தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை இல்லை என்ற மாயையை அரசாங்கம் உருவாக்குவதாக கஜேந்திரகுமார் சாடல்

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை உட்பட அரசியல் பிரச்சினைகள் குறித்து கருத்துரைத்த தற்போதைய அரசாங்கம் அதனை மறந்து செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தற்போது அபிவிருத்திகள் தொடர்பிலேயே அரசாங்கம் கருத்துரைப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தாங்களே பெரிய கட்சி என்றும் தங்களுக்கே மக்கள் ஆணை வழங்கி உள்ளதாகவும் ஜேவிபியினர் கூறுகின்றனர். இதனை உள்ளூரிலும் சர்வதேச மட்டத்திலும் கூட தெரிவித்து வருகின்றனர்.
எனவே இந்த பொய்ப் பிரச்சாரத்தையும் ஜேவிபியின் ஏமாற்று தனங்களையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசிய நிலைப்பாடோடு அவர்கள் இப்போது இல்லை எனவும் ஜே.வி.பியினர் கூறி வருகின்றனர். அவர்களுக்கு சமஷ்டியோ சுயாட்சியோ அவசியமில்லை என்றும் அவர்களை சமத்துவமாக கருதினால் இலங்கையர் என்ற அடையாளத்துடன் வாழ்வார்கள் என்றவாறும் ஜே.வி.பியினர் கருத்துக்களை பரப்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.