சிங்கள அரசுக்கும், இந்திய அரசுக்கும் உள்ள விசுவாசத்தையும் தமிழ் மக்களின் அபிலா சைகளையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத தனது இறுமாப்பான போக்கையும் தமிழரசுக் கட்சி மீண்டும் காட்டியுள்ளது. அமிர்தலிங்கத்தின் காலத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தமிழரசுக் கட்சி சளைத்தது அல்ல.
ஆனால் இந்த தடவை அது திட்டமிட்ட முறையில் மக்களை ஏமாற்றியுள்ளது. இந்தியாவின் மிரட்டல்களுக்கு பணிந்த தமிழரசுக் கட்சியின் தலைமைப் பீடம் தமிழர்களை ஏமாற்ற மிகச் சிறந்த திட்டத்தை வகுத்துக் கொண்டது மட்டுமல்லாது அது தான் மக்களை ஏமாற்றியதாகவும் தற்போதும் நம்பிக்கொண்டிருக்கின்றது.
இலங்கை அரச தலைவர் தேர்தல் என்பது மிகவும் சிக்கலான களமாகவும், யாருக்கும் பெரும்பான்மை அற்ற ஒரு தேர்தலாகவும் இந்த தடவை மாறியுள்ளது.
இலங்கை அரச தலைவரை தெரிவுசெய்யும் உரிமையை சிங்கள மக்கள் 2009 ஆம் ஆண்டுடன் இழந்துவிட்டனர். ஆனால் தற்போது தான் அவர்கள் அதனை ஆணித்தரமாக உணருகின்றனர். எனினும் அதனால் எந்த பலனும் கிட்டப்போவதில்லை. பிராந்திய வல்லரசுகளான இந்தியா, சீனா மற்றும் உலக வல்லரசான அமெரிக்கா ஆகிய நாடுகளே அரச தலைவரை தீர்மானிப்பதில் பிரதான பங்கு வகிக்கின்றன.
கடந்த சில வருடங்களில் இலங்கையையும், பாகிஸ்தானையும் அமெரிக்காவிடம் இழந்தது. இந்தியா பின்னர் மாலைதீவும் சீனாவி டம் பறிபோயிருந்தது. இந்த வருடம் பங்களாதேசையும் இழந்தது. இவை அனைத்தும் இந்தியா சுற்றிவளைக்கப்படுகின்றது என்ற செய்தியை இந்திய உளவுத்துறைக்கு அனுப்பியுள்ளது.
எனவே தான் இலங்கை தேர்தலில் தனது முழு பலத்தையும் பயன்படுத்த திட்டமிடுள்ளது இந்தியா. ஆனால் இந்தியாவுக்கு சார்பான அரச வேட்பாளர்கள் என்று யாரும் அங்கு இல்லை. ஜே.வி .பி.யின் புதிய அரசியல் பிரவேசத்தின் தலைவரான அனுரகுமர திஸநாயக்காவை இந்தியா அழைத்து பேசினாலும், அவரின் அமைப்பு அடிப்படையிலேயே இந்திய எதிர்ப்பு சக்தியாகும். 1990 களில் இந்திய படை தோல்வியுடன் வெளி யேறியதற்கு ஜே.வி.பியும் ஒரு காரணம்.
ரணிலை பொறுத்தவரையில் அவர் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் கொண்டுவரப்பட்டவர். இந்தியா அவரை விரும்பாது. சஜித் பிரேமதாசாவை பொறுத்தவரை யில் அவரின் தந்தை ரணசிங்க பிரேமதாசா ஒரு தீவிர இந்திய எதிர்ப்பாளர்.
எனினும் ரணிலினாலும், அமெரிக்காவி னாலும் கொண்டுவரப்பட்ட அனைத்துலக நாணயநிதியத்தின் கடன்பொறியில் இருந்து இலங்கையை மீட்பேன் இந்தியாவுடன் இணைந்து பயணிப்பேன் என்ற அவரின் கொள்கைகளை இந்தியா ஓரளவு ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டத்தில் உள்ளது.
எனவே தான் இந்தியாவின் தூதுவர் சந்தோஸ் ஜா வடக்கு கிழக்கிற்கு பயணம் மேற்கொண்டு தமிழ் கட்சிகளின் ஆதரவுகளை மறைமுகமாக திரட்டி சஜித்துக்கு மறைமுக ஆதரவுகளை வழங்க முற்பட்டிருந்தார்.
ஆனால் கடந்த 75 வருடங்களாக சிங்கள மற்றும் இந்திய அரசுகளால் ஏமாற்றப்பட்ட தமிழ் இனம் தனது இறமையை தக்கவைக்கும் நடவடிக்கையாக தனக்கான ஒரு வேட்பாளரை களமிறக்கியுள்ளது.
முதலில் அதனை ஒரு கேலிக்கூத்தாகவே இந்தியா நினைத்தது ஆனால் நாள் செல்ல செல்ல தமிழ் மக்களின் ஒருங்கிணைவு இந்திய புலனாய்வுத்துறையையும், யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத்தூதரகம் என்ற பெயரில் இருக்கும் இந்திய உளவு அமைப்பான றோவின் காரியாலயத் தையும் ஆட்டம் காணவைத்துள்ளது.
இந்திய தூதுவரால் முடியவில்லை என்ற தும் இந்தியாவின் மிக முக்கிய அதிகாரியான அஜித் தேவால் களமிறக்கப்பட்டார்.
அவரை இந்தியாவின் 007 அதாவது ஜேம்ஸ் பொன்ட் என இந்திய வட்டாரங்கள் அழைப்பது ண்டு. ஏழு வருடங்களாக பாகிஸ்தானில் முஸ்லீம் போல் வேடமணிந்து உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், பல திரைமறைவு நடவடிக்கையி லும் படுகொலைகளிலும் ஈடுபட்டவர். சீனாவி லும், மியான்மாரிலும் இரகசியமாக தங்கியிருந்து பணியாற்றியவர்.
இந்தியாவின் விமானங்களை கடத்துவ தற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளை 15 தடவைகளுக்கு மேல் முறியடித்தவர். 1984 ஆம் ஆண்டு அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சீக்கிய அமைப்பினரின் நடவடிக்கைகளை ஒரு முச்சக்கரவண்டியின் சாரதி போல சென்று கண்காணித்து அதன் பின்னர் சிறப்பாக திட்டமிடப்பட்ட நடவடிக்கையில் தானே படையினருடன் கோவிலுக்குள்ளும் சென்றிருந்தார்.
கடந்த வருடம் கனடாவில் இடம்பெற்ற சீக்கிய தலைவரின் படுகொலை அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை முயற்சி என்பவற்றின் பின்னணியிலும் அவர் இருப்பதா கவே கருதப்படுகின்றது. அதாவது அவரின் பணிகள் என்பது மிரட்டும் நடவடிக்கையாகவே இருப்பதுண்டு.
அவரை உலகம் அறியாததற்கும், அவரின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கும் கனடா முதல் அமெரிக்கா வரை திணறுவதற்கு காரணம். அவர் கணணிகளை பயன்படுத்துவதில்லை. எந்த சமூகவலைத்தளங்களையும் அதாவது முக நூல், வற்ஸ்அப் போன்றவற்றை கூட அவர் பயன்படுத்துவதில்லை. இந்தியாவின் கணணி மென்பொருட்களை பயன்படுத்தியே அவரின் உரையாடல்கள் அமைவதுண்டு.
அவரின் இலங்கை வரவின் பின்னர் தான் தமிழரசுக் கட்சி தனது நாடகத்தை ஆரம்பித்தது. அதாவது இந்த நாடகத்தின் நடிகர்கள் அக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா, தற்போதைய தலைவராக தெரிவுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சி.சிறீதரன், மகிந்தாவின் விசுவாசியாக இருந்து பின்னர் தமிழ் தேசியவாதியாக மாறிய சாணக்கியன் மற்றும் சுமந்திரன்.
சஜித்தை ஆதரிப்பது என இவர்கள் அனைவரும் இந்தியாவின் அழுத்தத்தின் பின்னர் ஒரு வாரத்திற்கு முன்னரே ஏகமனதாக இரகசியமாக கூடி முடிவெடுத்துவிட்டனர். அதனை உறுதி செய்யவே தேவால் வந்திருந்தார்.
அதன்பின்னர் தான் நாடகம் அரங்கேறியது. அதாவது வழமைபோல தாம் பின்னால் இருந்துகொண்டு சுமந்திரனை முன்னுக்கு அனுப்பி சுமந்திரன் செய்துவிட்டார் என தமிழ் மக்களுக்கு தாம் நல்லவர்களாக காட்டும் படலம் ஆரம்பமாகியது.
அதற்கு உதவியாக பிரித்தானியாவில் உள்ள ஒரு ஆலயம் இந்தியாவின் அனுசரணையுடன் சிறீதரனை பிரித்தானியாவுக்கு அழைத்தது. அரச தலைவர் தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்களே உள்ள நிலையில், கட்சி முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலையில் அதன் முக்கியஸ்தர் எனப்படும் சிறீதரன் பிரித்தானியா வந்ததே இந்தியாவும் பிரித்தானியா வாழ் சில தமிழ் மக்களும் இணைந்து நடத்திய மிகச் சிறந்த நாடகம்.
அங்கு இருக்கவேண்டியவர் ஏன் இங்கு வந்தார் என பலர் இது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர். சாவகச்சேரி வைத்தியசாலை கடும் நெருக்கடியை சந்தித்து வீதியில் இறங்கி மக்கள் போராடியபோது யாழ் வந்த சிங்கள அமைச்சருக்கு ஆடிக்கூழ் கொண்டுவரவில்லை என வருந்தியவர் அவர். அதனால் தான் ஆடிக்கூழ் அரசியல்வாதி என தமிழ் மக்கள் அவரை அன்போடு அழைப்பதுண்டு.
அதன் பின்னர் மாவைசேனாதிராஜா தனக்கு சுகமில்லை என்ற வழமையான நாடகத்தை ஆரம்பித்தார். அவர்கள் இருவரும் நாடகத்தை ஆரம்பித்ததும் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்ற சமிக்கை சுமந்திரனுக்கு அனுப்பப்பட்டது.
வழமைபோல சுமந்திரன் சிறீதரன் மற்றும் மாவையின் உத்தரவுக்கு அமைவாக தமிழ் மக்களால் பரிந்துரை செய்யப்பட்ட தமிழ் வேட்பாளரை நிராகரித்தார். சிங்கள வேட்பாளர்களுக்கு இடை யூறு செய்யாமல் அவரை தேர்தலில் இருந்து வெளியேறுமாறும் எச்சரித்தார், அதாவது சிறீ, மாவை மற்றும் சுமந்திரன் ஆகியோரால் தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை அது. அதன் பின்னர் தமிழரசுக்கட்சி தாம் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக அறிவித்தது.
உடனடியாகவே தமிழ் தேசியத்திற்காக உழைக்கின்றோம் என கூவிக்கொண்டு தேசியத்தை விற்று பிழைப்பு நடத்தும் தமிழ் முன்னனி ஊடகங்கள் ஆர்ப்பரித்து எழுந்து மாவையை அணுகின. அவர் தனக்கு எதுவும் தெரியாது என இந்தியாவினால் எழுதிக்கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டின் முதலாவது பக்கத்தை வாசித்தார்.
பின்னர் மறுநாள் மத்தியகுழுவின் முடிவுக்கு கட்டுப்படுவதாக சுமந்திரனின் உத்த ரவை ஏற்பதாக கூறி இந்தியாவின் ஸ்கிரிப்டின் இறுதிப் பக்கத்தை வாசித்தார். நாடகம் முடிந்தது. சிறீதரன் பிரித்தானியாவில் தமிழ் தேசியம் பேசினார், அவரின் தமிழ்தேசிய தாளத்திற்கு சில பிரித்தானியா தமிழர்கள் அபினயத்துடன் ஆடவும் தயங்கவில்லை.
மாவையின் வழிமொழிதல் வந்ததும் இந்தியாவின் பிரதான ஊடகங்கள் தமிழ் பிரதான கட்சி சஜித்துக்கு ஆதரவு என்ற செய்திகளை முதன்மைப்படுத்தி வெளியிட்டன. அதன் பின்னர் தமிழ்தேசியம் பேசும் தமிழ் வர்த்தக ஊடகங்கள் தமிழ் வேட்பாளரை ஓரம்கட்டி தமது எஜமானர்கள் அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க வசதியாக சஜித்துக்கான ஆதரவை வெளியிட ஆரம்பித்தன.
மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிய சந்தோசத்தில் தமிழரசுக் கட்சியும், அதன் விசுவாச ஊடகங்களும் பெருமிதம்கொண்டன. வெளியில் பார்த்தால் குற்றவாளி சுமந்திரன் போலவே இருக்கும் ஆனால் உண்மையான குற்றவாளிகள் மாவைசேனாதிராஜாவும், சிறீதர னும், சிறீதரைனை பிரித்தானியாவுக்கு அழைத்து அவரை காப்பாற்ற முற்பட்ட பிரித்தானியா தமிழர்கள் சிலருமே. சுமந்திரன் வெறும் அம்பு தான். எய்தவனை விடுத்து அம்பை நோவதால் அர்த்தமில்லை.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமிழ் பொதுவேட்பாளரை வலுவாக ஆதரிப் பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற் கொள்ளவேண்டும். அதன் மூலம் தமிழரசுக் கட்சியின் அரசியல் வாழ்வுக்கு அமிர்தலிங்கத்தின் காலத்தில் அடிக்கவேண்டிய சாவுமணியை தற்போது அடிக்கவேண்டும். அடுத்த பொதுத் தேர்தலுக்கான பொதுக்கட்டமைப்பை இன்றிலிரு ந்து வலுவாக கட்டியமைக்கவேண்டும்.
இன்று தமிழ் பொதுவேட்பாளருக்கு எதிராக களமிறங்கிய சிங்கள விசுவாச தமிழ் பிரிதிநிதிகள் மற்றும் தமிழ் கட்சிகள் அனைத்தும் அரசியலில் இருந்து அகற்றப்படவேண்டும்.
அதனை நோக்கி ஒவ்வொரு தமிழ் மகனும் பயணிக்கவேண்டும். அதுவே தற்போதைய காலத்தின் நியதி. சிங்கள தேசத்தில் ஏற்பட்ட அரகலிய போரட்டம் எவ்வாறு சிங்கள ஊழல் வாதிகளை அரசியல் அனாதைகள் ஆக்கியதோ அதனை ஒத்த ஒரு போராட்டம் தமிழர் பிரதேசத்தில் வேண்டும் என்பதை தான் இந்த நிகழ்வுகள் எமக்கு உணர்த்தியுள்ளன.