இலங்கை தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்தச் சதித் திட்டம் தீட்டப்படுவதாக அந்த கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சிக்கு எதிராக பல்வேறு சதி வலைகள் பின்னப்படுகின்றன. அதிலும் தமிழரசுக்கட்சியை எப்படியாவது சிதைத்து அதனை உடைத்து கட்சியைப் பிளவுபடுத்தி விட வேண்டுமெனச் சிலர் செயற்படுவதாக சி.வி.கே. சிவஞானம் குறிப்பிட்டார்.
‘இந்த அடிப்படையிலேயே புதிய தமிழரசுக் கட்சி உருவாக்கம் குறித்துப் பேசப்படுவதாகவும், உண்மையில் அப்படியாகக் கட்சிக்குள் இருப்பவர்கள் யாரும் கருதவில்லை’ என்றும் அவர் கூறியுள்ளார். ‘அப்படியான எண்ணங்கள் கூட அவர்களிடத்தே இல்லை. ஏனெனில் கட்சியில் பலருடனும் இது தொடர்பில் பேசியிருந்த போது அவர்கள் அனைவரும் இதனை மறுதலித்துள்ளனர்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ‘தமிழ் மக்களின் நீண்டகால பாரம்பரியக் கட்சியாக இருக்கின்ற இந்த தமிழரசுக் கட்சியை எப்படியாவது பிளவுபடுத்த வேண்டுமெனப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன’ என்றும் அதன் பதில் தலைவர் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில் கடந்த 75 வருடகால வரலாற்றில் சோரம் போகாத ஊழலில் ஈடுபடாத தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சியாக இந்தக் கட்சியே திகழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் மாற்றான சிந்தனையில் பொறுப்பான அணுகுமுறையைப் பின்பற்றி அனேகமாக எல்லா இடங்களிலும் சபைகளைக் கைப்பற்றுவதாகவும், ஆட்சியமைக்கத் தேவைப்படும் இடங்களில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேசுவதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறினார்.



