தமிழ் பொதுவேட்பாளருக்கே ஆதரவு: கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் அழைப்பு 

தமிழ் பொதுவேட்பாளர் என்பது கிழக்கு மாகா ணத்தினைப் பொறுத்த வரையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இதற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து  சிறுபான்மை சமூகங்களும் ஆதரவு வழங்கவேண்டும் என கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்,‘வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம்,  அந்த மக்கள் அனைத்து உரிமையுடனும் வாழும் தகுதியைக் கொண்டுள்ளார்கள். வடக்கு கிழக்கு   என்பது  தமிழ் மற்றும் முஸ்லீம்கள் வாழும் பகுதி என்ற காரணத்தினால் இந்த நாட்டில் ஆட்சிபீடமேறிய அனைத்து சிங்கள தலைவர்களும் அந்த மக்களின் உரிமையினை மறுதலித்தே வந்துள்ளனர்.

காலத்திற்கு காலம் பல்வேறு பசப்பு வார்த்தை களை கூறி வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மை மக்களை ஏமாற்றி தமது வாக்குகளைப் பெறும் சிங்கள ஜனாதிபதிகள் வெற்றிபெற்றதும் தமது கோரமுகத்தினைக் காட்டிய வரலாறே அதிகமாக காணப்படுகின்றது.

தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் இந்த நாட்டில் ஏனைய இனங்கள் அனுபவிக்கும் உரிமைகளைப்பெற்று தமது பகுதிகளை தாங்களே ஆட்சி செய்யும் கோரிக்கையினையே காலத்திற்கு காலம் விடுக்கின்றனர். அதுவும் இந்த நாட்டிற்குள் தாமும் சுதந்திரமாக வாழும் நிலைமையினை ஏற்படுத்துங்கள் என்ற கோரிக்கையினை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இருந்தபோதிலும் எந்த கோரிக்கையினையும் ஏற்காது வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மை சமூகத்தினை அடக்கி தமது அடக்குமுறைகளையே பெரும்பான்மை ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர். யுத்தம் நிறைவுபெற்று 15வருடங்களை கடந்துள்ளபோதிலும் இன்னும் சிறுபான்மை சமூ கத்திற்காக எந்த சிங்கள அரச தலைவரும் செயற்படாத நிலைமையே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையிலேயே 09வது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவுப்புகள் வெளியாகியுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் பொதுவேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தினை   தமிழ்-முஸ்லிம் மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் இணைந்து செயற்படுவதன் மூலமே எதிர்காலத்தில்  நிம்மதியாக வாழமுடியும். இல்லாது போனால் முஸ்லிம் மக்களும் அடக்குமுறைகளுக்குள்ளாகி தமது உரிமைக்காக போராடும் நிலைமைகள் ஏற்படும்.

எனவே இன்றைய நிலையில் வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மை சமூகம் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கி தமது உரிமைக்கோரிக்கையினை இலங்கை மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் சொல்லவேண்டும். இல்லாது போனால் குரல் அற்ற சமூகமாக மாறும் நிலைமையே ஏற்படும் என்பதை பொறுப் புள்ள சிவில் சமூகம் என்ற அடிப்படையில் தெரிவித்துக்கொள்கின்றோம்.கட்சிவேறு பாடுகளை மறந்து வடக்கு கிழக்கு மக்கள் ஒரு குடையின் கீழ் ஒன்றுபடுவதற்கான சந்தர்ப்பத்தினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கோரிக்கையினை முன்வைக்கின்றோம்’ என்றுள்ளது.