தந்தை செல்வாவின் மூத்த மகள் கனடாவில் காலமானார்!

தந்தை செல்வா என்று போற்றப்பட்டவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவருமான தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன் தனது 97 ஆவது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார்.

அன்னார் இலங்கை அரசியல் பற்றிய விமர்சனத் துறையில்  போற்றப்பட்டவரும் கனடா நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தின் அரசியற்துறைப் பேராசிரியருமான அ.ஜெயரெத்தினம் வில்சனின் அன்புத் துணைவியாரும் கனேடியச் சட்டத்தரணி மல்லிகா, மைதிலி குமணன் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை (25 ஒக்டோபர் 2025) 11.00 மணி முதல் 2.00 மணி வரை Chapel Ridge – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 நடைபெறுகிறது.

இந்நிலையில், தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

சுசீலாவதியின் மறைவு தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றது.

சுசீலி , தனது தாயாருடன் இணைந்து, 1950கள் மற்றும் 60களில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கினார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சுசீலி பட்டப்படிப்பை முடித்தவர். அங்குதான் அவர் தனது கணவராகிய பேராசிரியர் அல்ஃபிரட் ஜெயரத்தினம் வில்சன் (Prof. A. J. Wilson) அவர்களைச் சந்தித்தார்.

பேராசிரியர் ஏ.ஜே. வில்சன், இலங்கையின் அரசியல் குறித்துப் பல நூல்களை எழுதிய புகழ் பெற்ற கல்விமானாக விளங்கியவர். பிற்காலத்தில் சுசீலி, ஐக்கிய இராச்சியத்தில் ஒரு தொழில்முறை நூலகராக (Professional Librarian) தகுதி பெற்று, தனது கணவரின் கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார்.

கனடாவில் குடியேறிய பின்னர், அவர் நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தில் (University of New Brunswick) நூலகராகப் பணியாற்றினார்.

சுசீலி வில்சன், கட்சிக்கும், குறிப்பாக தமிழ்மக்களின் மேம்பாட்டிற்கும் ஆற்றிய பங்களிப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த நன்றியுணர்வுடன் நினைவுகூருகிறது. அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது பிள்ளைகள் மல்லிகா, மைதிலி மற்றும் குமணனுக்கு கட்சி தனது ஆழ்ந்த அனுதாபங்கள் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.