இலங்கை தமிழரசுக் கட்சி தவறான கொள்கையைக் கைவிட்டு அந்தக் கட்சியை நிறுவிய தந்தை செல்வநாயகத்தின் கொள்கையின்படி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் நிச்சயமாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வர முடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி – அல்வாய் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் மிகத் தெளிவாகவும் ஆணித்தனமாகவும் தங்களது வாக்குகளை செலுத்தாது விட்டால் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கைவிட்டுவிட்டார்கள் என்று சந்தேகிக்கப்படுவது உறுதியானதாகிவிடும். ‘ஒரு முறை மாறிப் போடலாம். அதை நியாயப்படுத்தலாம். அடுத்ததடுத்த தேர்தல்களிலும் இவ்வாறு நடந்தால் அதனை நியாயப்படுத்த முடியாது’ என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இது சாதாரண உள்ளூராட்சிமன்ற தேர்தல் அல்ல. முகங்களுக்கு வாக்களிக்கும் இந்தத் தேர்தல்தான் தமிழ் மக்கள் தங்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் தேர்தலாக மாறியுள்ளது.
தமிழ்த் தேசத்தைப் பொறுத்தவரையில் இன்று இரு முக்கியமான பிரச்சினைகள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்று இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறல் மற்றது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுதலாகும்.
இந்த விடயங்களில், ஜே. வி. பி. என்ற தேசிய மக்கள் சக்திக்கும் இதற்கு முன்னர் ஆட்சி செய்த இனவாத கட்சிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாம் தமிழரசுக் கட்சிக்கு எதிரானவர்கள் அல்லர். தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் தான் தற்போது பிரச்சினையாக உள்ளது. தலைமைத்துவம் தவறாக நடப்பதால் ஒட்டுமொத்த கட்சியும் தவறான பாதையில் கொண்டு செல்லப்படுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் தமக்கு இல்லை என்றும் அவ்வாறு செய்யவும் முடியாதென்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.



