தரகுநிலை அரசியல் தவிர்க்கப்பட வேண்டும்-தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  ஞா.சிறிநேசன்

கேள்வி:

தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு தளம் கிழக்கில் எவ்வாறு காணப்படுகின்றது? 

நான் நினைக்கிறேன் பொதுக்கட்டமைப்பு சார் உறுப்பினர்கள் இப்போதுதான் கிழக்கில் விழிப்புணர்வுக் கூட்டத்தினையும் பிரதேச செயலக மட்டத்திலான பரப்புரையினையும் ஆரம்பித்து உள்ளனர். மேலும் கடந்த கால ஜனாதிபதிகளின் ஏமாற்றுச் செயல்களை மக்களுக்கு அறியும் வாய்ப்பினை அளித்து வருகின்றனர்.

திருகோணாமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தமது உள்ளூராட்சி அமைப்பினர் சகிதம் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஏனைய மாவட்டங்களிலும் படிப்படியாக விழிப்புணர்வு ஏற்படக்கூடிய களநிலை உருவாகி வருகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணிப் பொதுச் செயலாளர் அருண் அவர்களும் கிழக்கில் இருந்து, பொதுவேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.பொது வேட்பாளர் தற்போது வடக்கில் ஆதரவாளர் சகிதம் பரப்புரை நடாத்துகின்றார். கிழக்கில் வரும் போது ஆதரவு நிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

கேள்வி:

தமிழரசுக்கட்சியை சேர்ந்த அரியநேத்திரனை பொதுவேட்பாளராக அறிவித்தமை தொடர்பில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலைமை இன்று எவ்வாறு காணப்படுகின்றது? 

அவரிடம் விளக்கம் கோரிக் கட்சி மூலமாகக் கடிதம் அனுப் பப்பட்டுள்ளது. ஆனால் 83 சிவில் கட்டமைப்புகள் பொது வேட்பாளர் விடயத்தில் தொடர்பு பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஆதரிக்கின்றன. எனவே பொதுவேட்பாளரை கண்மூடிக் கொண்டு எதிர்க்க முடியாத சூழல் உருவாகி வருகின்றது. இவ்விடயம் தொடர்பாக தமிழரசுக் கட்சியினர் ஆழமாகச் சிந்திக்க வாய்ப்புள்ளது. கடந்த காலத்தில் சிங்கள ஜனாதிபதிகள் 46 ஆண்டுளாக ஏமாற்றியுள்ளதை தமிழரசுக் கட்சியினர் மறக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அரியநேத்திரன் என்பதல்ல விடயம். பல சிவில் கட்டமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் பொது வேட்பாளர்  என்பதை தமிழரசுக்கட்சி உணர்வதாகத் தெரிகிறது.

கேள்வி:

அனுரவின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்தான பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றது. குறிப்பாக தமிழர்களுக்கு சாதகமாக பல விடயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

பொதுவாக நோக்கினால் ஊழல் மோசடி கையூட்டு வீண்விரயம் கொள்ளை என்பவற்றைத் தடுக்கும் விஞ்ஞாபனமாக அது உள்ளது. பாதுகாக்கப்பட்டு வரும் குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்தும் விடயமும் கூறப்பட்டுள்ளது. நல்லாட்சிக்கால அரசியல் தீர்வு தொடர்பான  யாப்பு விடயத்தினைத் தொடரவுள்ளதாகவும், இன விகிதாசாரத்தை மாற்றும் திட்டமிட்ட குடியேற்றக்களைத் தடுக்க உள்ளதாகவும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது. இருந்தும் தமிழரின்  இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு பற்றிக் குறிப்பிடவில்லை.அதனைத் தெளிவுபடுத்தாமை குறைபாடாக உள்ளது.

கேள்வி:

வடக்கு கிழக்கு இருக்கும் இன்றைய சூழ் நிலையில்  தமிழ் பொதுவேட்பாளர் அவசியம்  குறித்து என்ன  கருதுகின்றீர்கள்?

1982  இல் இருந்து எட்டு ஜனாதிபதித் தேர்தல்கள் மூலமாக  ஜனாதிபதிகள்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இரு ஜனாதிபதிகள்  இடைக் கால ஜனாதிபதிகளாகப் பதவி ஏற்றுள்ளனர். இதில் அனைத்து ஜனதிபதிகளும் தமிழர்களை ஏமாற்றியுள்ளனர்.

இந்த ஏமாற்றத்தினதும் மாற்று விளைவே தமிழ்ப் பொது வேட்பாளர் ஆகும். இவ்வாறு ஏமாற்றிய சிங்கள வேட்பாளர்கள் மீது தமிழர்கள் வெறுப்படைந்துள்ளனர். இந்நிலையில், தமிழர்களின் ஒற்றுமை, தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை,தமிழர்களின் ஒரே குரலிலான தீர்வு என்பவற்றை உள்நாட்டுக்கும், சர்வதேசத்திற்கும் கூற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டேருக்கு 15 ஆண்டுகளாக நீதி கிடையாமை, தமிழ் அரசியல் கைதிகளின் முழுமையான விடுதலை, தொல்லியல் ஆக்கிரமிப்பு இவ்வாறான விடயங்களில் கடந்த காலத்தில் ஜனாதிபதிகள் ஏமாற்றுவதையே தமது தந்திரமாகக்கருதி வந்துள்ளனர். எனவே ஜனநாயகப் போராட்டத்தின் ஒரு வடிவமாக தமிழ்ப் பொது வேட்பாளரை 83 சிவில் சமூகங்கள் சார்ந்த கட்டமைப்பு கருதுகின்றது. அதனை ஏற்க வேண்டியும் உள்ளது.

கேள்வி:

வடக்கு கிழக்கில் இன்று தமிழ் பொதுவேட்பாளர்களை எதிர்ப்பவர்களின் நோக்கம் எதுவாகவுள்ளது?     

இதனை உண்மையில் அவர்களிடமே கேட்க வேண்டும். தமிழ் வேட்டாளர் தவிர்ந்த வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களுடன் ஏதும் ஒப்பந்தங்கள் தனிப்பட்ட முறையில் செய்திருக்கலாம் என்று மக்கள் ஐயமுறுகின்றனர். அதாவது உரிமை சார் விடயங்களை விட, வேறு விடயங்களில் அக்கறை காட்டுகின்றார்களோ தெரியவில்லை. மேலும் ஐந்தாண்டு காலமைய குறுகிய சிந்தனையாகவும் அமையலாம்.

கேள்வி:

எதிர்காலத்தில் தமிழ் மக்களும் புலம்பெயர் மக்களும் எவ்வாறான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்று கருதுகின்றீர்கள்? 

ஒற்றுமையாக ஒரே கொள்கை ஒரே இலக்குடன் பயணிக்க வேண்டும். தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை ஒவ்வொன்றுக்குமான தீர்வில் கருத்தொருமைப்பாட்டினை எட்ட வேண்டும். புலத்திலிலுள்ள உறவுகளும் புலம் பெயர்ந்த உறவுகளும் மோதிக் கொள்ளாமல், புரிதலுடன் ஒரே இலக்குடன் செயலாற்ற வேண்டும்.

சமஷ்டித்தீர்வு, சர்வதேச விசாரணை, வடக்கு கிழக்கில் தமிழர் தீர்வு தொடர்பாக கருத்துக் கணிப்பு போன்றவற்றில் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும். தமிழ்த் தேசியத்தை சிதைக்கின்ற, ஒற்றுமையைக் குலைக்கின்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. தரகுநிலை அரசியல் தவிர்க்கப்பட வேண்டும்.