இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லையென அந்த கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரன் தொடர்பான விடயங்களை கட்சி தானாகவே கையாளுமென்றும், இதில் அநுரகுமார தரப்பு “குத்திமுறிய” வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழரசு கட்சியை மலினப்படுத்த நினைக்கும் தேசிய மக்கள் சக்தியின் கனவு ஒருபோதும் பலிக்காது எனத் தெரிவித்த அவர், அரசியல் இலாபத்திற்காகத் தமது கட்சியை விமர்சிப்பதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய யாழ்ப்பாண விஜயம் மற்றும் அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து சி.வி.கே. சிவஞானம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு ஏனைய கட்சிகளுக்கோ அல்லது மக்கள் பிரதிநிதிகளுக்கோ முறையான அழைப்புகள் விடுக்கப்படவில்லை.
அரச நிதியில் நடத்தப்பட்ட நிகழ்வுகளில் என்.பி.பி அல்லது ஜே.வி.பி கட்சியினர் மட்டுமே பங்கேற்றனர்.
இது அரச நிதியைப் பயன்படுத்தி ஒரு கட்சி தனது அரசியல் செல்வாக்கைக் காட்டும் முயற்சியாகும்.
எனவே, வடக்கிற்கு வந்து இவ்வாறான அரசியல் நாடகங்களை நடத்துவதை நிறுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதியைக் கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.



