தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.
இதன்படி, திருகோணமலை மாவட்டத்துக்கு ஒரு வருடமும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒரு வருடமும் பொதுச் செயலர் பதவி வழங்கப்படும் என்று தமிழ் அரசு கட்சியின் தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அண்மையில், கிழக்கு மாகாணத்துக்கு சென்று கட்சியினரை சந்தித்துப் பல கட்டப் பேச்சுகளை நடத்தினார். இதன்பிரகாரமே பொதுச் செயலாளர் விவகாரத்துக்கு தீர்வு எட்டப்பட்டது.
இதன்படி, திருகோணமலையின் ச.குகதாசன், மட்டக்களப்பின் ஞா.சிறீநேசன் ஆகியோர் தலா ஒரு வருடம் பொதுச் செயலர் பதவியை வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுச் செயலாளர் பதவியை முதல் வருடத்தில் வகிப்பது யார் என்பதில் இழுபறி நீடிக்கிறது.
இதற்கும் விரைவாகத் தீர்வு காணப்படும்பட்சத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட மத்திய செயல்குழு கூட்டம் நடைபெறாது. விரைவாகவே தேசிய மாநாட்டை நடத்தி பதவியேற்பு நிகழ்வை நடத்த கட்சியின் புதிய தலைமை சிந்தித்து வருவதாகவும் கூறப்பட்டது.
முன்னதாக, தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலாளரை தெரிவு செய்வதற்காக கடந்த மாதம் 27ஆம் திகதி மத்திய செயல்குழு கூடியது. பல வாதப்பிரதிவாதங்களுக்கு பின்னர் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையின்
தலைவர் குகதாசன் பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது. பொதுக்குழுவிலும் குகதாசன் 12 மேலதிக வாக்குகளால் பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டார். எனினும், தெரிவின்போது முறைகேடுகள் நடந்தன என்று சர்ச்சைகள் எழுந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் திகதி நடைபெறவிருந்த தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.