சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் குரலற்றவர்களின் குரல் அமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலைகளில் நேரடியாகச் சென்று பார்வையிடுமாறும், அவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தருமாறும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் தம்மால் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுமெனவும், உரிய இடங்களுக்கு கொண்டுசென்று அவர்களின் விடுவிப்புத் தொடர்பில் தம்மால் வலியுறுத்தப்படுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.



