தமிழ்ப் பொதுவேட்பாளா்? – அகிலன்

Tamil politicians தமிழ்ப் பொதுவேட்பாளா்? - அகிலன்ஒக்ரோபரில் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தோ்தலில் பிரதான வேட்பாளா்கள் எவராலும், 50 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பது முக்கிய கேள்வியாகியுள்ள நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விடயம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. தென்னிலங்கை அரசியல் சக்திகள் பொது வேட்பாளா் என்ற விடயத்தை உன்னிப்பாக அவதானிப்பதற்கும் இது காரணமாக உள்ளது. ஆனால், தமிழ்த் தரப்பினா் இந்த விடயத்தை வெற்றிகரமாக முன்னகா்த்துவாா்களா என்பதுதான் இன்றுள்ள பிரதான கேள்வி!

ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்ட பரபரப்பில் தென்னிலங்கை அரசியல் சக்திகள் உள்ள அதே வேளையில், தமிழ் அரசியல் கட்சிகள் பொது வேட்பாளர்கள் என்ற விடயத்தில் குழம்பிக் கொண்டுள்ளன. கடந்த காலங்களிலும் இரண்டு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி வேட்பாளராக தமிழர்கள் களமிறங்கி இருந்தாா்கள். ஆனால் அவர்களால் தமிழ் மக்களின் ஆதரவை போதிய அளவில் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

இப்போது பிரதான தமிழ் தேசியக் அரசியல் கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை களத்தில் இறக்குவதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இது சாத்தியமா என்ற கேள்வி பல முனைகளில் முன்வைக்கப்படுகின்ற போதிலும் சிவில் அமைப்புகள் புத்திஜீவிகள் சிலரும் இதன் பின்னால் செயல்படுவதை அவதானிக்க முடிகின்றது. கொள்கையளவில் இதனைப் பலரும் ஏற்றுக்கொண்டாலும், நடைமுறையில் இது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்ற கேள்வியையும் அவா்கள் முன்வைக்கின்றாா்கள்.

தமிழ் காங்கிரஸின் தலைவராக இருந்த குமார் பொன்னம்பலம் 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். தமிழ் மக்களுடைய வாக்குகள் தனக்கு கிடைக்கும் என அவர் எதிர்பார்த்த போதிலும் 1,13,881 வாக்குகளை மட்டுமே அவரால் பெற முடிந்தது. இதேபோல் இரண்டு தடவைகள் அதாவது 2010, 2015 ஆகிய ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சிவாஜிலிங்கம் ஒவ்வொரு முறையும் 40 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளை மட்டுமே பெற்றாா். இதன் மூலம் தமிழ் வேட்பாளர் என்ற கருத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

முன்னர் குமாா் பொன்னம்பலமும், சிவாஜிலிங்கமும் களமிறங்கியதற்கும் இப்போது உள்ள நிலைமைக்கும் வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக சிவாஜிலிங்கமும் குமார் பொன்னம்பலமும் களமிறங்கிய போது அவர்களது கட்சிகள் மட்டுமே அவர்களை ஆதரித்தன. சிவாஜிலிங்கத்திற்கு அந்த ஆதரவுகூட முழுமையாக இருக்கவில்லை. அவர்கள் மிகவும் குறைந்த வாக்குகளை பெறுவதற்கு அதுவும் காரணமாக இருந்திருக்கலாம். அதனால், அவா்கள் இருவருமே அந்தக் காலத்தில் கோமாளிகளாகவே பாா்க்கப்பட்டனா். யதாா்த்தத்துக்குப் புறம்பான ஒரு அரசியலைச் செய்பவா்களாகப் பாா்க்கப்பட்டனா்.

இப்போது தமிழ் கட்சிகள் அனைத்தும் இணைந்து பொதுவான வேட்பாளர் ஒருவரை களம் இறக்க வேண்டும் என்று கருத்து முன்வைக்கப்படுவதால் அது சர்வதேசரீதியாக ராஜதந்திர கவனத்தை பெறும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது. இவ்விடயத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இணைந்து செயற்பட்டால் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும்!

இந்த இடத்தில் தான் முக்கியமான ஒரு பிரச்சனை இருக்கின்றது. ஐந்து கட்சிகள் இணைந்து உருவாக்கிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பொது வேட்பாளர் என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி வருகின்றது. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் இந்த கருத்துடன் இணைந்து செல்கின்றது. இறந்தபோதிலும் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியாக இருக்கின்ற தமிழரசு கட்சி இந்த விடயத்தில் உத்தியோபூர்வமான முறையில் தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தவில்லை. தமிழசுக் கட்சிக்குள் உருவாகி இருக்கும் தலைமைத்துவ போட்டியும் அந்த விவகாரம் எப்போது நீதிமன்றம் சென்றிருப்பது இந்த நிலைமைக்கு ஒரு காரணமாக கூறப்படுகின்றது.

இந்த விவகாரத்தில் தமிழ் அரசு கட்சியின் முக்கிய தலைவர்கள் முரண்பாடான கருத்துக்களை பகிரங்கமாக முன்வைக்கின்றனர். சுமந்திரன், சிவிகே சிவஞானம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொது வேட்பாளர் என்ற கருத்துக்கு எதிராக செயல்பட்டு வருகின்றார்கள். மறுபுறத்தில் தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீதரன் பொது வேட்பாளர் என்ற என்பதற்கு ஆதரவாக கருத்துகளை முன்வைத்து வருகின்றார். இரண்டாவது மட்டத்தில் உள்ள பலரும் ஆதரவாகவே இருக்கின்றாா்கள்.

தமிழரசு கட்சி தமிழ் மக்களின் பிரதானமான கட்சியாக இருப்பதால் அதனுடைய ஆதரவை பெற்றுக் கொள்ளாமல் இந்த விவகாரத்தை முன்நகர்த்த முடியாது என்ற உண்மையை ஏனைய கட்சிகள் உணர்ந்து கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. ஆனால் தமிழரசு கட்சிக்குள் உருவாகியிருக்கும் நெருக்கடி எப்போது முடிவுக்கு வரும் இந்த விவகாரத்தில் உறுதியான ஒரு நிலைப்பாட்டை தமிழரசு கட்சியி எப்போது வெளிப்படுத்தும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

தமிழரசு கட்சியின் உறுதியான ஆதரவு இல்லாமல் இந்த விவகாரத்தை முன் நகர்த்தினால் கடந்த காலங்களில் குமார் பொன்னம்பலத்திற்கும் சிவாஜி லிங்கத்திற்கும் நடைபெற்றது போன்ற ஒரு நிலைமையை இவ்வாறு களம் இறக்கப்படும் தமிழ் பொது வேட்பாளருக்கும் ஏற்படலாம். சுமந்திரன் போன்றவர்கள் பொது வேட்பாளர் என்ற கருத்திற்கு எதிரான பிரச்சாரங்களையும் முன்வைக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே ராஜபக்ஷக்களின் நிகழ்த்தி நிரலின் படி தான் இந்த பொது வேட்பாளர் நிறுத்தப்படுகிறாா் என சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

அதே வேளையில் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வைத்து வருகின்றது. பொது வேட்பாளர் என்பது யாரோ ஒருவரை வெற்றி பெற செய்வதற்கான சதி என்ற கருத்தை கஜேந்திரகுமார் முன்வைத்து வருகின்றார். அதை வேளையில் கஜேந்திரகுமாரின் தந்தை குமார் பொன்னம்பலம் 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார் என்பதும் கவனிக்கத்தக்கது.

கொள்கை ரீதியான முரண்பாடுகளுக்கு அப்பால் அரசியல் ரீதியான முரண்பாடுகள்தான் இங்கு மேலோங்கியிருக்கின்றது.

சிங்கள தலைவர்களுக்கு வாக்களித்து தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதையும் தமிழ் மக்களுடைய கோரிக்கை என்ன என்பதையும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவதற்காக இவ்வாறு பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் கட்சிகள் தெரிவிக்கின்றன. அதே வேளையில் இவ்வாறு தமிழ் வேட்பாளர் ஒருவரை அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து களத்தில் இறக்கினால் அது தமிழ் மக்களுக்கு பேரம் பேசும் சத்தியை பெற்றுக் கொடுக்கும் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது.

நடைபெறப்போகும் தேர்தலில் வேட்பாளர்கள் எவரும் 50 வீதத்தை எட்ட முடியாத நிலைமை ஏற்பட்டால் தமிழ் கட்சிகளுடன் பேரம் பேச வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்ப்படும் எனவும் தமிழ் தரப்பினர் கணக்கு போடுகின்றார்கள்.

தமிழ்த் தரப்பைப் பொறுத்தவரையில் இந்த விடயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இரண்டு விடயங்கள் முக்கியம். ஒன்று அனைத்து தமிழ்க் கட்சிகளும் அரசியல் காள்புணா்வுகளைப் புறந்தள்ளி கொள்னை ரீதியாக இந்த விடயத்தில் இணைய வேண்டும். இரண்டு தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன என்பதை ஒருமித்த குரலில் முன்வைக்க வேண்டும். இந்த இரண்டும் சாத்தியமானால், தமிழ் மக்கள் அந்தக் கோரிக்கைக்குப் பின்னால் அணிதிரள்வாா்கள்.