பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் பங்கேற்கும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணம் மன்னார் மாவட்டத்தில் நாளை (02) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது.
சங்கு சின்னத்திற்கு ஆதரவு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்ல்லைத்தீவு மாவட்டங்களை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட உள்ளது.
மன்னார் மாவட்டத்திற்கான பிரசார நடவடிக்கை நாளை பகல் 11.00 மணிக்கு மன்னார் வெள்ளாங்குளம் சந்தியில் இருந்து ஆரம்பமாகிறது. அங்கிருந்து பொதுவேட்பாளருக்கு மன்னார் மாவட்ட மக்கள் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டு இலுப்பை கடவை ஊடாக திருக்கோதீஸ்வரம் கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட உள்ளார்.
தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு அடம்பன் கிராமத்தை அடைந்து பின் உயிலங்குளம் பாதை ஊடாக பயணித்து பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொண்டு மன்னார் நகர பகுதியை அடைந்து அங்கு பிரச்சார கூட்டம் நடைபெற உள்ளது.