தாய்க்கட்சியும்  தமிழ்த்தேசிய அரசியலும்!:பா. அரியநேத்திரன்

2026 புத்தாண்டு பிறந்துள்ளது எதிர்வரும் ஜனவரி 21 வந்தால் இரண்டு வருடங்களாக தாய்க்கட்சி என வர்ணிக்கப்படும் இலங்கை தமிழரசுக்கட்சிக்கட்சிக்குள் இரண்டு அணிகளாக பிரிவு தொடர்கிறது அதில் மாற்றுக்கருத்தில்லை. 2025ம் ஆண்டும் மகாநாடு நடத்த முடிய வில்லை.
2024 ஜனவரி 21 ல் வாக்கெடுப்பு மூலமாக தலைவர் தெரிவு நடந்ததால்தான் இந்த இரண்டு பிரிவுகளாக கட்சி இயங்குவதை எவரும் மூடி மறைக்க முடியாது. இதற்கான முழுப்பொறுப்பும் மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்மந்தரும், மறைந்த இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவையுமே சாரும். இந்த இருவரும் உயிருடன் இருக்கும்போதே 17வது தேசிய மாகாநாட்டுக்கான ஆயத்தங்கள் 2024 நடந்தன. அப்போது தலைவராக சிவஞானம் சிறிதரனும், மதியாபரணம் சுமந்திரனும் விரும்பியுள்ளனர் என்ற விடயம் வெளிப் படையாகவே பேசப்பட்டது.
மத்தியகுழுவிலும் இருவரும் தலைவர் பதவிக் காக போட்டியிடப்போகிறார்கள் என்ற விடயம் வெளி வந்து. அப்போது இருவரையும் சமரசம் செய்து ஒருவரை தலைவராக இருக்குமாறு கூறுவதற்கு ஆளுமை சம்மந் தரிடமோ, மாவையரிடமோ இருக்கவில்லை.இதற்கு நல்ல உதாரணம் தந்தை செல்வா உயிரோடு இருக்கும்வரை 1949 டிசம்பர் 18 ல் ஆரம்பித்த இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி 1973 செப்டம்பர் 07 வரை 12 தேசிய மகாநாடுகள் நடைபெற்றன அவை
1. 1951 ஏப்ரல் 13-14-15ல் திருகோணமலையில், தலை வராக தந்தைசெல்வா,
2. 1953 ஜனவரி  01ல் யாழ்ப்பாணத்தில் தலைவராக தந்தைசெல்வா,
3. 1955 ஏப்ரல் 16-17ல் திருகோணமலையில் தலைவராக கு.வன்னியசிங்கம்,
4. 1956 ஆகஸ்ட் 17,18,19ல் திருகோணமலையில் தலை வராக கு.வன்னியசிங்கம்,
5. 1957 ஜூலை 27,28ல் மட்டக்களப்பில் தலைவராக கு.வன்னியசிங்கம்,
6. 1958 மே 23,24,25ல் வவுனியாவில் தலைவராக இராஜவோதயம்,
7. 1961 ஜனவரி 21 ல் யாழ்ப்பாணத்தில் தலைவராக சீ.மூ.இராசமாணிக்கம்,
8. 1962 ஆகஸ்ட் 31ல் மன்னாரில் தலைவராக சீ.மூ.இராசமாணிக்கம்
9. 1964 ஆகஸ்ட் 21,22,23ல் திருகோணமலையில் தலைவராக  தந்தை செல்வா,
10. 1966 யூன் 23,24,25ல் கல்முனையில் தலைவராக டாக்டர் நாகநாதன்,
11. 1969 ஏப்ரல் 07,08,09 ல் யாழ்ப்பாணம் உடுவிலில் தலைவராக சீ.மூ.இராசமாணிக்கம்,
12. 197 ,செப்டம்பர் 07,08,09,ல் யாழ்ப்பாணம் மல்லாகத்தில் தலைவராக அ.அமிர்தலில்கம்,
இந்த 12  மாகாநாடுகளிலும் தலைவர் தெரிவு உட் பட அனைத்தும் ஏகமனதாகவே நடைபெற்றது. இறுதியாக தந்தை செல்வா உயிருடன் உள்ள நிலையில் இடம்பெற்ற மகாநாட்டில் 1973 செப்டம்பர் 07 ல் தலைவர் பதவிக்கு மட்டக்களப்பு செல்லையா இராசதுரையும், யாழ்ப்பாணம் அப்பாபிள்ளை அமிர்தலிங்கமும் ஆசைப்பட்டு இரு வருக்கும் போட்டி நிலைமை ஏற்பட்டபோது தந்தை செல்வா இருவருடனும் அணுகி பேசி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை தலைவராக இராசதுரையின் ஒப்புதலு டன் தெரிந்தார்.
1973 தொடக்கம் 2010  வரை 37 வருடங்கள் தமி ழரசுக்கட்சி இயங்கவில்லை எந்த மகாநாடுகளையும் நடத் வில்லை இதற்கான காரணம் 1976  மே 14 ல் தமிழரசுக்கட்சி நிறுவனர் தலைவர் தந்தை செல்வா தமிழர் விடுதலை கூட்டணி என்ற புதிய கட்சி ஊடாக வட்டுக்கோட்டை தீர்மானம் “சுதந்திர தமிழீழம்” என நிறைவேற்றப்பட்டது.  தேர்தல் கட்சியாக அது உதயசூரியன் சின்னத்தில் பதிவு செய்யப்பட்டது. அதனால் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களே தமிழர் விடுதலைக்கூட்டணியாக செயல்பட்டனர்.
1977 ஏப்ரல் 26ல் தந்தை செல்வா மரணித்த பின்னர் 1977 ஜூலை 21 இலங்கையின் தொகுதிவாரியான இறுதித் தேர்தல் இடம்பெற்று 2001 டிசம்பர் 06 பொதுத் தேர்தல் வரை தமிழர் விடுதலை கூட்டணி செயல்பட்டது. அதற்குபின்னர் ஆனந்தசங்கரி நீதிமன்றில் தமிழர் விடுதலை கூட்டணியை முடக்கியதால் 2004  ஏப்ரல் 08  தொடக்கம் இன்று வரையும் இலங்கை தமிழரசுக்கட்சி செயல்பட்டுகிறது. ஆனால் ஒற்று மையாக ஒரு அணியாக இப்போது இல்லை.
1973 க்கு பின்னர் தமிழரசுக்கட்சி மாநாடு 37 வருடங் களுக்கு பின்னர் 2010 ஜனவரி 13 தொடக்கம் 2019 ஜூன் 30  வரை 04  மகாநாடுகள் மட்டும் இடம்பெற்று மொத்தமாக 16 மகாநாடுகள் இடம்பெற்றன.
1. 2010 ஜனவரி 13ல் யாழ்ப்பாணம் நல்லூரில் தலைவராக இரா.சம்பந்தன், 2. 2012 மே 26, 27ல் மட்டக்களப்பில் தலைவராக இரா.சம்பந்தன், 3. 2014 செப்டம்பர் 06, 07ல் வவுனியா தலைவராக மாவை சேனாதிராசா, 4. 2019 ஜூன் 29, 30ல் யாழ்ப்பாணத்தில் தலைவராக மாவை.சேனாதிராசா. யாழ்ப்பாணம் நல்லூரில் 13, வது தேசிய மாநாடு இடம்பெற்றது அதில் தலைவராக இரா.சம்பந்தன், பொதுச்செயலாளராக மாவை சேனாதிராசா தெரிவானார். 14 வது மாநாடு 2012, 15,  2004 ல் 17 வது மகாநாடு நடைபெற இருந்த நிலையில்தான் அது முரண்பாடாகி தடை ஏற் பட்டது.
2024 ஜனவரி 21 ல் பொதுச்சபை உறுப்பினர்கள் 321 பேர் வாக்கெடுப்பு மூலம்  தலைவர் தெரிவு திரு கோணமலையில் இடம்பெற்றபோது 184 வாக்குகளை சிவஞானம் சிறிதரன் பெற்று தலைவராக தெரிவானார். 137  வாக்குகளை பெற்று மதியாபரணம் சுமந்திரன் தோல் வியுற்றார். சீனித்தம்பி யோகேஷ்வரன் சிறிதரனை ஆதரித் தமையால் அவர் எந்த வாக்குகளையும் பெறவில்லை.
அதன் பின்னர் 2024 ஜனவரி 27 ல் ஏனைய பொதுச்செயலாளர், மத்தியகுழு உறுப்பினர் தெரிவில் பொதுச்சபையில் ஏற்பட்ட முரண்பாடுகளால் ஏனைய தெரிவுகள் இடம்பெறவில்லை.
அன்றே இரண்டு அணிகளாக கருத்து பரி மாற்றங்கள், முரண்பாடுகள் எழுந்தன அதுதொடர்பாக அந்த முரண்பாடுகளையும் தீர்க்க முடியாமையால் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை கொண்டு கட்சியில் உள்ள ஒரு அணியினரால் கடந்த 2024 பெப்ரவரி 15 ல் மகாநாட்டை தடைசெய்ய இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
1. திருகோணமலை நீதிமன்றில் சந்திரசேகரம் பரா என்பவரால்  வழக்கு தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவுகளை ஆட்சேபித்து, திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
2. யாழ்ப்பாணம் நீதிமன்றில் மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியனும் வழக்கு கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கு எதிராக, யாழ்ப்பாணம் மாவட்ட நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த இரண்டு வழக்குகளை விட மேலும் மூன்று வழக்கு கள்..
3- 2024 அக்டோபர் 14ல் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி யின் நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய புதிய  வழக்கொன்றை   யாழ். நீதிமன்றில் தமிழ் அரசுக் கட்சி யின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா அவர்கள் சமர்ப்பித்ததாக தகவல்.
4. 2025 ஜூன் மாதம் காங்கேசன்துறை தொகுதி கிளை செயலாளர் இளவாலையை சேர்ந்த இராசேந்திரன் என்பவர் யாழ் நீதிமன்றில் கட்சி செயல்பாடுகளுக்கு எதிராக ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார் என தகவல்.
5. இதேவேளை 2024 நவம்பர் 17 ல் மத்தியகுழு முல்லைத் தீவு உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் கட்சி பதில் செயலாளருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை 2025  ஜூன் 17ல் மீளப்பெற்றுக்கொண்டு வழக்கை வாபஸ் வாங்கினார்.
இவ்வாறு 05, வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு தற்போது ஏறக்குறைய இரண்டு வருடங்களாக நீதிமன்றில் வழக்குகள்  தொடர்கிறது. இதில் வேடிக்கை என்னவெனில் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என கோஷம் இடும் தமிழரசுக்கட்சி அதே உறுப்பினர்களே தமது கட்சிக்கு நீதி வேண்டி இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதற்கிடையில் இறுதியாக 2019 ஜூன் 30 ல் 16வது தேசிய மாநாட்டில் பொதுச்செயலாளராக தெரிவான மட்டக்களப்பு கி.துரைராசசிங்கம் 2020 செப்டம்பர் 09 ல் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து இராஜனாமா செய்ததை அடுத்து அந்த வெற்றிடத்திற்கு பதில் பொதுச் செயலாளராக வவுனியா ப.சத்தியலிங்கம் மத்தியகுழுவால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர் 2024  ஜனவரி 21,27 கட்சி தலைவர் தெரிவு, பொதுச்சபை கூட்டங்கள் எதிலும் கலந்துகொள்ளாமல் சுகவீனத்தை காரணம் காட்டி தவிர்த்தார். அவருடைய பிரசன்னம் இல்லாமலேயே அவைகள் இடம்பெற்றன. முதலாவது பதில் செயலாளர் சத்தியலிங்கமும் கடந்த 2025 பெப்ரவரி 16ல் களுவாஞ்சிகுடி மத்தியகுழுக்கூட்டத்தில் பதவியில் இருந்து விலகி சுமந்திரன் 02 வது பதில் பொதுச்செயலாளராக மத்தியகுழு நியமித்தது.
இதேவேளை 2024  டிசம்பர் 28ம் திகதி வவுனியா வில் இடம்பெற்ற மத்தியகுழு கூட்டத்தில் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் தெரிவாகினார். இந்நிலையில் தற் போது நிரந்தர தலைவர், நிரந்தர பொதுச்செயலாளர் இன்றி பதில் பதவிகளுடனேயே கட்சி இயங்குகிறது.
இவ்வாறான நிலையில் கடந்த 2024  நவம்பர் 14  பொதுத்தேர்தலில் 08  பாராளுமன்ற உறுப்பினர்கள் தமி ழரசுக்கட்சியால் தெரிவாகியுள்ளபோதும் பாராளுமன்ற குழுத்தலைவராக சிறிதரனையும், பாராளுமன்ற குழு பேச்சாளராக ஶ்ரீநேசனையும் தெரிவு செய்த போதும் அவர்களையும் ஒழுங்காக இயங்கவிடாமல் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே முரண்பாடுகள் தொடர்கிறது.
இந்த உள்ளக முரண்பாடுகளும், தனிநபர் ஆதிக்கமும் தமிழரசு கட்சிக்குள் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக தொடர் பிரச்சினைகளால் மக்களுக்கு சார்பாக முடிவுகள், மக்களை தேசமாக கட்டி எடுத்து கொள்கை ரீதியாக அறவழிப்போராட்டங்களை நடத்த முடியாத நிலை தொடர்கிறது.
தற்போது தமிழரசுக்கட்சியும், ஜனநாய தமிழ் தேசிய கூட்டணியும், அதோடு ஈபிடிபியில் இருந்து வில கிய மு.சந்திரகுமாரும் இணைந்து செயல்படுவதாக அறிவித்தாலும் மாகாணசபை தேர்தல் அறிவிப்பு வந்தால் இவர்களுடைய ஒற்றுமை வேட்பாளர் தெரிவுகளால் விட்டுக்கொடுப்புகள் இல்லை எனில் இந்த கூட்டும் சிதறக்கூடிய வாய்ப்பே உள்ளது.
தாய்க்கட்சியான தமிழரசுக்கட்சியின் ஒற்றுமை ஈனத்தால் தமிழ்தேசிய கொள்கை அரசியல் நேர்த்தியாக முன் செல்லுவதில் 2026 ம் ஆண்டும் தடுமாற்றமே செல்லும்.