தமிழரசு கட்சிக்கு கதவு திறந்திருப்பதாக கஜேந்திரகுமார் தெரிவிப்பு

தங்களது கூட்டணியிலிருந்து ஒரு சிலர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப் போவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழ் தேசிய பேரவையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் இணைந்து ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய நேர்மையாக பயணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியத்தை குறிப்பிட்டு வாக்கை பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தங்களது இணக்கப்பாட்டை போன்று இலங்கை தமிழரசு கட்சியும் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு வந்து அதனூடாக உள்ளூராட்சிமன்றங்களில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்.
எனவே, தங்களது கூட்டணியில் இணைவதற்கு இலங்கை தமிழரசு கட்சிக்கு எந்த சந்தர்ப்பத்திலும் கதவு திறந்தே இருக்கிறது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற மற்றுமொரு ஊடக சந்திப்பில் கருத்துரைத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பதற்காக தமிழ் தேசிய கட்சிகள் என்ற சொற் பதத்துக்கு பதிலாக தமிழ் கட்சிகளுடன் பேசுவது என்ற அடிப்படையிலேயே தங்களது கட்சி தீர்மானம் மேற்கொண்டதாக தெரிவித்தார்.

அத்துடன் தங்களது கட்சி யாருடனும் கூட்டணி வைப்பதற்கு தீர்மானிக்கவில்லை என்றும் உள்ளூராட்சிமன்றங்களில் அதிக ஆசனங்களை பெற்ற கட்சிகள் ஆட்சியமைப்பதற்காக ஏனைய கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.