தமிழர் பகுதியில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும்!

தமிழர்  பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தலுடன் தொடரும் ஆக்கிரமிப்புகள் யாவும் நிறுத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் உகந்தை மலையிலுள்ள ஆலயம் அதனுடன் இணைந்த கடற்கரையிலுள்ள மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர் பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தலுடன் ஆக்கிரமித்தலும் அண்மைக்காலமாக தொடர்கின்றது என்று கூறியுள்ளார். உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் புராதன தமிழர் வாழ்வியல் ஆதாரங்களைச் சிதைப்பதும் அதை அழிப்பதும் ஆக்கிரமிப்பதும் என்ற அடிப்படையில் குறித்த புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இது உகந்தை முருகன் ஆலய புராதன வரலாறு கொண்ட புண்ணிய பூமியாகும். இங்கு எவ்வாறு அவர்கள் புத்தர் சிலை நிறுவலாம் எனும் கேள்வியோடு உகந்தைமலையில் 25 அடி முருகன் சிலை நிறுவும் பணியைத் தடுத்த வன ஜீவராசிகள் திணைக்களமும் அரசும் ஏன் இதைத் தடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் உகந்தை முருகன் ஆலய வளாகத்திலும் அதனைச் சூழவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் படையினர் புதிய பல நிபந்தனைகளையும் விதித்து ஆலய சூழலைச் சுருக்கியுள்ளனர்.
பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.

வள்ளிமலை போன்ற இடங்களுக்குச் செல்லவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இது தவிர சந்நியாசி மலையும் பறிபோகும் அபாயம் காணப்படுகிறது என்று என்று மனித உரிமை செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.