தமிழ்த் தேசியப் பரப்பின் ஒற்றுமைக்கான இறுதிச் சந்தர்ப்பத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி தவறவிட்டுள்ளதாக ரெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த கட்சியின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியத் தரப்பாக ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதற்கு பல தடவைகள் தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எடுத்துக்கொண்ட முயற்சிகள் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பல விட்டுக்கொடுப்புகள் அரவணைப்புகளின் அடிப்படையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையிலான கொள்கை ரீதியான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், வன்னியில் தமிழ் தேசிய கட்சிகளிடம் சபைகளை கையளிப்பது குறித்து திங்களன்று தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானத்தின் அலுவலகத்தில் அந்த கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனுடன் சந்திப்பு இடம்பெற்றது.
அதன்போது வன்னியின் அரசியல் சூழ்நிலை பற்றி கலந்துரையாட முற்பட்ட வேளையில் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறதோ அதற்கான பதில் நடவடிக்கை வன்னியில் அமையுமென தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் தெரிவித்தார் என்று ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
வன்னியில் அதிக சபைகளை ஆளும் தரப்பு கைப்பற்றும் நிலை காணப்படுகிறது. பல சபைகளில் தனி ஒரு கட்சியாக அவர்கள் ஆசனங்களை பெற்றுள்ளார்கள்.
தமிழ் தேசியப் பரப்பினர் இணைந்து செயலாற்றாது விட்டால் இந்த சபைகளை ஆளும் தரப்பிடம் இழக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய பரப்பினர் ஒன்றிணைந்து விட்டுக் கொடுப்போடு வடக்கு கிழக்கில் அனைத்து சபைகளையும் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதற்கு கால அவகாசம் உள்ளது.
அதை நாங்கள் முன்னெடுக்க விரும்புகிறோம் என்பதையும் தெரிவித்தோம்.எனினும், அதற்கு தகுந்த பதில்கள் கிடைத்திருக்கவில்லை என்றும் ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் வழங்கிய ஆணையை ஏற்று தமிழ்த் தேசியப் பரப்பினர் ஒன்று கூடி ஆட்சியை கைப்பற்றுவதே மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.
அதற்காக விட்டுக்கொடுப்பு, அரவணைப்பு என்பன மிக அவசியமாகும்.
தலைமைகளின் வறட்டு கௌரவம் இதற்கு தடையாக இருக்கக் கூடாது என்றும் ரெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.