தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் இன்றும்! – புலவர் நல்லதம்பி சிவநாதன்

கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடலிலும், அது பற்றிய தெளிவாக்கக் கருத்தியல் அணுகுமுறைகளிலும், ஆய்வுலகச் செல்நெறி, செய்நெறி செயற்பாடுகளிலும் ஈர்ப்போடு  ஈடுபட்ட ஒருவனாக இக்கட்டுரைத் தொடரினை எழுத முற்படுகின்றேன்!

ஒரு பொறியியற் கட்டட தலைமைத்துவ மேலாண்மைத்துறைத் தொழிலனுபவத்தோடு மட்டுமன்றி, ஒரு மொழி, கலை, கவிதை, இலக்கிய, வாழ்வியல் வரலாற்று மாணவனாகவும், படைப்பாளியாகவும், புலமைத்துவப் பற்றாளனாகவும்,  அரங்க, கலை ஆற்றுகையாளனாகவும்,  தமிழர் சமுதாயப் பங்காளியாகவும் கடந்த ஐம்பது – அறுபது தசாப்தங்களாக இயங்கிய அனுபவத்தோடு – குமுறல் – ஆழ்கடலுக்குள் என்னுயிர் முன்னோர் ‘சத்தியம் சாகாது’, ‘காவியச் சலங்கைகள்’ ஆகிய படைப்புகளின் நூலாசிரியனென்ற உரிமையோடும் இக்கட்டுரையின் கருப்பொருளையும், பேசு பொருளையும் அணுக முயல்கின்றேன்!

எல்லாவற்றிற்கும் மேலாக எனது முன்னோர் மீது நான் கொண்ட மாறாத பற்றும் நம்பிக்கையோடு… இந்தியாவின் முக்கிய பகுதிகள்… தென்கிழக்காசியாவின் சில முக்கிய நாடுகள் மற்றும் ஒருசில ஆபிரிக்க, அரேபிய நாடுகளென யான் செய்த பயணங்களினூடும்.. தமிழர் தொல்லியல் வரலாற்றுத்துறையில் நீண்டகால இலக்கிய வரலாற்று வாழ்வியல் பண்பாட்டு ஈடுபாடும், அகழாய்வு அனுபவமும், அறிவாற்றலும் கொண்ட அறிஞர் பெருமக்களுடன் நான் ஏற்படுத்திக் கொண்ட உறவு நிலையினூடும், நான் பெற்ற பயில்நெறிப் பட்டறிவும்தான் என்னை எனது பின்னணியில் நின்று வழிநடத்துகின்றது என்பதனை நான் ஈண்டு பதிவு செய்ய விரும்புகின்றேன்!

இலக்கிய நுகர்வும், வாழ்வியல் நுழைவும், பண்பாட்டுப் பதிவுப் புரிந்துணர்வுமற்ற ஓர் ஆய்வுப் புலத்தினை விட்டு மேலோங்கி எழுந்து, இன்று  உலகப் பரப்பில் வியாபித்து நிற்கின்ற தமிழர்  தொல்குடி வரலாற்றுத் தேடலை உச்சிமோந்து வரவேற்கின்ற ஒரு பூரிப்புடன் எனது எழுத்தோவியத்தை வரைய முனைகின்றேன்!

எமது முன்னோரின் கல்லோவியங்களைச் சொல்லோவியங்களோடு இணைத்துப் பார்க்கின்ற  செப்பேடுகளை  எமது முன்னோர்  செப்பிய ஏடுகளுடன் ஒப்பீடு செய்ய வல்ல உய்த்துணைர்வும்  உள ஈடுபாடும் கொண்ட ஓர் ஆய்வுலகச் சமுதாயம் இன்று உதயமாகியுள்ளது கண்டு உணர்வு பொங்கி நிற்கின்ற ஒருவனாக எனது எழுத்தினை இங்கு பதிவு செய்கின்றேன்!

சங்க இலக்கியங்களிற் பொதிந்து கிடக்கும் எமது முன்னோர் அறிவியல் சான்றுகளை பலவோர் உண்மைத்துவத்தைச் செல் நெறியினை – புலமைத்துவச் சொல் நெறியினை – இனங்காணுகின்ற ஓர் தொல்லியலின் சிந்தனையாக்கத்தைக் கண்டு சிலிர்த்து நிற்கும் ஒருவனாக எனது விரல்களை நகர்த்துகின்றேன்!

எனது இளமைக் காலத்தில் எனது தாயக வாழ்வின் போது எமது மூதாதையர்கள், முன்னோர்களின் வரலாறு பற்றியும், வாழ்வியல் பண்பாட்டு விழுமியங்கள் பற்றியும் பேசியும், எழுதியும், கற்றும், கற்பித்தும் வந்த அனைவரும் தங்கள் கருத்தியற் கோட்பாடுகள்  யாவற்றையும் மேற்குலக ஆய்வாளர்கள், அறிஞர்களின் சிந்தனைச் செல்நெறியை அடித்தளமாக வைத்தே கட்டியெழுப்பி வந்ததை நான் அறிந்தும், தெரிந்தும், உணர்ந்தும் வந்துள்ளேன்!

எமது வாழ்வியல் பண்பாட்டு வழிபாட்டு மரபுகளை  இலக்கிய செழுமைகளை ஒரு ‘அநாகரீகப் பழங்குடி’யின் நம்பிக்கையாகப் படம் பிடித்துக் காட்டிய ஒரு கல்விக் கொள்கையை நேரிற் சந்தித்தவன் நான்!

ஆனால் இன்றோ நீரிலும் நிலத்திலும் பாரின் திசைகள் அனைத்திலும் படர்ந்து, பரவி, ஊடுருவி நிற்கின்ற உயரிய நாகரீகத்தின் – பழங்குடிப் பூர்வீகத்தின் வாரிசுகள் நாமென நெஞ்சு நிமிர்த்தி நிற்கின்ற ஓர் ஆய்வுலகத்தினை அரவணைக்கின்ற அற்புத அனுபவத்தின் பூரிப்பில் நிற்கின்றேன்!

கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக இலண்டனிலிருந்து இயங்கி வருகின்ற தமிழவையின் ‘தேடலும் கூடலும்’ என்னும் இணையவழி மெய்நிகர் அரங்கில் சமகால அறிவியல், தொல்லியல், பண்பாட்டு, வாழ்வியல் பரப்புகளை ஓர் ஒப்பியல் அணுகுமுறையில் யாம் உரைத் தொடர்களை நிகழ்த்தி வருவதன் விளைவாக தொல்லியற் களப்பணியும், கல்விப் பணியும், ஆய்வுப் பணியும் ஆற்றுகின்ற ஆளுமைகளையும், அனுபவங்களையும் கேட்டும், உணர்ந்தும் வருகின்றோம்.

‘உய்த்துணர்வையும்’ , மெய்ப்பொருள் காணும் ‘மெய்யறிவையும்’ துணையாகக் கொண்டு தமது இலக்கிய நுகர்வின் புலமைத்துவப் பண்டுபுகளோடு  வரலாற்றுத் தரவுகளை, தகவல்களை  உற்று நோக்கவல்ல பலரைச் சந்திக்கின்ற அவரோடு கூடிச் சிந்திக்கின்ற வாய்ப்பினை இன்றைய தொழில்நுட்பமும் ‘கொரோனா’ முடக்க நிலையும் எமக்கு அளித்துள்ளது!

இன்னல்கள் – இழப்புகளின் மத்தியிலும் – நன்மைகளையீட்டலாமென்ற இச் சூழலில் – ‘தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் நேற்றும் இன்றும்’ என்னும் இக்கட்டுரைத் தொடரை எழுத விளைகின்றேன்!

இவை எனது தனிப்பட்ட மற்றும் சமுதாய அனுபவங்களின் பிரதிபலிப்பாகவும் எனது தேடல்களின் தெளிவுரையாகவும் அமையுமென்று உறுதிபட நம்புகின்றேன்!

சத்தியம் சாகாது – அது

தீயிலும் வேகாது!

நித்தியமாயிருக்கும் – அது

நீதியின் வழிநடக்கும்!

  • சத்தியம் சாகாது நூலிலிருந்து

“அன்பே தமிழ்! அதிலே தமிழ்!“

எனது பார்வையில் தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல்  – நேற்றும் – இன்றும்

  • புலவர் நல்லதம்பி சிவநாதன்
  • (தேடல் 1)

1970களின் பிற்பகுதியில் ஒரு பொறியியற் பட்டப்படிப்பு மாணவனாகக் கல்வி பயின்ற காலங்களில் தமிழர் தொல்குடி வரலாறு வாழ்வியல் பற்றிய தேடலில் ஆழமான ஈடுபாட்டுடன் இயங்கிய அனுபவம் எனக்கு உண்டு!

அக்காலங்களில் இலண்டனிலுள்ள நூலகங்கள் மற்றும் இவை பற்றிய ஆய்வு நூல்கள், கட்டுரைகள், சொற்பொழிவுக் குறிப்புகள் எனப் பலவகையான உசாத்துணை மூலகங்களை தேடித் தேடி அலைந்து தகவல்களையும், தரவுகளையும் சேகரித்து வந்திருக்கின்றேன்!

கிழக்குலகத்திலும், மேற்குலகத்திலும் தமிழர் தொல்குடி சார்ந்த தகவல்களையும், தரவுகளையும் தேடுகின்ற போதெல்லாம் எனக்கு பலவித ஏமாற்றங்களும், விரக்தியும், வேதனையுமே விளைந்த கணங்கள் பற்பல!

‘திராவிடம்’ என்ற சொற்பதத்தினுள் தமிழர் தொல்குடி வரலாறு தொடங்கியும், தொக்கியும் நின்றதேயொழிய தமிழர் தொன்மையைத் துலக்கிய வெளியீடுகள் மிக மிக அரிதாகவே அக்காலகட்டத்தில் எனது கண்களுக்கும், காதுகளுக்கும் எட்டின எனலாம். அதுவும் தொழில்நுட்பம் பெரிய அளவில் விரிவடையாத ஒரு காலத்திலேயே நான் எனது தேடலை அறிவியல் ரீதியாக ஆரம்பித்திருந்தேன்.

நான் இலண்டனிலே பொறியியற் கல்வியை மேற்கொண்ட காலங்களில் ‘கணினி’ என்பதே ஒரு ‘நெல் ஆலை’  இயந்திரம் போலக் காட்சி தந்தது. அதனுடைய பயன்பாடு மற்றும் அறிவியலில் அதன் வகிபாகம் இவற்றினை முழுமையாகக் கண்டு கொள்ள முடியாத ஒரு சந்ததியாகவே நாம் அப்போது எமது கல்விப் பயணத்தை ஆற்றி வந்தோம்.

மேலும் அக்காலத்தில் கைத்தொலைபேசியின் பாவனையும் எம்மிடையே அறிமுகமாகியிருக்கவில்லை. வெளிப்படையாகக் கூறினால், பணப்புழக்கமும் கூட அன்றிலிருந்த எமது வாழ்க்கைச் சூழலில் மிக மிக அரிதாகவேயிருந்தது.

‘Pablic Telephon Booth’ அதாவது ‘பொது மக்கள் தொலைபேசிக் கூண்டுகள்’ தான் எமக்கான தொடர்பு சாதனமாக இருந்து வந்தது. ஒரு தேவை குறித்தும் உறவு குறித்துமே தொலைபேசித் தொடர்பாடலை நாம் மேற்கொள்வதுண்டு.

இச்சூழலில் எமது தாயக நிலங்களான இலங்கை, இந்தியாவில் கூட தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு எம்மிடம் அப்போது பெரிய அளவில் பணக் கையிருப்பு இருப்பதில்லை. எம்மில் பலர் இரவு வேலை செய்தே கல்விப் படிப்பினை மேற்கொள்ள வேண்டிய சூழலில் இருந்திருக்கிறோம். தவணைக் கட்டணம் கட்டுவதென்பதே ஒரு பயங்கர அனுபவமாகக் கண்ட பிறநாட்டு மாணவர்கள் நாம். வாடகை அறையின் பலத்த விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரு தொலைக்காட்சி கூடப் பார்க்க முடியாத ஒரு மாணவச் சந்ததியில் வாழ்ந்தவர்களுள் நானும் ஒருவன்.

குளிப்பதற்கும் கூடிக்குலாவுவதற்கும் எமது கல்வி நிறுவனங்களின் வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தியே எமது மாணவ வாழ்க்கையை நாம் ஓட்டிக் கொண்டிருந்தோம். எனவே இவ்வாறான ஒரு சூழலில்தான் நான் எனது தேடல்களை ஆரம்பித்தேன் எனலாம்.

எனினும் இவ்வாய்வுத் தேடலைத் தொடர்ந்தும் ஒரு பல்கலைக்கழக வாளாகம் கட்டமைக்கப்பட்ட ஆய்வு அணுகுமுறையில் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டாமையினால் நான் அவ்வப்போது எனக்குக் கிடைத்த தகவல்களையும், தரவுகளையும், குறிப்புகளாகவும், குறுங் கட்டுரைகளாகவும் பதிவு செய்து கொண்டே வந்தேன்.

இதன் மத்தியில் எனது பொறியியற் பட்டப்படிப்போடு எனது தமிழ் மொழி, கலை, கவிதை, இலக்கியம், பண்பாடு, தாயகம் சார்ந்த எனது பணிகளையும், பங்களிப்புகளையும், படைப்பாக்கங்களையும் ஆற்றி வந்ததன் விளைவாக எனது தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடலை முழுமையான ஒரு மனக்குவிப்போடு தொடரும் சூழல் என்னைச் சுற்றி உருவாக்கம் பெறவில்லை.

1979இல் எனது பொறியியற் படிப்பு நிறைவுக்கு வந்த போது, நான் நீர்பாசனப் பொறியியலிலும் ஒரு மேலதிக பட்டப்படிப்பினை மேற்கொண்டு அதனை நிறைவு செய்து விட்டு 1981இல் லிபியாவிற்கு பொறியியல் – நிலவியல் சார்ந்த தொழில் வாய்ப்பினைப் பெற்றுப் பயணித்தேன். லிபியாவில் ஒரு பல்லினக் கலாச்சார சூழலில் நான் பெற்ற அனுபவங்களைத் தொடர்ந்து 1983இன் இறுதிப் பகுதியில் இலண்டனிற்கு மீண்டும் வந்த போது எனது தேடலைத் தொடரும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

தொடர்ச்சியாக இது பற்றிய வாசிப்புகளை மேற்கொண்டதன் விளைவாக மேன்மேலும் பல நூற்றுக் கணக்கான குறிப்புகளையும், குறுங் கட்டுரைகளையும் பதிவு செய்து கொண்டே வந்தேன்.

தொடரும்….