தமிழருக்காக ஒலித்த ஒரு ஆன்மீகக் குரல் மௌனித்தது – சுரேஷ் அஞ்சலி

மன்னார் மறைமாவட்ட ஆயரும் தமிழ்த் தேசியத்தின் மீது அளவிலா பற்றுக்கொண்டவருமான இராயப்பு ஜோசப் அவர்களின் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்றும் தமிழ் மக்களின் விடியலுக்காகக் குரல்கொடுத்து வந்த ஒரு ஆன்மீகக் குரல் மௌனித்து விட்டது என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆயருக்கு அஞ்சலி செலுத்தி அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

“ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களின் மரணம் என்பது தமிழ் மக்களை மீளாத்துயரில் ஆழ்த்தியிருக்கின்றது. தமிழ் இனத்தின் குரலாக தமிழ் தேசத்தின் குரலாக தனது இறுதிவரை ஒலித்து வந்தவர். தமிழ் இனத்தின் மீதும் தமிழ் மொழியின் மீதும் நீங்கா பற்றுகொண்ட துணிச்சல் மிக்க ஒரு போர்வீரனாகத் திகழ்ந்தவர். தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அயராது உழைத்தவர். யுத்தத்தின்பொழுது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில், ஒரு இலட்சத்து 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பியவர். அதுவே அரசாங்கம் புரிந்த பாரிய இன அழிப்பை சர்வதேச மட்டத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த முதல் சம்பவமாகும்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து மடு தேவாலயத்தில் தஞ்சம் அடைந்தபோது அவர்கள் அனைவரையும் பராமரித்துப் பேணி பாதுகாத்தவர் ஆயர் பெருந்தகை. யுத்தம் முடிந்து மிக மோசமான துன்பச் சூழலுக்குள் மக்கள் அநாதரவாகவும் அச்சத்துடனும் முகாம்களில் அடைபட்டுக்கிடந்த பொழுது தமிழ் மக்களுக்கு துணிச்சலையும் தைரியத்தையும் கொடுத்து நம்பிக்கையூட்டியவர்.

ஆயருக்கும் எனக்கும் இடையில் நிகழ்ந்த தனிப்பட்ட சந்திப்புகளில்கூட நாம் எம் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்தும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு அனைத்து தமிழ்த் தலைமைகளும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம் குறித்துமே பேசியிருந்தோம். அவருடனான சந்திப்புகள் மிகவும் நட்பு ரீதியாகவும் சமூக அக்கறை கொண்டதாகவுமே இருந்து வந்தது.

அன்னாருக்கு எனது சார்பாகவும் எமது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பாகவும் தமிழ் மக்கள் சார்பாகவும் ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரது பிரிவால் வாடி நிற்கும் அவரது குடும்பத்தினருடனும் திருக்குடும்பதினருடனும் கத்தோலிக்க சமூகத்தினருடனும் மன்னார் மறைமாவட்ட மக்களுடனும் எமது துயரைப் பகிர்ந்துகொள்கிறோம்.”