இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதி பதியாகப் பதவி ஏற்றுக்கொண்ட பின்னா் தன்னுடைய முதலாவது வெளிநாட்டுப் பயணமாக அநுரகுமார திசநாயக்க ஞாயிற்றுக்கிழமை புதுடில்லிக்குச் செல்கின்றாா். மூன்று தினங்கள் டில்லியில் தங்கியிருக்கும் காலத்தில் முக்கியமான பேச்சுக்களை அவா் நடத்தவுள்ளாா். இந்திய எதிா்ப்பையே தமது பிரதான கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டிருந்த ஜே.வி.பி.யின் தலை வரான அநுர இலங்கையின் தலைவா் என்ற முறையில் உத்தியோகபூா்வ விஜயமாக புதுடில்லி செல்வது அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெறு கின்றது.
தன்னுடைய வெளிவிவகாரக் கொள்கை யில் இந்தியாவுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என்பதை இதன் மூலமாக அநுர உணா்த்த முற்படுகிறாா். அவ்வாறு உணா்த்த வேண்டிய தேவையும் அவருக்குள்ளது. இந்தியா குறித்த தேசிய மக்கள் சக்தி அரசின் அணுகுமுறை எவ்வாறானதாக இருக்கப்போகிறது என்பதை டில்லியில் அவா் நடத்தும் பேச்சுக்கள் வெளிப்படுத்தும். மறுபுறம் இலங்கையின் புதிய அரசு குறித்த டில்லியின் அணுகுமுறை எவ்வாறா னதாக இருக்கப்போகின்றது என்பதையும் அடுத்து வரும் மூன்று தினங்களும் வெளிப்படுத்தும்.
சீனாவுக்கு சாா்பான ஒருவராகவே அநுர நோக்கப்படுகின்றாா். அதனைவிட, சீனாவும் அவ ருக்கான அழைப்பை விடுத்திருந்தது. ஜனவரியில் சீனாவுக்கான பயணத்தையும் அவா் மேற் கொள்ளவிருக்கிறாா். சீனாவை முந்திக்கொண்டு டில்லிக்கு அவா் செல்வதன் மூலமாக, இந்தியாவு க்கு தான் முன்னுரிமை கொடுப்பதாகக் காட்டிக் கொள்ள அநுர முற்படுகின்றாா். புதிதாக அதிகாரத் துக்கு வரும் தலைவா்கள் அனைவருமே இந்தியாவுக்கான விஜயத்தையே முதலில் மேற்கொள் வாா்கள். ரணில் விதிவிலக்காக இருந்தாா். அதற்கும் காரணம் இருந்தது.
“அண்டை நாடுகளுக்கு முதலிடம்” என்பதை தமது வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையாக இந்தியா கூறிக்கொள்கின்றது. இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கம்தான் இந்தியாவின் பொறுமைக்குச் சோதனையாகத்தான் இருக்கிறது. போதாதற்கு கொழும் பிலுள்ள சீனத் துாதுவா் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அடிக்கடி மேற்கொள்ளும் விஜயங்களும், அதன்போது அவா் சொல்லும் கருத்துக்க ளும் கூட இந்தியாவைச் சீண்டுவதாகவே அமைந் திருக்கின்றது.
இந்தியாவின் தெற்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இலங்கை, புதுடில்லிக்கு மிகப் பெரிய புவிசார் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது. இலங்கையின் உட்கட்டமைப்புத் திட்டங்களில் சீன முதலீடுகள், மற்றும் ஹம்பாந் தோட்டை துறைமுகத்தின் அபிவிருத்தி, கொழும்பு துறைமுக நகரம் உட்பட இலங்கையில் சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் மூலோபாய செல்வாக்கு என்பன இந்தியாவை நிம்மதி இழக்கச் செய்துள்ளன.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வ தற்கு இந்தியாவின் உதவிகள்தான் இலங்கைக்கு அதிகளவுக்கு உதவியது. நிதியுதவி மற்றும் கடன் வசதிகள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கல், முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள், என்பவற்றுடன், சா்வதேச அனுசரணையை உறுதி செய்வதிலும் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. குறிப்பாக, சர்வதேச நிதி நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து இந்தியா, இலங்கைக்கான நிதியுதவிகளை உறுதி செய்ய உதவியது.
2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக் கடியைத் தொடா்ந்து அரகலய மூலமாக தமது செல்வாக்கை ஜே.வி.பி. உயா்த்திக் கொண்டதையும், இலங்கை அரசியலில் ஒரு தீா்க்கமான சக்தியாக அது வளா்ந்துள்ளது என்பதையும் கடந்த வருடமே புதுடில்லி கணித்திருந்தது. அதனால்தான், இந்தியா வுக்கான விஜயம் ஒன்றுக்காக அநுர குழுவினரை டில்லி அழைத்திருந்தது.
இந்த அழைப்புக்கு மூன்று காரணங்கள் இருந்தன. இந்திய எதிர்ப்பாளர்களாக அடை யாளங்காணப்பட்ட ஜே.வி.பி. தலைமையுடன் நட்புறவை ஏற்படுத்த வேண்டிய தேவை டில்லிக்கு இருந்தது முதலாவது காரணம். அத்துடன் இந்தியா குறித்த ஜே.வி.பி.யின் அணுகுமுறை எவ்வாறுள்ளது என்பதை மதிப்பிடுவதற்கான ஒரு முயற்சியாகவும் இது அமைந்தது. இது இரண்டாவது காரணம். தமது பலத்தையும், முக்கியத்துவத்தையும் ஜே.வி.பி. தலைமைக்கு உணா்த்த வேண்டும் என்றும் இந்தியா விரும்பியிருக்கலாம்.
அநுர தலைமையிலான ஜே.வி.பி. தூதுக் குழு ஐந்து நாள் விஜயமாக மூன்று இந்திய நகரங்களுக்குச் சென்றிருந்தது. டில்லி, அகமதாபாத், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு அவா்கள் சென்றாா்கள். தொழில்நுட்ப, விஞ்ஞான, விவசாய மற்றும் கால்நடை வளா்ப்பு போன்றவற்றில் இந்தியா பெற்றுள்ள வளா்ச்சி அவா்களுக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உட்பட முக்கிய இந்திய தலைவர்களை அவா்கள் சந்தித்தார்.
பின்னர் மீண்டும், கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அஜித் டோவல் இலங்கை வந்த போது, அநுரவுடன் மற்றொரு சந்திப்பை நடத்தினார். அநுரவின் வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவை நோக்கி என்ன அணுகுமுறையை மேற்கொள்வாா் என்பதை அறிவது அந்த சந்திப்புக்களின் நோக்கமாக இருந்தது. இந்த விஜயங்களின் மூலமாக இந்தியாவுக்கும் ஜே.வி.பி.க்கும் இடையிலான உறவுகளில் முன்னேற்றங்களையும் அவதானிக்க முடிந்தது. இந்தியா குறித்த தமது வழமையான இறுக்கமான போக்கையும் ஜே.வி.பி. தளா்த்திக் கொண்டது. ஆனால், அநுர ஆட்சிக்கு வந்த பின்னா் இலங்கையை நோக்கிய சீனாவின் இராஜதந்திர செயற்பாடுகளும் தீவிரமடைந்திருக்கிறது. இல ங்கை எதிா்கொள்ளும் பொருளதார நெருக்கடிக்கான தீா்வில் தம்மால் முக்கிய பங்கை வழங்க முடியும் என்பதையும் சீனா உணா்த்துகின்றது. குறிப்பாக, உடனடியாக அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கு இலங்கைக்குள்ள இலகுவான வழி அதிகளவுக்கு உல்லாசப் பயணிகளை வர வளைப்பதுதான். அடுத்த வருடத்தில் தமது நாட்டிலிருந்து சுமாா் பல்லாயிரம் உல்லாசப் பயணிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கு சீனா திட்டமிடுவதாக ஒரு தகவல் உள்ளது. இது சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். இதனைவிட, இலங்கையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கும் சீனா உதவப் போகின்றது.
இந்தப் பின்னணியில்தான் அநுரவின் டில்லி விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த விஜயத்தின் போது, இருதரப்பு வர்த்தகம், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா வின் ஆதரவு, கடல்சார் பாதுகாப்பு போன்ற முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைவிட, இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்தும் பேசப்படலாம். இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணா்வு உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்படவிருக்கின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் பொருளாதார மீட்சி என்பதுதான் முதலாவதாக உள்ளது. இதற்காக இந்திய முதலீடு களை இலங்கை பெருமளவுக்கு எதிா்பாா்க்கின்றது. அவை தொடா்பாகவே ஜனாதிபதியின் கவனம் குவிந்திருக்கும் என்றும் எதிா்பாா்க்க முடியும்.
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள் வதில் டில்லி அக்கறையாக இருக்கும் அதேவேளை யில், வளா்ந்துவரும் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு என்பதுதான் அவா்களுடைய முக்கியமான பிரச்சினை. குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகள் சீனாவின் ஆதிக்கத்துக்குள் செல்வதை இந்தியா விரும்பாது.
இந்தப் பகுதிகளில் தமிழா்களுடைய கட்டுப்பாட்டில் பலமான ஒரு மாகாண சபை அதிகாரத்தில் இருப்பது தமக்கு சாதகமாக இருக்கும் என்பது டில்லியின் கருத்து. கொழும்பில் தமக்கு சாா்ப்பாக செயற்பட விரும்பாத அரசாங்கம் ஒன்று பதவியில் இருக்கும் நிலையில், வடக்கு – கிழக்கில் தாம் சொல்வதைக் கேட்கக்கூடிய நிா்வாகம் ஒன்று இருப்பதன் அவசியத்தை இந்தியா உணா்கிறது. இதற்காக, ஒன்று 13 ஆவது திருத்தம் தொடா்ந்தும் இருக்க வேண்டும் என்பதையும், மாகாண சபைகளுக்கான தோ்தலை விரைவாக நடத்த வேண்டும் என்பதையும் இந்தியா எதிா்பாா்க்கலாம்.
மாகாண சபைகள், 13 ஆவது திருத்தம் என்பவை இந்தியாவுக்கு முக்கியமானவை. அவை தொடா்பாக நட்புறவு அடிப்படையில் சில விடயங்களை அநுரவுக்கு இந்திரத் தரப்பு தெரியப்படுத்தும் என்றும் எதிா்பாா்க்கப்படுகின் றது. அதேவேளையில், உடனடியான சில பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் சாா்ந்த உதவி களை வழங்குவதற்கு இந்தியா முன்வரும். அதன் மூலம் அநுரவை தம்முடன் வைத்திருப்பதற்கு இந்தியத் தரப்பு முற்படும். இரு தரப்பினரும் தங்களுடைய நலன்களை இலக்காகக் கொண்டுதான் காய்களை நகா்த்துவாா்கள்.



