தமிழின படுகொலைக்கு ஒரு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் என்று தென்னிந்திய பிரபல இயக்குனரும் நடிகரும், இசையமைப்பாளருமான ரி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
பாத்தி கட்டி செடி வளர்ப்பார்கள் ஆனால் சித்துபாத்தியிலே எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை இவர்கள் புதைத்து வளர்த்திருக்கிறார்கள் என்று அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி சித்துபாத்தியில் அகழ்வாராய்ச்சி பணிகளின் போது இதுவரை 47க்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
‘இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தப் பகுதியில், இராணுவத்தின் வெறியாட்டத்தையும், அந்த ஓநாய்களினுடைய களியாட்டத்தையும், தமிழர்கள் மீது அவர்கள் கொண்ட காட்டத்தையும் சர்வதேச உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்’. ‘இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த இடத்தில் அவர்கள் தமிழர்களை மாய்த்தார்களாக? அல்லது தமிழர்களை உயிரோடு புதைத்தார்களா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘இந்தப் புதைகுழிக்குள்ளே இத்தனை உடல்கள் மீட்கப்படுகின்றன. தோண்டத் தோண்ட என்புக்கூடுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதை பார்க்கும்போது தமிழர்களாகிய எமது நெஞ்சம் பதைபதைக்கிறது’.
எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை இவர்கள் புதைத்து புதைகுழி வளர்த்திருக்கிறார்கள்.
‘ஆக பயங்கரவாதிகள் தமிழர்களா? அல்லது இந்த சிங்கள இராணுவமா?’ என்றும் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் ரி.ராஜேந்தர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையெல்லாம் பார்க்கும் போது தமிழினம் கொதித்து எழ வேண்டும். அங்கு தமது சொந்தங்களை, பந்தங்களை, உற்றாரை, உறவினரை இழந்து விட்டு இன்றுவரை அவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா? எறிந்தார்களா? புதைந்தார்களா? சிதைத்தார்களா? என்று தெரியாமல் நாதியற்று அலைந்து கொண்டிருக்கின்ற தமிழின உறவுகளின் உள்ளங்கள் எப்படி பாடுபட்டிருக்கும். இதை எல்லாம் பார்க்கின்ற போது சர்வதேச அளவிலே எமது மக்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும்.
அந்த நீதிக்காக தமிழர்கள் ஒவ்வொருவரும் குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம் என்று தென்னிந்திய பிரபல இயக்குனரும் நடிகரும், இசையமைப்பாளருமான ரி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.