தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்: இலங்கை அரசிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

இந்தியாவின் முன்னணி இடதுசாரி கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இலங்கையில் தமிழர்கள் சமத்துவம் மற்றும் கண்ணியத்துடன் வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு கடந்த வார இறுதியில் (ஜனவரி 3-5) தமிழகத்தின், விழுப்புரத்தில் நடைபெற்றது.

அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று, “இலங்கையிலுள்ள தமிழர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் சமத்துவதுடன் வாழவும், மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும்”, என்பதாகும்.

“இலங்கையில் தமிழ் மக்கள் சமத்துமின்மைக்கும், நீண்ட காலமாக இன வெறி தாக்குதலுக்கும் ஆளாகி வந்த நிலையில், அது உள்நாட்டு யுத்தத்திற்கும், அமைதி இன்மைக்கும் வழி வகுத்தது. அதனால் அனைத்து பகுதி மக்களும் பாதிப்புக்கு உள்ளாகினர்”.

தற்போது தமது ’சக தோழரான’ அனுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றுள்ள நிலையில், சமத்துவம் மற்றும் அதிகாரப் பகிர்வு உறுதிப்படுத்தப்படுத்தப்பட வேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”தற்போது இலங்கைத் தமிழர்கள் உட்பட அனைத்து சிறுபான்மை மக்களின் ஆதரவு பெற்ற தேசிய மக்கள் சக்தி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளது. இச்சுமூகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி சமத்துவத்தையும் மாகாணங்களுக்கான அதிகார பரவலையும் உறுதி செய்ய வேண்டுமென இம் மாநாடு மேலும் கேட்டுக் கொள்கிறது”.

மேலும் மாகாண சபைகளுக்கு விரைவாக தேர்டலை நடத்த வேண்டும் எனவும், அவற்றை விரைவாக நடத்தி அனைத்து மாகாண சபைகளுக்கும் உரிய அதிகாரங்கள் வழங்குவதன் ஊடாக, தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசு முன்வர வேண்டும் எனவும் அந்த மாநாட்டின் தீர்மானம் கோரியுள்ளது.

இலங்கையில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசும், அதன் தலைவரும் ஜனாதிபதியுமான அனுர குமார திஸநாயக சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பெற்று, அவர்களுக்கு உரிமைகளை அளிக்கும் தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அந்தக் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தீர்மானத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.