‘தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு பொதுவான அரசியல் குறிக்கோளை முன்வைக்க வேண்டும்’ என்று வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
‘வடக்கு கிழக்கானது இலங்கையின் ஒரு அம்சமாகத் தொடர்ந்து இருப்பதே அதன் பாதுகாப்புக்கும் வருங்கால வாழ்க்கைக்கும் உசிதமானது’என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தற்போது அனைவரதும் குறிக்கோள் முழுமையான அதிகாரப் பகிர்வு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும்’. ‘அதற்கு மேல் வெளிப்படையாக நாம் சிந்திக்கத் தலைப்பட்டால் சட்டத்துடன் போராட வேண்டி ஏற்படும்’. ‘ஏற்கனவே சட்டத்துடன் போராடி ஆயுதங்கள் மௌனித்திருக்கும் நிலையை நாம் கருத்திற் கொள்ள வேண்டும்’ என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
‘அந்த அடிப்படையில் புதியதொரு கூட்டமைப்பை சகல தமிழ்த் தேசியக் கட்சிகளையும் உள்ளடக்கி உருவாக்குவது கடினமில்லை’. ‘ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் இதுவரை காலமும் பல தமிழ்த் தேசியக் கட்சிகளை வழிநடத்தி வரும் தலைமைத்துவங்கள் மக்களின் சந்தேகத்திற்கும் வெறுப்புக்கும் ஆளாகியுள்ளார்கள்’. ‘அவர்கள் மக்களுக்குப் போராடுவதாகக் கூறி தமது சுயநலத்துக்காகவே அரசியல் செய்து வந்துள்ளார்கள் என்று மக்கள் நம்புகின்றார்கள்’. ‘கடைசியாக நடந்த தேர்தல்கள் தமிழ் மக்களின் இந்த மனோநிலையை ஒருவாறு பிரதிபலிக்கின்றது’.
‘ஆகவே தமிழ்த் தேசியக் கட்சிகள் அனுபவமுள்ள படித்த பண்புள்ள சுயநலமற்ற பிரதிநிதிகளை ஒரு புதிய கூட்டமைப்பில் இடம்பெற வழிவகுக்க வேண்டும்’ என்று வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



