டியாகோகார்சியாவில் சிக்குண்டிருந்த இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்களை அதிகாரிகள் பிரிட்டனிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சின் நிதி உதவியுடன் அவர்கள் ஆறு மாதங்களிற்கு பிரிட்டனில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தான் பார்வையிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
பிரிட்டனிற்கான அவர்களின் பயணத்துடன் அவர்களது தலைவிதியை தீர்மானிப்பதற்காக கடல்கடந்து இடம்பெற்ற சட்டபோராட்டங்கள் முடிவிற்கு வந்துள்ளன என தெரிவித்துள்ள பிபிசி எனினும் அவர்களின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த 60 புகலிடக்கோரிக்கையாளர்கள் கடந்த மூன்று வருடகாலமாக இங்கிலாந்து அமெரிக்காவின் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவம் தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவில் சிக்குண்டிருந்தனர், தற்காலிக முகாமில் வசித்துவந்தனர்.
டியாகோ கார்சியாவிலிருந்து புகலிடக்கோரிக்கையை சமர்ப்பித்த முதல் புகலிடக்கோரிக்கையாளர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.