ஜனாதிபதி தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதற்கு தமிழரசுக் கட்சி எடுத்துள்ள முடிவு கட்சியின் முடிவா அல்லது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவா என்ற கேள்வி எழுப்பப் படுகின்றது. இந்த முடிவு அரசியலில் கடுமையான வாதப் பிரதி வாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. வவுனியாவில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழுவின் விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் இருந்து செயற்பட்டவா் சுமந்திரன் என்பதில் சந்தேகம் இல்லை.
என்ன அடிப்படையில், எதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு இன்று வரையில் தமிழரசு கட்சியின் சார்பில் யாருமே தெளிவான பதிலை கூறவில்லை. தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருந்த பிளவுகளையும் இது தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழ் தேசிய அரசியலில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை ஏற்கனவே அறிவித்திருந்தன. ஆனால் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை அதில் ஏற்பட்டிருந்த பிளவுகளும், அதில் ஒரு தரப்பினர் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கே ஆதரவை வழங்க வேண்டும் என்று தீர்மானித்திருந்ததும் உடனடியான தீர்மானம் ஒன்றை தமிழரசு கட்சியால் எடுக்க முடியாமல் போனமைக்கு காரணமாக இருந்தது.
பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பின் னர் அவற்றை ஆராய்ந்து அதில் யாராவது சமஷ்டிக்கு சமமான யோசனைகளையும் முன்வைக்கின்றார்களோ அவர்களை ஆதரிப்பது என்ற முடிவை தமிழரசுக் கட்சி எடுக்கும் என்று சுமந்திரன் ஏற்கனவே கூறியிருந்தார். இதனைத் தீா்மானிப்பதற்கான குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலைமையில் ரணில் விக்கிரம சிங்க, சஜித் பிரேமதாசா, அநுரகுமார திசநாயக்க ஆகியோரின் தேர்தல் விஞாபனங்கள் வெளி வந்துள்ளன. தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் கடந்த திங்கட்கிழமை வெளிவர இருந்த நிலைமையில், ஞாயிற்றுக்கிழமை வவுனி யாவில் கூடிய தமிழரசு கட்சியின் மத்திய குழு அவசரமாக தன்னுடைய முடிவை அறிவித்தது.
சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்ற அவா்களது முடிவுக்கு என்ன காரணம் என்பது தெளிவாக கூறப்படவில்லை. பிரதானமான மூன்று வேட்பாளர்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுமந்திரன் கூறியிருக்கின்றார். ஆனால் சஜித் பிரேமதாசாவின் அறிக்கையில் அவ்வாறு என்ன விடயம் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை சுமந்திரன் விளக்க வில்லை.அதனை விட இந்தத் தேர்தல் விஞ்ஞா பனங்களை ஆராய்ந்து தமிழரசுக் கட்சியின் முடிவை எடுப்பதற்கு யார் பொறுப்பாக இருந்தார்கள் என்பது தொடர்பில் அவர் எதுவும் தெரி விக்கவில்லை. இதற்காக ஒரு குழுவைத் தமிழரசுக் கட்சி அமைத்திருந்தது. ஆனால், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூட இது குறித்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்ற கருத்தைத்தான் முதலில் தெரிவித்திருந்தாா். 24 மணி நேரத்துக்குள் அவா் தனது முடிவை மாற்றிக்கொண்டாா் என்பது வேறு விடயம்!
இதன் மூலம் ஒரு விடயம் மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது, இது தமிழரசுக் கட்சியின் முடிவு என்பதைவிட, இது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு என்பதுதான் அது!சஜித் பிரேமதாசாவுக்கு தமிழரசு மட்டும் ஆதரவை வெளிப்படுத்தவில்லை. பல முஸ்லிம் கட்சிகள், மலையகக் கட்சிகள், வடக்கு கிழக்கு தளமாகக் கொண்டுள்ள சிறிய தமிழ் கட்சியில் உள்ள பலரும் கூட அவருக்கு ஆதரவை தெரிவித்து இருந்தனர். அவ்வாறு ஆதரவை தெரிவிக்கும் போது, அது தொடர்பாக சஜித் பிரேமதாசாவுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி, அது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகளையும் கையொப்ப மிட்ட பின்னரே ஆதரவை அவா்கள் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார்கள்.
ஆனால் தமிழரசு கட்சி மட்டும் எந்த ஒரு பேச்சு வார்த்தைகளையும் நடத்தாமல் புரிந்து உணர்வுடன்படிக்கை எதுவும் செய்யப் படாமல் தங்களுடைய ஆதரவை பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது. அதாவது ஒரு வெற்றுக்கா சோலையில் கையொப்பமிடுவதைப் போன்று ஒரு முடிவைத்தான் தமிழரசுக் கட்சி எடுத்துள்ளது.
தமிழரசு கட்சியின் இந்த அவசர முடிவுக்கு என்ன காரணம் என்ற கேள்வி பலராலும் முன் வைக்கப்படுகின்றது.
கடந்த வாரம் கொழும்பு வந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் பல கட்சிகளையும் சந்தித்திருந்தாா். நான்கு பிரதான ஜனாதிபதி வேட்பாளா்களுடனும் பேச்சுக்களை நடத்தி, அவா்களுடைய அணுகுமுறைகளை நாடி பிடித்துப் பாா்த்தாா். அந்த வரிசையில், தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் அவா் பேசினாா். அனைத்துக் கட்சிகளையும் அவா் ஒன்றாகவே சந்தித்தாா்.
இந்தப் பேச்சுக்களின் போது, தமிழ் மக்கள் தமது வாக்குகளை வீணடிக்காது பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகா் வலியுறுத்தியிருந்ததாக தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன. பொது வேட்பாளரை அவா் திட்டவட்டமாக நிராகரித்த தாகவும் தெரிகின்றது.
இந்தப் பேச்சுக்களைத் தொடா்ந்து, “வெற்றி பெறக் கூடிய, நீங்கள் எதிர்காலத்தில் பேச்சு வார்த்தை நடத்தக்கூடிய ஒவருக்கு உங்களுடைய ஆதரவை வெளிப்படுத்துங்கள்” என்று இந்திய தரப்பு சொன்னதாக ஒரு தகவல் உள்ளது. காலம் தாழ்த்தாது இந்த முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் இந்திய தரப்பு கூறி இருந்ததாக தகவல். காலம் கடத்தப்படும் நிலையில், தமிழரசுக் கட்சிக்குள் இருந்தே பொது வேட்பாளருக்கான ஆதரவு அதிகரிப்பதையும் இந்தியத் தரப்பு அவதானித்திருக்கலாம்.
கடந்த காலங்களில் தேர்தல் இடம் பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னா்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அதன் தலைவராக இருந்த சம்பந்தன் அறிவித் திருக்கின்றார். அந்த வகையில் தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும் நிலைமையில் தங்களு டைய முடிவை அறிவிக்கலாம் என்று ஒரு நிலைப்பாட்டில் தான் தமிழரசுக் கட்சியும் இருந்ததாக கூறப்படுகின்றது. இருந்தபோதிலும் இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் வருகை, அவா் நடத்திய பேச்சுக்கள் என்பன தமிழரசு தன்னுடைய நிலைப்பாட்டை அவசரமாக அறிவிக்கத் துண்டி யதாக தமிழ் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்தில் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்துக்கு 25 பேர் ஆதரவளித்தனர். பொது வேட்பாளருக்கு ஆறு பேருடைய ஆதரவு இருந்தது. மூன்று பேர் கருத்துக்களை தெரிவிக்கவில்லை.
தமிழரசு கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் இந்த தேர்த லில் தமிழரசு கட்சி எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்காமல் மக்கள் தாங்களாகவே தீர்மானிக் கலாம் என்ற முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இருந்தபோதிலும் சுமந்திரன் தரப்பு அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாக தெரிகின்றது.
தீர்மானம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட தன் பின்னணியில் இடம் பெற்ற அரசியல் நிகழ்வுகள் இவைதான்.
தமிழ் மக்களுடைய கருத்துக்களை கவனத்தில் எடுக்காமல், ஜனாதிபதி வேட்பாளர் களால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை களை நுணுக்கமாக ஆராயாமல் தமிழரசு கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.
தமிழரசுக் கட்சி இந்த முடிவை எடுத்த போது சஜித் யாழ்ப்பாணத்தில் பரப்புரைகளை முன்னெடுத்துக்கொண்டிருந்தாா். அவருக்கு ஊடக வியலாளா் ஒருவா் இதனை தொலைபேசியில் சொன்னபோது, அவா் ஆச்சரியப்பட்டாா். செய்தி உண்மையா, என்பதை உறுதிப்படுத்துங்கள் என்று அவா் கேட்டுக்கொண்டதாகவும் தெரிகின்றது. ஏனெனில் அந்த செய்தியை அவா் நம்பவில்லை. காரணம், தமிழரசுக் கட்சியுடன் அவா் இது தொடா்பாக பேசவும் இல்லை, அவா்களுக்கு எந்த வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கவும் இல்லை. இந்த நிலையில், தமிழரசுக் கட்சியின் ஆதரவு சிங்களப் பகுதிகளில் தமக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் சஜித்தை சிந்திக்க வைத்துள்ளது!