப்படுத்தலாம்.

ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்த இந்தியத் துணைக்கண்டம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும், தென் ஆப்பிரிக்கக் கண்டமும், ஸ்பெயின், போர்த்துக்கல் நாடுகளின் ஆக்கிரமிப்பில் இருந்த தென் அமெரிக்க நாடுகள் என முதலாம் வரிசைக்குள் அடங்குகிறது.

ஸ்பெயின் நாட்டினுள் இருக்கும் காத்தா லேனியா, இங்கிலாந்தின் வேல்ஷ், ஸ்காடீஷ், போர்த்துக்கல்லின் கால்சியா உள்ளிட்டவைகள் பெருந்தேசியத்திற்குள் சிக்குண்டு கிடைக்கும் சிறுதேசிய இனங்களாக தாய்மொழிக் கல்விப் பிரச்சனையை எதிர்கொள்ளும் இரண்டாம் கட்ட வரிசை நாடுகளுக்குள் அடங்குகிறது.

அந்நிய வல்லாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றிருப்பினும், முறையான அரசியல் அதிகாரப்பகிர்வு இல்லாத,தன்னாட்சி இழந்த தேசிய இனங்கள் வாழும் இந்தியத்துணைக் கண்டத்தில் சிக்கித்தவிக்கும் தமிழகம் உள்ளிட்ட வைகள் மூன்றாம் வரிசையில் அடங்குகிறது.

இவைகளை கோர்த்து பார்க்கும் பொழுது தன்னாட்சி இழந்த, இறையாண்மை இழந்த, தாயகத்தை இழந்த தேசிய இனங்கள் மட்டுமே தாய்மொழிக் கல்வியினை இழந்துள்ளதையும் பகுத்துணர முடியும்.

இங்கிலாந்தில் ஆங்கிலமும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அவரவர் நாட்டினில் அவரவர் தாய்மொழியிலும், ஜப்பானில், கொரியாவில், சீனாவில், ருசியாவில் என எல்லா பெரும்பான்மை நாடுகளிலும் தாய்மொழிக் கல்வியில் நிலைத்து நின்றும் உலகத்தோடு ஒட்டி உறவாடி, கோலோச் சியே வாழ்கிறார்கள் என உணரலாம். யாரும் தாய்மொழிக் கல்வி இல்லாதச் சூழலில் ஆங்கி லத்தை கற்காமல் விட்டோ உலக முன்னேற்றத்தில் தடுமாற்றம் கண்டோ வாழவில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வரிசை நாடுகளை விட எல்லா வகையிலும் செல்வாக்கு நிரம்பியவர் களே தாய்மொழிக் கல்வியினைப் பெற்றிருப்போர்.

இந்தியத் துணைக்கண்டம் உட்பட்ட பன்மொழி பேசும் தேசிய இனங்கள், தென் அமெரிக்க கண்டத்தில் பல்தேசிய இனக்குழுக்கள் வாழும் நாடுகளில் எல்லாம் எது கல்வி என்றச் சிக்கல் உருவாவதற்கு காரணமே, ”ஒரே மொழிதான் ஒரே நாட்டினை கட்டுக்கோப்பாய் வைத்திருக்கும்” என்ற ஆதிக்கப் புரிதலே. நாம் தாய்மொழிக் கல்வி வேண்டுமென்று விடாப்பிடியாக இருப்பதற்கும் பெருந்தேசியத்திற்குள் கரைந்துவிடக்கூடாது என்ற தேசிய உணர்வுதான்.

தாய்மொழிக் கல்வியும் அரசியல் சூழலும் – நோர்வே, சுவீடன், ஃபின்லாந்தின் பூர்வக்குடி சமி மக்கள்:

நோர்வே, சுவீடன், ஃபின்லாந்து நாடுகளின் வடக்குப் பகுதி மக்கள் சமி இன மக்கள் ஆவர். அவர்களே, இப்பகுதிகளின் பூர்வக்குடி மக்கள், அவர்கள் இனம், மொழி, பண்பாடு முற்றிலும் வேறுபாடானது. இம்மூன்று நாடுகளின் பெரும்

பான்மை மொழியாக முறையே நோர்வேஜியன், சுவிடீஷ், ஃபின்னீஷ் இருக்கும் பட்சத்தில் இந்நாடுகள் பின்பற்றும் மொழியியல் மனித உரிமை சாசனப்படியும், 1949களில் ஏற்படுத்தப் பட்ட, ஐரோப்பிய ஆணையத்தின் மனித உரிமை சாசனம் இவற்றின் படி, சமி இன மக்களுக்கான தாய்மொழிக் கல்வி உரிமை மூன்று நாடுகளும் வழங்கியது.

ஐரோப்பிய மண்ணிற்குள் இடம்பெயர்ந்து குடியேறியவர்களும், பல காரணங்களால் ஐரோப்பிய மண்ணிற்கு புலம்பெயர்ந்தோரும் பேசும் மொழி சிறுபான்மை மொழி என்ற அடிப் படையில், கல்வியில் சிறுபான்மை மக்களுக்கான மனித உரிமை மற்றும் கல்வி உரிமை சாசனத்தின் படி, கல்வியில் தாய் மொழியினை மட்டும் வழங்க முடியும், ஆனால், சமி போன்ற பூர்வக்குடிக்கள் வாழும் சூழலில் கல்வி உரிமை அவர்களின் அரசியல் உரிமைகளோடும், அம்மக்களின் இறை

யாண்மை உள்ளிட்டவைகளோடும் தொடர்புடையதாக ஆகிறது. நோர்டிக் நாடுகள் கல்வியியல் உரிமையினை அரசியல் தன்னாட்சி உரிமை வழியாகவே நிலைநாட்டியுள்ளது எனலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கல்வி உரிமை சாசனம் தொடர்பாகவும் ஐரோப்பிய நாடுகளின் நடைமுறை தாய்மொழிக் கல்வித் தொடர்பாகவும் விரிவாகக் காண தாய்மொழிக் கல்வியும் பன் மொழிக் கல்வியும் – ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐநாவின் வழிகாட்டல்கள்!

தாய்மொழிக் கல்வியும் அரசியல் சூழலும் – நோர்டிக் உதாரணங்கள்:

நோர்டிக் நாடுகள் (நோர்வே, சுவீடன், டென்மார்க், ஃபின்லாந்து, ஐஸ்லாந்து) ஒவ்வொன்றும் தாய்மொழிக் கல்வியில் உறுதியாக இருப்பதற்கும் அவரவர் அரசியல் இறையாண்மைக்கும் தொடர்புண்டெனக் கருதுகிறேன். டென்மார்க் நாட்டின் டேனீஷ் மொழிக்கும், நோர்வே நாட்டின் நோர்வேஜிய மொழிக்கும், சுவீடன் நாட்டின் சுவிடீஷ் மொழிக்கும் மிக நெருங்கிய ஒற்றுமை உண்டு. ஒரு மொழி தெரிந்தால், மற்ற இரண்டு மொழிகளை எளிதாக புரிந்து, பேசவும், படிக்கவும் முடியும்.

400 வருடங்களாக டென்மார்க் நாட்டின் அரசியல் அதிகாரத்தின் கீழ் இருந்தபடியால் (தொடர்ந்து, 1813இல் இருந்து 100 வருடங்களாக சுவீடன் நாட்டின் அரசக் கட்டுப்பாட்டில் தனித்த அரசாகவும்) நோர்வே இருந்தபடியால், அவர்களின் மொழியினை இழந்துவிடும் நிலைக்குச் சென்றி ருந்தனர். மொழிகளே, இம்மூன்று நாட்டின் இறையாண்மைக்கும் தனித்த அரசுக்கும் உகந்த வடிவத்தினை வழங்கும் பேராயுதமாக இருப் பதால், அவரவர் மொழியினை தக்க வைப்பதிலும், இழந்ததை மீட்பதிலும் தான் தனித்த நில, மக்கள் வழி இறையாண்மையையும் ’தேசம்’ என்ற அளவுகோலையும் பெற்று தனியாட்சி பெற முடியும், இல்லையேல், ஒன்றோடு ஒன்று கரைந்து விடும் என்பதாலும்,அவரவர் தாய் மொழியினை வாழ்வியல், பண்பாட்டு, கல்வி, வேலை, சமூக உறவாடல் என அனைத்திலும் தீர்க்கமாக கடைப்பிடிக்கிறார்களோ என்ற கோணத்தையும் புறந்தள்ளிவிட முடியாது.

தாய்மொழிக் கல்வியும் அரசியல் சூழலும் – ஐரோப்பிய உதாரணங்கள்:

ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் மொழிகளின் தொடர்பு இருப்பதால், பிற காரணிகளைப் போல, ’மொழிகளும்’ நிலப்பரப்பின் இறையாண் மையைத் தீர்மானிக்கும் கருவியாகிறது எனலாம். அதேப்போல, இன்னொரு உதாரணமாக ஸ்பெயின் மற்றும் கத்தாலேனியாவினை எடுத்துக் கொண்டால், 12 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை கத்தாலேனிய மொழிக்கென தனி இலக்கியம் இருந்தபொழுதும், ஸ்பெயினின் அதிகார ஆதிக்கத்தினால் மொழியினை இழந்திருந்தார்கள். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், கல்வி மற்றும் வாழ்வியலின் மொழி அடையாளமாக மாற புதுமைப்புரட்சி உருவானதன் விளைவு, இன்று காத்தாலேனியாவின் தனி நாட்டுக் கோரிக்கை வரையிலான உரிமைக்குரல் வரை மீண்டு வந்துள் ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

போர்த்துகல் நாட்டின் கலீசீயன் மொழி, 12ஆம் நூற்றாண்டின் காலம் வரை, தனக்கென தனி இலக்கியமும் மொழி நடையும் கொண்டு சீரும் சிறப்புமாக இருந்தது. ஆனால், 14ஆம் நூற்றாண்டின் காலத்தில், அரசியல் மற்றும் வரலாற்றுக் காரணங்களால் கலீசீயன் மற்றும் போர்த்துக்கீசியன் என இரண்டாகப் பிரிந்தது. போர்த்துகேய நாட்டினுள் கலீசீயன் மொழியும் நெப்போலியன் மன்னனுக்கு எதிரான விடுதலைப் போரிலேயே புத்தாக்கம் பெற்று, அரசியல் வடிவத்தினுள் எழுச்சிப் பெற்றது.

ஆனாலும் 19ஆம் நூற்றாண்டில் தான் இலக்கியம் புத்தாகம் பெற்றது. 1981 இல் தான் துணை அலுவல் மொழியாக கலீசீயனும் நிலைத்தது. இன்றையக் கணக்கின் படி, கலீசீய மக்கள் தாய்மொழிக் கல்வி வழியிலான இருமொழிக் கல்விக் கொள்கையின் விளைவில் போர்த்துகேசிய மொழியிலும் அதன் பின் ஆங்கிலத்திலும் புலமைப் பெற்று வருகிறார்கள்.

இங்கிலாந்தினுள் இருக்கும் வேல்ஷ் மாகாணத்தின் தனித்த அடையாளத்திற்கு 1999களில் பெற்ற வேல்ஷ் மொழி கட்டாயக் கல்வி சட்டத்திற்கும் தொடர்புண்டென்பதை நாம் மறந்துவிட முடியாது.

கூட்டாட்சி மற்றும் பன்மொழிப் பேசும் நாடுகளில் தாய்மொழிக் கல்வி:

ஜெர்மனி மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளின் பன்மொழிச்சூழலில் தாய்மொழிக் கல்வி என்னும் ஆய்வுக்கட்டுரையில், ”பல மொழிகள் நிரம்பிய நிலப்பரப்பில், அதிகார மையம் ஒற்றை மொழியினைக் கல்வி மொழியாக வைத்திருப்பதே ஒற்றுமைக்கான வழி என தவறாகக் கணக்கிடுகிறார்கள். பன்மொழிச் சூழலில் ஒற்றை கல்வி மொழி பிரிவினை,ஒற்றுமையின்மை, சமத்துவமின்மை ஆகியவற்றிற்கே வழிவகுக்கும்” எனக்குறிப்பிட்டு உள்ளார்கள்.

http://www.scielo.org.za/scielo.php?script=sci_arttext&pid=S1727-37812017000100022

ஜெர்மன் நாட்டினைப் பொறுத்தவரை அது ஒரு கூட்டாட்சி நாடு. மாநிலங்கள் அதனதன் சட்டங்களை முழுமையாக அவர்களாகவே வரையறுத்துக்கொள்ளலாம். ஜெர்மன் நாட்டில் பொதுவான கல்வி மொழியாக ஜெர்மானிய மொழி இருந்து வருகிறது. ஆனால், பிரண்டன்பர்க் மற்றும் சாசோணி மாநிலங்களில் சோர்ஃப் மொழி பேசும் இனக்குழுக்கள் வாழுகின்றனர். அவர்களின் தாய்மொழி பேசும் உரிமையினையும் தாய்மொழிக் கல்வி, கல்வியில் சோர்ப்ஃ மொழியினர் வரலாறு உள்ளிட்டவைகளை பாதுகாக்க அந்த இரு மாநிலங்களிலும் சிறப்புச் சட்டங்கள் உள்ளன.

அதேப்போல, ரோமானி மற்றும் ஃபிரிசன் மொழிகளுக்கும் தாய்மொழிக் கல்வி உரிமையினை ஜெர்மன் நாட்டின் பல மாநிலங்கள் வழங்கியுள்ளன. இந்த மொழிகள் எல்லாம் உயர்கல்வி உள்ளடங்களாக பாலியல் கல்வி வரைக்கும் அவசியமெனவும் சட்ட வரைமுறைகளில் அனுமதி வழங்கியுள்ளனர்.

அதேப்போல, சுலேசுவிக்-ஓல்ச்டைன் மாநிலத்தில் டேனீஷ் மொழியினருக்கான சிறப்புப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஃபின்லாந்து நாட்டில் சுவீடிஷ் மொழியி னருக்கான முழு அலுவல் பள்ளிகள் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.