படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராமின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், செல்வராசா ரஜிவர்மனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (28) அனுஷ்டிக்கப்பட்டது.
ஊடகவியலாளர் தராகி சிவராம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு – பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம் தெரியாதவர்களால் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் அவரது சடலம் மீட்கப்பட்டிருந்தது.
ஊடகவியலாளரான செல்வராசா ரஜிவர்மன் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி முற்பகல் 10.30 அளவில் யாழ். ஸ்டான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் இன்று இடம்பெற்ற நினைவேந்தலின் போது தராகி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை, கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் தராகி சிவராம் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்த தமிழ் ஊடக கல்லூரி இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளமை தொடர்பில் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது
அந்த காணியை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு பக்க பலமாக தமிழ் அரசியல் வாதிகள் பாராளுமன்றில் குரல் எழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அதேநேரம், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜிவர்மன் ஆகியோரின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.