தமிழர்களை இலக்கு வைத்து மதுபான சாலைகள் – துரைசாமி நடராஜா

இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் மதுபானசாலைகளை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் சிவில் சமூகத்தினரும் , இளைஞர் அமைப்புக்களும் அதிருப்தியை வெளியிட்டு  வருகின்றன. இது ஒரு நல்ல சகுனமாகும். கல்விமையச் சமூகமாக மலையக சமூகம் மேலெழும்ப வேண்டிய நிலையில் மதுபானச்சாலைகளை அதிகரிக்கும் முயற்சியானது மலையக சமூகத்தின் பல்வேறு அபிவிருத்திகளையும் சீர்குலைப்பதாகவே அமையும் என்பதையும் மறுப்பதற்கில்லை.எனவே இத்தகைய செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவையே என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

இதேவேளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை இலக்குவைத்து மதுபானசாலைகளை அமைக்கும் இனவாதிகளின் நடவடிக்கை அண்மைகாலமாக அதிகரித்து வருகின்றது.இது தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் விழிப்புடன் செயற்பட்டு இத்தகைய செயற்பாடுகளை வேரறுப்பதில் அதீத கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

bar SL தமிழர்களை இலக்கு வைத்து மதுபான சாலைகள் - துரைசாமி நடராஜா‘வாழ்க்கையின் இன்னாத துன்பந்தரும் யதார்த்தங்களில் இருந்து தப்பிக்கொள்ளும் பொருட்டு மில்லியன் கணக்கான இளைஞர்கள் உலகிலே போதைப்பொருட்களை உபயோகிக்கின்றனர்.

போதைப்பொருள் அடிமைகள் ஒரு வகையான நோயாளிகள்.வாழ்க்கை பொருளும் பயனும் உடையது.அதாவது ஒரு நோக்கும் நன்றியுணர்வும் நிறைந்தது என்பதனை அவர்களுக்கு விளங்கச் செய்தல் வேண்டும்’ என்கிறார் அன்னை தெரேசா.போதை அல்லது மது ஒருவரின் உயிரைக் குடிக்கின்றது.போதாக்குறைக்கு அவர் சார்ந்த குடும்பத்தினரையும் கண்ணீரில் மிதக்க வைக்கின்றது.மதுவினால் சீரழிந்த குடும்பங்கள் எண்ணிலடங்காது.பல்வேறு நோய்நொடிகள் ஏற்படுவதற்கும், வாழ வேண்டிய வயதில் மரணத்தை  தழுவுவதற்கும் மது உந்துசக்தியாக அமைகின்றது.வாழ்க்கை என்பது ஒரு முறைதான்.

அந்த வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு இடையூறாக மதுபாவனை அமைகின்றது.மது என்பது  சிலருக்கு தற்காலிக இன்பமாக இருந்தாலும் அது நிரந்தர துன்பமாகும் என்பதனை அவர்கள் விளங்கிக்கொள்ள தவறிவிடுகின்றார்கள். அவ்வாறு விளங்கிக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் அவர்களின் மதுபாவனை எல்லைமீறிப்போய், அவர்களை நடைப்பிணமாக்கி விடுகின்றது.’கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரத்தைப்’ போன்று சிலரின் செயற்பாடுகள் அமைந்து விடுகின்றன.

‘ஒரு நாட்டை அழித்து விடுவதற்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை.ஒரு நாட்டின் இளைஞரை போதைப் பொருளில் மாட்டிவிட்டால் அந்நாடு முழுவதும் திக்கற்று துன்பத்தில் அல்லல்படும்.பௌதீக அழிவுகளின் சிதைவுகளில் இருந்து ஒரு நாட்டை கட்டியெழுப்பலாம்.

ஆனால் உள ரீதியாக இளைஞர் அழிக்கப்பட்ட ஒரு நாட்டிற்கு எவ்விதத்திலும் விமோசனம் கிடைக்கமாட்டாது” என்பது பேராசிரியர் ஆர்.எம்.கல்றாவின் கருத்தாகும்.இக்கருத்தினை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது.ஒரு சமூகத்தின் உரிமைக்குரலை ஒடுக்குவதற்கும், இளைஞர்களின் பாதையை திசைதிருப்புவதற்கும் மதுபாவனையை அச்சமூகத்தினரிடையே ஊக்குவிக்கும் செயற்பாடுகள் உலகளாவிய ரீதியில் இன்னும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இனவாதிகள் திட்டமிட்ட பட்டியலின் அடிப்படையில் அவ்வப்போது இத்தகைய பிற்போக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் அப்பாவி இளைஞர்கள் இனவாதிகளின் இத்தகைய தீய செயற்பாடுகளுக்கு அடிமையாகி தமது வாழ்க்கையையும், சமூகத்தின் எதிர்காலத்தையும் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.

கல்வியில் அரசியல் தலையீடுகள்மலையக சமூகத்தினர் இந்நாட்டில் தனித்துவமான ஒரு சமூகமாக உருவெடுத்துள்ளனர்.இந்நாட்டில் அவர்களின் வரலாறு 200 வருடங்களாகியுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.எனினும் அவர்களின் வரலாற்றுக்கும் வாழ்க்கை அபிவிருத்திக்கும் இடையே அதிகரித்த விரிசல் நிலை காணப்படுகிறது.ஏனைய சமூகங்கள் அடைந்துள்ள அபிவிருத்தி இலக்குகளை மலையக சமூகத்தினர் இன்னும் எட்டிப்பிடிக்கவில்லை.இத்தகைய இலக்குகளை எட்டிப் பிடிப்பதற்கு இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என்பது புரியாத புதிராகும்.

இந்நிலையில் மலையக சமூகம் பல்வேறு நன்மைகளையும் அடைந்து கொள்வதற்கு கல்வியில் அதிகளவு கரிசனை செலுத்த வேண்டியதன் அவசியத்தை புத்திஜீவிகள் தொடர்ச்சியாகவே வலியுறுத்தி வருகின்றனர்.நிலைமை இவ்வாறிக்கையில் மதுபாவனை இம்முயற்சிகளுக்கு தடையாக இருந்துவிடக்கூடாது.

மலையகத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே மதுபாவனை அதிகரித்து காணப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.அதிலும் நுவரெலியா மாவட்டத்தில் மலையகத்திலேயே அதிகமான மதுபாவனை இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் குளிர் காலநிலை மற்றும் சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு அதிகளவில் வருகை தரும் நிலையில் அவர்களிடையே மதுபாவனை அதிகரித்து காணப்படுதல் போன்ற நிலைமைகள் இம்மாவட்டத்தின் மதுபாவனை அதிகரிப்பில் செல்வாக்கு செலுத்துவதாக காரணம் தெரிவிக்கப்படுகின்றது.நுவரெலியா மாவட்டத்தில் கலால் திணைக்களத்தின் அனுமதி பெற்ற 234 மதுபானசாலைகள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்கள் காணப்படுகின்றன.

நிலைமை இவ்வாறிக்கையில் மேலும் புதிய மதுபான சாலைகளை திறப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வலியுறுத்துகின்றன.குறிப்பாக டயகம,இராகலை, தலவாக்கலையின் டெவன் பகுதிகளில் இவ்வாறு மதுபான சாலைகள் திறக்கப்படுவதற்கான அறிவித்தல் கடிதங்கள் குறித்த கிராம அதிகாரிகளால் காட்சிப்படுத்தப்பட்டு ஆட்சேபனைகளை தெரிவிக்கும்படி கோரப்பட்டுள்ளதாக அறிந்துகொள்ள முடிகின்றது.

இதுபோன்றே நுவரெலியா மாவட்டத்தின் இன்னும் சில பகுதிகளிலும், மலையகத்தின் ஏனைய சில இடங்களிலும் மதுபானசாலைகளை திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

சமூகப் பிரச்சினை

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனும் அண்மையில் பாராளுமன்றத்தில் தனது கவலையை வெளியிட்டிருந்தார்.’சுற்றுலாத்துறை கைத்தொழிலை விரிவுபடுத்துவதாகக் குறிப்பிட்டு மலையகப் பகுதிகளில் மதுபானசாலைகளை அமைப்பது முறையற்றது.நுவரெலியா மாவட்டத்தில் டயகம பகுதியில் மதுபான சாலைகளை அமைப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது நுவரெலியா பகுதியில் மதுபான சாலைகளை அமைப்பதற்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.ஆளும் தரப்புக்கு ஒரு உறுப்பினர் சென்றால் அவருக்கு மூன்று மதுபான சாலைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

bar sri lanka தமிழர்களை இலக்கு வைத்து மதுபான சாலைகள் - துரைசாமி நடராஜாஅரசியல் நோக்கத்துக்காக மலையக மக்களின் வாழ்க்கையை இல்லாதொழிக்க வேண்டாம்.பெருந்தோட்ட மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபான சாலைகளை புதிதாக அமைப்பது பாரிய சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் ‘ என்று இராதாகிருஷ்ணன் இதன்போது எச்சரிக்கை விடுத்திருந்தார். உண்மையில் புதிய மதுபான சாலைகளை அமைப்பதென்பது ‘தாழியில் இருந்து அடுப்புக்குள்’ மலையக மக்களை தள்ளிவிடும் ஒரு நடவடிக்கையேயாகும்.

நாட்டில் பாடசாலை மாணவர்களிடையே தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது.இதனால் மாணவர் சமூகத்தின் நிகழ்காலமும் எதிர்காலமும் சீரழிந்து வரும் நிலையில் அரசாங்கம் இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.எனினும் ‘வேலியே பயிரை மேய்ந்த’ சில சம்பவங்களும் இல்லாமலில்லை.

இந்நிலையில் போதைப்பொருள் வியாபாரிகளிடம் இருந்து மாணவர்களைக் காப்பாற்ற தனியான செயலணி வேண்டுமென்ற கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். வடபகுதியில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை நிலையம் ஒன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி  அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 60 வீதமானோர் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடனான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு வயது அடிப்படையில் புனர்வாழ்வளிக்க தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் விசேட புனர்வாழ்வு மையங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அரசதரப்பு செய்திகள் வலியுறுத்துகின்றன.

நாட்டின் நிலைமை இவ்வாறிக்கையில் மதுபாவனை மற்றும் போதைப்பொருள் என்பவற்றை நாட்டில் இருந்தும் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கு துரிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலைமை மேலெழுந்துள்ளது.இந்நிலையில் மலையகப் பகுதிகளிலோ அல்லது நாட்டின் வேறெந்த பகுதிகளிலோ மதுபான சாலைகளை திறக்கும் முயற்சிகள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும் என்பதோடு அதற்கு எதிராக குரல் கொடுக்கவும் வேண்டும் என்பது முக்கியமானதாகும்.

குறிப்பாக மலையக இளைஞர்கள் சிவில் சமூகத்தினருடன் இணைந்து மதுபான சாலைகளை திறக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருவது பாராட்டத்தக்கதாகும்.இளைஞர்களின் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் உலக வரலாற்றில் சாதக விளைவுகள் பலவும் ஏற்படுவதற்கு உந்துசக்தியாக இருந்திருக்கின்றன.

இன்னும் இருந்தும் வருகின்றன.எனவே இளைஞர்கள் இதனை கருத்தில் கொண்டு மதுபான பாவனையை மலையகத்தில் கட்டுப்படுத்தவும் அடித்தளமிடுதல் வேண்டும்.இம்முயற்சி மலையக சமூகத்தின் பல்துறை மேம்பாட்டிற்கும் வாய்ப்பளிக்கும் என்பதோடு ஏனைய சகலதுறை சார்ந்தவர்களும் இளைஞர்களின் இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும். மதுபானசாலைகளை புதிதாக திறக்கும் முயற்சிகளை வேரறுத்து தோட்டங்கள்தோறும் வாசிகசாலைகளை ஏற்படுத்த  மலையக அரசியல்வாதிகள் அரசாங்கத்தினை வலியுறுத்த வேண்டும்.