தமிழ்தேசிய கட்சிகள் ஒன்றுபட தவறுமாயின் உள்ளூராட்சி சபை தேர்தலில் பின்னடைவை சந்திப்பது உறுதி!-பா.அரியநேத்திரன்

கடந்த 2024, ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசிய கொள்கையை முன்னிறுத்தி தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிட்டு வடக்கு  கிழக்கில் 226343 வாக்குகளை பெற்று தமிழ்தேசிய கொள்கையை சர்வதேசத்துக்கு நிருபித்து இலங்கையில் ஐந்தாம் இடத்தைப்பெற்றவரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி மத்தியகுழு உறுப்பினரும், தமிழ்த்தேசிய அரசியல் ஆய்வாளரும், தமிழ்த்தேசியவாதியுமான பா.அரியநேத்திரன்  இலக்கு ஊடகத்திற்க்கு  வழங்கிய சிறப்பி  நேர்காணல் 
கேள்வி:
உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்களின் செயற்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
பதில்:
உள்ளூராட்சி தேர்தல் மட்டுமல்ல இலங்கை யில் எவ்வாறான தேர்தல்கள் இடம் பெற்றாலும் தமிழ்மக்களை பொறுத்தவரை குறிப்பாக வடகிழக்கு தாயக தமிழர்கள் தமிழ்த் தேசி யத்தின் கொள்கை ரீதியிலான பலத்தையும், உறுதியையும் நிருபிக்க கூடிய களமாக அனைத்து தேர்தல்களிலும் தமிழர்களின் ஒற்றுமை அமைய வேண்டும்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல், மாகாண சபை தேர்தல் இரண்டும் விகிதாசார முறையிலும், உள்ளூராட்சி சபை தேர்தல் கலப்பு முறையிலும் இடம்பெறும் தேர்தல்களாகும்.உள்ளூராட்சி சபை தேர்தல் கடந்த 2018ல் தான் கலப்பு முறை தேர்தலாக அறிமுகப் படுத்தப்பட்டது. அந்த தேர்தலில்  எந்த ஒரு அரசியல் கட்சிகளோ, சுயேட்சை குழுக்களோ அறுதிப் பெரும்பான்மையுடன் அனேகமான உள்ளூராட்சி சபைகளை ஆட்சி செய்ய முடியவில்லை.
இன்னொரு கட்சியில் அல்லது சுயேட்சை குழுவில் (தொங்கு நிலை) தங்கியிருக்கும் நிலை யில்தான் 2018, தேர்தலில் உள்ளூராட்சி சபைகள் இருந்தன.தற்போது ஏழு வருடங்களுக்கு பின்பு மீண்டும் எதிர்வரும் 2025, மே மாதமளவில் அந்த தேர்தல் இடம்பெறும், வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய கட்சிகளை ஆதரித்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக, சமஷ்டி அடிப்படையில் இணைந்த வடகிழக்கே எமது தீர்வு என்ற இலக்கில் உறுதியாக தமிழர்கள் உள்ளனர் என்பதை இந்த தேர்தலிலும் சர்வதேசத்துக்கு வெளிக்காட்டும் விதமாக செயல்பட வேண்டும்,உள்ளூர் அபிவிருத்தி, கிராமிய பொரு ளாதார விடயங்களுக்கு அப்பால் எமது பலத்தை யும், எமது அரசியல் கொள்கையையும் இந்த தேர்தலிலும் நிருபிக்க வேண்டுமானால் தமிழ் தேசிய கட்சிகள் ஒரு புள்ளியில் சந்திப்பதே நல்லது.அதற்கு எவரும் செயல்வடிவில் தயாரில்லை என்பதே கசப்பான உண்மை.
கேள்வி:
வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து தமிழர் தரப்பு ஒரு அணியில் போட்டியிடும் சாத்தியங்கள் உண்டா?
பதில்:
சாத்தியம் என்பது உதட்டவில் உள்ளது உள்ளத்தால் இல்லை. வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் தாயகம் என்பதும், வடகிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான தீர்வே என்பதை வெளிக்கொணரும் தேவை அனைத்து தமிழ்த்தேசிய கட்சிகளுக்கும் உள்ள தால் ஒன்று பட வேண்டியது காலத் தின் தேவை.
ஏனெனில் கடந்த பாராளு மன்ற பொதுத் தேர்தலில் வடகிழக்கில் உள்ள தமிழ்மக்கள் குறிப்பாக வடமாகாண தமிழர்கள் கற்றுத்தந்த பாடத்தை தமிழ்தேசிய கட்சிகள் கவனத்தில் எடுத்து ஒன்றுபட தவறுமாயின் நிச்சயமாக உள்ளூ ராட்சி சபை தேர்தலில் தமிழ்த்தேசிய கட்சிகள் பின்னடைவை சந்திப்பது உறுதி.இது மாகாணசபை தேர்தலிலும் தாக்கத்தை செலுத்தும். இதனை கருத்தில் கொண்டு தான் ஏற்கனவே ஒன்பது தமிழ்த் தேசிய கட்சிகள் கூட்டாக  உள்ளூராட்சிசபை தேர்தலில் களமிறங்கும் ஒரு முயற்சி ஒருபக்கமும், இலங்கைதமிழ் அரசுக் கட்சியில் உள்ள முதலாவது பதில் தலைவர், இரண்டாவது பதில் செயலாளர் இருவரும் தமிழ் தேசிய கட்சிகளுடன் ஒற்றுமையாக இருப்பதாக காட்டும் முயற்சியும் மக்களுக்கு படம் காட்டப் படுகிறது.
ஆனால் தேர்தலில் ஒருமித்து ஒரு சின் னத்தில் போட்டியிடக்கூடிய வாய்புகள் குறை வாகவே உள்ளது.
தற்போது ஏறக்குறைய 12, தமிழ்தேசிய கட்சிகள் உள்ளன அதில் உள்ளவர்கள் குறைந்தது நான்காக பிரிந்து நான்கு சின்னங்களில் போட்டியிடும் சந்தர்ப்பமே உள்ளது என்பதே எனது அனுபவ ரீதியிலான கணிப்பீடு.
தமிழ்த்தேசியகட்சிகளுடன் தமிழ்தேசியத் துக்கு எதிரான சில கட்சிகளும் தமிழ்தேசிய கட்சிகளுடன் இணைவதற்கு முயற்சிப்பதை காணமுடிகிறது. இதனை தமிழ்மக்கள் ஏற்பதற்கு தயாரில்லை.
உதட்டில் ஒற்றுமையும் உள்ளத்தில் வேற்று மையுமே சகல தமிழ்ர்தேசிய கட்சிகளினதும் போக்காக கடந்த 16, வருடங்களும் நாம் கண்ட உண்மை. எல்லோருக்கும் பதவி ஆசையும் தலைமைத்துவப்போட்டியும் உண்டு.இதற்கு நல்ல உதாரணம் கடந்த 2024,ல் வடகிழக்கில் மூன்று தமிழ்த்தேசிய கட்சிகளில் இருந்து 10, பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் தெரிவானார்கள்.அதில் தமிழரசுகட்சியில் 8, பேர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் ஒருவர், ரெலோவில் ஒருவர் இந்த பத்துப்பேரும் கடந்த வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் (25/02/2025) ஒற்றுமையாக ஒரு முடிவு எடுக்கவில்லை, தமி
ழரசுகட்சி எட்டுப்பேரும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் பகிஷ்கரித்தார்கள், கஜேந்திரகுமார் எதிர்த்து வாக்களித்தார், செல்வம் அடைக்கல நாதன் ஆதரித்து வாக்களித்தார் இதில் இருந்து என்ன தெரிகிறது .? மூன்று கட்சிக ளும் மூன்று நிலைப்பாடு பிறகு எப்படி இவர்களுக்குள் ஒற்றுமை வரும்.? எப்படி தமிழ் மக்களை ஒற்றுமை யாக வழிநடத்த முடியும். சிந்திக்க வேண்டியது அல்லவா?
கேள்வி:
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளூ ராட்சி சபைகளில் ஆதிக்கம் செலுத்தும் வலுவில் தேசிய மக்கள் சக்தி உள்ளதா?
பதில்:
ஆதிக்கம் செலுத்தும் வலு கிழக்கை விடவும் வடக்கில் தேசிய மக்கள் சக்திக்கு உள்ளது அதற்கான காரணம் ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில்  மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் வன்னி மாவட்டத்தில் இருவருமாக மொத்தம் ஐந்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது.
அதனை வைத்து தற்போது உள்ளூராட்சி சபை தேர்தல்களில் சபைகளை கைப்பற்ற பல திட்டங்களை அவர்கள் வகுத்து இப்போதே செயல்படதொடங்கியுள்ளனர்.குறிப்பாக கடல் தொழில் மீனவர்கள், விவசாயிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பெண்கள் அமைப்புகள், விளையாட்டு கழங்கள் என கிராமிய மட்டங்களில் ஊடுருவி பல செயல்பாட்டாளர்களை நியமித்து அபிவிருத்திகளை செய் வதையும், மக்கள் மத்தியில் கலந்துரை யாடல்களை ஏற்படுத்தி மூளைச்சலவைகளை செய்வதையும் அறியமுடிகிறது.
வல்வெட்டித்துறையில் ஜனாதிபதி சென்று பாடம் எடுத்ததும், வட்டுக்கோட்டையில் பிரதமர் சென்று வகுப்பு வைத்ததும் தமிழ்மக்களை கவரும் திட்டமாகவே இருந்தது.
வடமாகாணத்தில் கூடுதலாக தாம் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றலாம் என்ற கருத்து தேசியமக்கள் சக்தி ஜனாதிபதி தொடக்கம் பிரதமர் வரையும் உள்ளது.அதை பகிரங்கமாகவே கூறியும் உள்ளனர்.அதுபோல் கிழக்கு மாகாணத்திலும் இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் விதமாக இப்போதே உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்பாளர்களை தெரிவு செய்யும் நகர்வுகள் அவர்களின் தொகுதி அமைப்பாளர்களை கொண்டு ஆரம்பிக்கப் பட்டுள்ளதை காணலாம். கிழக்கிலும் உள்ளூராட்சி சபை தேர்தலில் இம்முறை தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட பலர் ஆர்வம் காட்டிவருவதை காண லாம்.ஆனால் தேசிய மக்கள் சக்தி எதிர்பார்கும் அளவில் தனியாக எந்த பிரதேச சபைகளையும் கைப்பற்றக்கூடியதாக தமிழ் மக்கள் திரண்டு அவர்களை ஆதரிக்க மாட்டார்கள் தமிழ்த்தேசிய கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக உள்ளூராட்சி சபைகளில் வேட்பாளர்களை நிறுத்தினால் கணிச மான ஆசனங்களை பெறலாம்.
இருந்தபோதும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் உறுப்பினர்களை அரவணைத்து கட்சியை பலமாக கொண்டு செல்லும் நிலைமை இல்லாம லும், இருக்கும் உறுப்பினர்களையும் விளக்கம் கோருதல், விலக்குதல்  என்ற குறுகிய எண்ணம் உள்ளதாலும் தமிழரசு கட்சி நீதிமன்றங்களில் வழக்காடப்படும் நிலை தொடர்வதாலும் இந்த உள்ளூராட்சி தேர்தலிலும் பல சபைகளில் பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதே உண்மை.