இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம் பெற்ற மனித உரிமைகள் மற்றும் மனிதாபி மானச் சட்ட மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம், அதனை வழக்கம் போன்று ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் வாக் கெடுப்பை கோரியிருக்கவில்லை. இதுவொரு இராஜதந்திர நகர்வாக அது காண்பிக்கிறது. சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்கிறது. குறிப்பிட்ட காலம் வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டினையும் எட்டுகிறது. ஆனால் இலங்கை அரசாங்கம் ஜெனிவா வில் ‘நம்பகமான உள்ளக விசாரணைகளை’ முன் னெடுப்பதாகவே உறுதியளித்துள்ளது. அதற்காக உள்ளக ரீதியில் காணப்படுகின்ற அரச நிறுவனங் களை பலமானவையாக காண்பிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளது.
இந்த முக்கிய கட்டத்தில், போரின்போது இராணுவத்திற்குத் தலைமை தாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் சில போர்க்காலத் தகவல்களை ஊடகங்களில் வெளி யிட ஆரம்பித்திருப்பது, கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பொன்சேகாவின் திடீர் மௌனத்தை கலைத்த போக்கானது, முதலில் அவரது அரசியல் தற்காப்பு உத்தியாக கொள்வதோடு அதற்குள் பல்வேறு நோக்கங்கள் புதைந்திருப்பதை வலுவாக காணக்கூடியதாக உள்ளது.
சர்வதேச சமூகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், இலங்கை அரசாங்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ‘உள்ளக விசார ணைப் பொறிமுறையை’ உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.
இந்த உள்ளகப் பொறிமுறை, அரசாங்கத் தின் மீதான சர்வதேச அழுத்தங்களைத் தற்காலிகமா கச் சமாளிக்குமொரு கண்துடைப்பாகவே அமை யப்போகின்றது. அது நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயமான பொறுப்புக் கூறலைச் செய்வதற்கான முயற்சிகாக அமையப் போவ தில்லை.
இந்நிலையில், போர்க்கால இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, இந்த உள்ளகப் பொறிமுறையின் முன் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருக்கிறார். ஆகவே தான் தற்போது மௌனம் கலைத்திருக்கிறார்.
பொன்சேகா, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்குடனோ அல்லது தனக்கு எதிராகச் செயற்பட்டவர்களையும், ஒத்துழைக்காதவர் களையும் சிக்க வைக்க முற்படும் நோக்கத்துடனோ தான் அவர் இப்போது தகவல்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறார்.
பொன்சேகா மீதான அமெரிக்க விசா மறுப்பு, மற்றும் ஏனைய இராணுவத் தளபதிகள் மீது கனடா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் விதித்துள்ள பயணத் தடைகள் சர்வதேச ரீதியாக பொறுப்புக்கூறலை மையப்படுத்தி அதி கரித்து வரும் நெருக்கடியைக் காண்பிக்கின்றன.
பொன்சேகாவைப் பொறுத்தவரையில், வெளிப்படையாகத் தடைகள் இல்லாதபோதிலும், ‘உள்ளகப் பொறுப்புக்கூறல் விசாரணைப் பொறி முறையை எதிர்கொள்வது’ அவரது எதிர்காலத்தை சட்ட ரீதியாகப் பாதிக்கும் என்பதால், அவர் முன்கூட்டியே தன்னுடைய தரப்பையும் தனது எதிராளிகளையும் குற்றஞ்சுமத்துவதன் மூலம், தன்னை அரசியல் ரீதியாக மீண்டும் நிலைநிறுத்த முற்படுகிறார்.
இதனைவிடவும், பொன்சேகா, ராஜ பக்ஷவினருக்கு நெருக்கமான சில முன்னாள் இரா ணுவ அதிகாரிகளை இலக்கு வைத்துப் பேசுவது தெளிவாகத் தெரிகிறது. இசைப்பிரியா படு கொலைக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் குழுவினரே காரணம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், சரணடைந்தவர்களைக் கையா ண்ட படைப்பிரிவுக்குத் தலைமையாகச் செயற் பட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராகவும் அவர் குற்றச்சாட்டு களை முன்வைத்துள்ளார். ராஜபக்ஷவினருக்கு நெருக்கமானவர்களைக் குற்றஞ்சுமத்துவது, தன்னு டைய பொறுப்பைக் குறைத்து, அரசியல் ரீதியான எதிரிகளைச் சுட்டிக்காட்டும் உத்தியாகவே பார்க் கப்படுகிறது. ஆனால், போரின் இறுதிக்கட்ட முன்களச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த படைத்தள பதிகளான சவேந்திர சில்வா, கமல் குணரத்ன, ஜகத் டயஸ் போன்றோர் குறித்துப் பொன்சேகா மௌனம் காக்கின்றார்.
அதற்கு காரணங்கள் உள்ளன. குறிப் பாக, அவர்கள் ராஜபக்ஷவினருக்கு நெருக்க மானவர்களாக இருந்தபோதிலும், ‘போரை வென்ற வர்கள்’ என்ற பொதுவான வெற்றிவாதத் தைக் காப்பாற்றும் உள்நோக்கத்துடனோ அல்லது வேறு அரசியல் உடன்பாடுகளின் அடிப்படையிலோ இருக்கலாம்.
சரத் பொன்சேகா தற்போது குற்றஞ் சாட்டியுள்ள சில அதிகாரிகள் மீது ஏற்கனவே சர்வதேச ரீதியில் சட்ட நடவடிக்கைகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப் பாக, வன்னிப் பிராந்தியத்தின் பாதுகாப்புப் படைத் தளபதியாக இருந்த ஜெகத் ஜயசூரிய மீது சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் போன்ற மனித உரிமைக் குழுக்கள் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளன.
குறிப்பாக பிரேசில், கொலம்பியா, சிலி ஆகிய நாடுகளில், அவர் மீது போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங் களுக்காக வழக்குத் தாக்கல் செய்துள்ளன. அந்த வழக்குகளால் ஏற்பட்டுள்ள விளைவுகள் தொடர் பில் விவாதங்கள் காணப்படுகின்றன. எனினும், இந்த வழக்குகளில், ஜெகத் ஜயசூரிய, போரின் இறுதிக் கட்டத்தில் மக்கள், மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்கு தல்கள், கடத்தல், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குக் கட்டளை அதிகாரியாகப் பொறுப்பு வகித்ததாகக் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அழுத்தங்களின் காரணமாகவே, ஜெகத் ஜயசூரிய தான் பணியாற்றிய தூதரகப் பதவிகளில் இருந்து விலகி அவசரமாக நாட்டிற்குத் திரும்பியிருந்தார். அண்மையில் பிரித்தானியா, கூட, ஜெகத் ஜயசூரிய மீது பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் போன்றவற்றை விதித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள், ‘இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணை’ பற்றிப் பேசினா லும், சர்வதேச அளவில் பொறுப்புக்கூறலுக்கான பாதை திறந்தே இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால் அது நெடிய பயணமாக உள்ளது.
இதேவேளை, பொன்சேகாவின் கூற்று களை முழுமையாக உண்மையானவை என்று நம்புவது கடினம் என்ற போதிலும், ஒரு முன்னாள் இராணுவ அதிகாரியின் பெயர் இசைப்பிரியாவின் படுகொலை குறித்து வெளிப்படையாகக் குறிப் பிடப்பட்டும், அரசாங்கமோ அல்லது பொலிஸோ விசாரணைகளில் அக்கறை காட்டாதது, நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ள ‘தண்டனை விலக்குக் கலாசாரம்’ தொடர்வதையே நிரூபிக்கிறது.
இப்படியிருக்கையில், முன்னாள் கடற் படை அதிகாரி ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் டி.கே.பி.தசநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அழுத்தம், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி வடக்கு, கிழக்கை வேறாக்குவதே ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, போர் வெற்றி பெறுவதற்கு காரணமானவர்கள் இலக்கு வைக்கப் படுவதாகவும், புலம்பெயர் தமிழர்களை திருப்திப் படுத்துவதற்காக அரசாங்கம் செயற்படுவதாகவும் கூறியிருக்கின்றார்.
இவரது கூற்றுக்கள் பொன்சேகாவின் கூற் றுக்களுடன் ஒருபுள்ளியில் சந்திக்கின்றன. உள் ளகப் பொறிமுறை தொடர்பில் பொன்சேகாவுக்கு வந்துள்ள முன்னெச்சரிக்கை சிந்தனை தான் தசநாயக்கவுக்கு பொறுப்புக்கூறல் விவகாரத்தை ஒரு தேசிய பாதுகாப்புப் பிரச்சினையாக வெளிப் படுத்த முனைந்தமையாகும்.
அந்தவகையில் பார்க்கின்றபோது, சரத் பொன்சேகாவின் ‘மாரித்தவளைகள்’ போன்ற மௌனம் கலைப்பானது, நீதியை நிலைநாட்டு வதைவிட, வரவிருக்கும் உள்ளக விசாரணைப் பொறிமுறையில் தன்னைக் காப்பாற்றிக் கொள் ளும் அரசியல் தற்காப்பு நடவடிக்கையின் பகுதியா கவே தோன்றுகின்றன.
ஒட்டுமொத்தத்தில், இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம், நீதியை நோக்கிய பயணமாக இல்லாமல், சிக்கலான அரசியல், பாதுகாப்பு மற்றும் சுயநல விவகாரங்களின் சதுரங் கமாகியுள்ளமை துரதிஷ்டமான நிலைமையாகும்.



